வழிபாட்டுத் தலம்
அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கங்கை கொண்ட சோழீஸ்வரம் |
| ஊர் | கூழம்பந்தல் |
| வட்டம் | செய்யாறு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கங்கை கொண்ட சோழீஸ்வரர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜேந்திர சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இந்திய கல்வெட்டு ஆண்டறிக்கைகளிலும், கல்வெட்டுத் தொகுதிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. கூழம்பந்தலில் அமைந்துள்ள இக்கோயில் இராஜேந்திரசோழனின் பத்தாம் ஆட்சியாண்டு முதல் இருபதாம் ஆட்சியாண்டு காலத்தில் அதாவது கி.பி. 1020 வாக்கில் கட்டப்பட்ட கோயிலாகும். இன்றிலிருந்து சரியாக 1000 ஆண்டு முன்னர் கட்டியகோயில். இக்கோயில் இராஜேந்திரசோழன் தனது குருவான ஈசான சிவ பண்டிதர் நினைவாக கட்டியதாக கல்வெட்டு குறிப்புகள் தெரிவிக்கின்றன. கூழமந்தல் என்பது கல்வெட்டுகளில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர் கோட்டத்து ஆக்கூர் ஊர் அடுத்த பாகூர் நாட்டு நகரம் விக்ரமசோழ கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்று குறிப்பிடுகிறது. கருவறை மற்றும் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில் சோழர்கள் மற்றும் விஜய நகர காலத்தைய கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுகளில் இக்கோயிலுக்கு நிலதானம் செய்த தகவலும் ஏரியில் நீர்பங்கீடு தொடர்பான தகவலும் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத் தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. முதலாம் இராஜேந்திர சோழன் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
காஞ்சிபுரத்திலிருந்து 18கி.மீ. தொலைவில் வந்தவாசி செல்லும் வழியில் உள்ள கூழம்பந்தல் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழன் என்னும் பட்டப்பெயர் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆன்மீகக் குருவான ஈசான சிவபண்டிதரால் “கங்கை கொண்ட சோழீஸ்வரம்“ என்னும் இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அமைந்துள்ள ஊர் கங்கை கொண்ட சோழபுரம் என்றும், இறைவன் பெயர் கங்கை கொண்ட சோழீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. தாங்குதளம் முதல் சிகரம் வரை முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி மூன்று தளங்களை உடைய விமானத்தைக் கொண்டுள்ளது. சதுர வடிவக் கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். தெற்கு வடக்காக நீண்டுள்ள அர்த்த மண்டபத்தில் சோழர்கால உருளைத் தூண்கள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தினைத் தொடர்ந்து முகமண்டபம் அமைந்துள்ளது. கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுற்றின் சுவர்களில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் இறைவடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்து கலைப்பாணியை பறைசாற்றுகின்றன. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இக்கோயில் மரபுச் சின்னமாக விளங்குகிறது. நித்திய பூஜைகள் கோயில் அர்ச்சகர்களால் நடத்தப் பெறுகின்றன. பிரதோஷம், சனிப்பிரதோஷம், மகாசிவராத்திரி முதலிய வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
|
|
அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. வேசரபாணியில் அமைந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். கிழக்கு பார்த்த கோயில் இரு தளமுடைய அழகிய ஸ்ரீவிமானமும் அதனையடுத்த அர்த்த மண்டபமும் அடுத்தாற்போல் முகமண்டபத்துடன் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சுற்றுச்சுவர் இல்லை. இரு தளமுடைய ஸ்ரீவிமானம் அழகிய வேலைப்பாடுகளுடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இரண்டாவது தளத்தில் நான்கு புறமும் கர்ணகூடுகளும், நான்கு மூலைகளில் சாலைகளும், மூன்றாவது தளத்தில் கர்ணகூடுகளும், நந்திகளும் இடம்பெற்றுள்ளன. கிரிவம் என்ற கழுத்துப்பகுதி அழகிய அரைகோள வடிவில் அமைந்துள்ளது. மேல்பகுதியில் கலசம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் முடிவு பெறதாத மண்டபம் அமைந்துள்ளது. இதன் தூண்கள் மட்டும் நிற்கவைக்கப்பட்டுள்ளன. 16 கால் மண்டபத்தில் நந்தி அமைந்துள்ளது. கருவறை முன்பு துவாரபாலர்கள் உள்ளனர். பத்மபந்த அதிட்டானமும் அதன் மேல் அமைந்த உபபீடத்தின் மேல் சதுர வடிவில் கருவறை அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சிவபுரம், சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில் |
| செல்லும் வழி | சென்னையிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லலாம். செங்கல்பட்டு இரயில் நிலையத்திலிருந்தும் காஞ்சிபுரம் செல்லலாம். அங்கிருந்து 18கி.மீ. பேருந்தில் வந்தவாசி வழியாக கூழம்பந்தல் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
அருள்மிகு கூழம்பந்தல் ஜகந்நாதீஸ்வரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | வந்தவாசி, கூழம்பந்தல் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | செங்கல்பட்டு |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | காஞ்சிபுரம் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | மதுரை கோ.சசிகலா |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 105 |
| பிடித்தவை | 0 |