வழிபாட்டுத் தலம்
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | மோகனபுரம், கோயில்குடி, திரும்பூர், மோகினியூர், மோகியூர், திருமோகூர், மோகனசேத்திரம், உத்துங்க வனம், மோகசேத்திரம் |
| ஊர் | திருமோகூர் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| தொலைபேசி | 0452 - 2423227, 2423444 |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | காளமேகப் பெருமாள் |
| தாயார் / அம்மன் பெயர் | மோகனவல்லி, மோகவல்லி, திருமேகூர் வல்லி, படிதாண்டாப் பத்தினி |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | பிரம்ம தீர்த்தம் |
| வழிபாடு | விச்வரூபம், பொங்கல் காலம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, சம்பாக்காலம் |
| திருவிழாக்கள் | வைகாசி மாதம் பிரம்மோற்சவம், ஆனி முப்பழ உற்சவம், ஆவணி திருப்பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தைலக்காப்பு, கார்த்திகை தீப விழா, கைசிக புராணம் படிக்கும் உற்சவம், மார்கழி பகற்பத்து-இராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, மாசி கஜேந்திர மோட்சம், பங்குனி திருக்கல்யாணம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-15-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், விஜயநகர, நாயக்கர் |
| கல்வெட்டு / செப்பேடு | திருமோகூர் கோயிலில் உள்ள பிற்காலப்பாண்டியர் விசயநகர வேந்தர், நாயக்கர்கால கல்வெட்டுகள் பல இக்கோயிலின் வரலாற்றை அறிய உதவுகின்றன. இக்கல்வெட்டுக்களில் இத்தலம் பாண்டிநாட்டில் தென்புறப்பு நாடு என்ற சிறிய உள்நாட்டுப் பிரிவில் இருந்த திருமோகூர் என்று குறிப்பிடப்படுகின்றது. திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயிலில் முழுமையான கல்வெட்டுக்களாகப் பதினொரு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருப்பணியின்போது இடம் மாற்றி வைத்துக் கட்டப்பட்ட அரைகுறையான பல துண்டுக் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. இவை பெரும்பாலும் தமிழ்மொழியில் பண்டைய தமிழ் எழுத்துக்களில் உள்ளன. வடமொழி சொற்கள் அவற்றில் வரும்போது அவை கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. பிற்காலப்பாண்டிய மன்னர்கள் காலத்தினைச் சார்ந்த ஐந்து கல்வெட்டுகளும் விசயநகரவேந்தர் காலத்து இரண்டு கல்வெட்டுகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன. 9 இவை இக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகள் பூசைகள் ஆகியவற்றிற்காக அளித்த கொடைகள் பற்றித் தெரிவிக்கின்றன. சில கல்வெட்டுகள் சிற்றாலயமும் கோவில் கட்டடங்கள் கட்டுவித்ததையும் கூறுகின்றன. இங்குள்ள பிற்காலப்பாண்டியரின் ஐந்து கல்வெட்டுகளில் நான்கு இக்கோயிலின் வெளிச்சுற்றுச் சுவரின் தென்புறம் உட்பக்கத்திலும், ஒன்று பள்ளிகொண்ட பெருமாள் கோயில் கருவறையின் தென்புறத்திலும் காணப்படுகின்றன. இவை கி.பி. 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251-1271) எம்மண்டலமும் கொண்டருளிய முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1268 - 1311) சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1304 - 1319) முதலிய மன்னர்கள் காலத்தைச் சார்ந்தவையாகும். இவை பாண்டியமன்னனின் அரச ஆணைகளாக விளங்குகின்றன. இக்கல்வெட்டுகளில் இக்கோயில் தென்பறப்புநாட்டு திருமோகூர் நின்றருளிய பரமசுவாமிகள் கோயில் என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள பெருமாள் காளமேகப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். கோமாறவர்மனான கோநேரின்மைகொண்டானின் கல்வெட்டு இக்கோயில் ஸ்ரீவைணவர்களும் திரிதண்டி சன்னியாசிகளும் அறியும் முறையில் காளமேகப் பெருமாளுக்குத் திருப்பணிக்காகத் திருப்பணிப்புறம் என்ற பெயரில் வரி நீக்கி திருவிடையாட்டமாகச் செங்குடிநாட்டுச் சிறுகுன்றத்தூரைத் தானமாக அளித்ததைத் தெரிவிக்கிறது. இவ்வூர் தற்போது விருதுநகருக்கு அருகில் செங்குன்றாபுரம் என்ற பெயரில் வழங்கி வருகிறது. திருபுவனச்சக்கரவர்த்திகள் கோநேரின்மைகொண்டான் என்று தொடங்கும் பிற்காலப்பாண்டியனின் கல்வெட்டு அவனது எட்டாவது ஆண்டு முதல் வெண்பில்நாட்டுப் பிரமதேயம் ஆலோடுபட்டான் பூமாரபவித்திரச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் திருமோகூர் பரமசுவாமிகள் கோயில் திருப்பணிக்குத் திருப்பணிப்புற திருவிடையாட்டமாக வரிகள் நீக்கி தானமாகத் தரப்பட்டதைத் தெரிவிக்கிறது. இவ்வூரிலிருந்து வரும் கடமை, அந்தராயம், பொன்வரி, வினியோகம், வாசல்பேறு, வெட்டிப்பாட்டம், பஞ்சுபீவி, தட்டார்பாட்டம், இடைவரி, ஏர்வரி, இனவரி, ஏரிமீன்பாட்டம் மற்றும் எப்பேர்பட்ட வரிகளும் நீக்கி தானம் அளிக்கப்பட்டது. இவ்வூரின் நான்கெல்லைகளிலும் பெருமாளின் சக்கரம் பொறித்த திருவாழிக்கற்கள் எல்லைக்கற்களாக நடப்பட்டன.திரிபுவனச்சக்கரவர்த்திகள் கோநேரின்மைகொண்டான் என்று தொடங்கும் மற்றொரு பிற்காலப்பாண்டியரின் கல்வெட்டு திருமோகூர் பரமசுவாமிகள் கோயிலின் திருப்பணிக்குத் திருப்பணிப்புற திருவிடையாட்டமாகப் பாகனூர் கூற்றத்தில் உள்ள தேனூர், திருவேடகம் என்ற ஊர்களிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட வீரநாராயணச் சதுர்வேதிமங்கலமும் சாலை என்ற ஊரும் தரப்பட்டு அரச ஆணை வழங்கப்பட்டதை திருமோகூர்கோயில் திருப்பதி ஸ்ரீவைணவர்களுக்கும் திரிதண்டி சன்னயாசிகளுக்கும் தெரிவிக்கிறது. இவற்றிற்கு வாங்கும் வரிகள் நீக்கப்பட்டு நான்கு எல்லைகளிலும் திருவாழிகற்கள் நடப்பட்டன. மாறவர்மன் எம்மண்டலமுங் கொண்டருளிய குலசேகரபாண்டியனின் நாற்பதாவது ஆட்சியாண்டு (கி.பி.1308) கல்வெட்டு அரிய செய்தியைத் தருகின்றது. அக்காலத்தில் திருமோகூரைச் சார்ந்த துங்கவனத்தில் பிரம்மதீர்த்தக்கரையில் இருந்த வேதநாயகர் கோயில் சிதைவுற்றுக் கிடந்தது. அதனை அரசனின் பெயரால் சுந்தரபாண்டியன் சோழக்கோனார் என்ற அதிகாரி திருத்திக்கட்டி வேதநாதரை எழுந்தருளுவித்தார் என்று இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. வேதநாதர்கோயில் திருமோகூரைச் சார்ந்திருந்த துங்கவனத்தில் இருந்தது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. மேலும் இத்துங்கவனத்தினைச் சார்ந்த பிரம்மதீர்த்தக் கரையில் (ஆனைமலையை ஒட்டியுள்ள கொடிக்குளம் பகுதியில்) பெருமாள் வேதநாதருக்குக் கோயில் எடுப்பிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. இன்றும் கொடிக்குளம் பெருமாள் கோவில் திருமோகூர்க் கோயிலைச் சார்ந்த நிர்வாகத்தில் விளங்கி வருகிறது. இக்கோயில் வேதநாதருக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட நித்தநிவந்தங்களுக்காகவும் திருநந்தவனம் செய்கின்ற ஸ்ரீவைணவர்களுக்கு கொற்றிலக்கையாகவும் (கூலியாள்) தென்பறப்பு நாட்டு பன்னாட்டான் கோட்டை, முக்குளம் முதலிய ஊர்கள் வரி நீக்கி இறையிலியாகத் திருவிடையாட்டமாக அளிக்கப்பட்டன. காளமேகப்பெருமாள் கோயிலின் வெளித்திருச்சுற்றின் தென்மேற்கு மூலையிலுள்ள சடையவர்மன் சுந்தரபாண்டியனின் எட்டாவது ஆட்சியாண்டு கல்வெட்டு அப்பகுதியில் முன்பு இருந்த திருவாழி ஆழ்வார்கோவிலை காளமேகம் என்று பெயர் கொண்ட காங்கேயராயர் என்ற அரசனது அதிகாரி எடுப்பித்ததைத் தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு வாசகம் முழுமையும் அறியமுடியாமல் பொறிந்துபோய் உள்ளது. ஆனால் திருவாழி ஆழ்வார் கோயிலுக்கு இப்பகுதியில் இருந்த படைப்பற்று ஊர் ஒன்று தானமாக வரிநீக்கித் தரப்பட்டிருப்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. பள்ளிகொண்ட பெருமாள் சன்னதிக்குப் பின்புறமுள்ள பாண்டியர் கல்வெட்டு பெருமாளே ஆணை வழங்கி அக்கோயிலில் பணிசெய்யும் பகவர்களுக்கும் கோவணர்களுக்கும் தானம் வழங்கிச் சிறப்பித்ததாகக் கூறுகிறது. பெருமாள் மார்கழிக் கல்யாணத்திற்குப் புறப்படுகின்ற நாளிலும் கல்யாணங்களில் வேட்டைக்குப் புறப்படுகின்றபோதும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து பெருமாளுக்குப் படைக்கப்பட்ட திருவமுதத்தினைப் பெற்றுக் கொள்ள நிவந்தம் அளிக்கப்பட்டது. அதற்காக குந்தவைச்சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் தானமாக வழங்கப்பட்டது. அவ்வூரிலிருந்து வரும் வருமானத்தை அவ்வூர் பிராமணர்கள் எம்பெருமான் வீட்டுக்காரியங்கள் செய்கின்றபகவர்களுக்கும் கோவணவர் களுக்கும் நிவந்தமாக அளிக்க வேண்டும் என்று பெருமானால் ஆணை பிறப்பிக்கப்பட்டதை இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டுகள் தவிர இத்திருக்கோயில் திருச்சுற்றுச் சுவர்களில் பிற்காலப் பாண்டியர்காலத் துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று நாச்சியார் பகவதியாழ்வாருக்கு "குலசேகரன் திருநந்தவனம்" என்ற நந்தவனம் ஒன்று செய்விக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கி.பி.16 - ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் விசயநகரவேந்தராகத் திகழ்ந்தவர் வீரப்பிரதாப சதாசிவராயர் ஆவார். இவரது காலத்தில் விசயநகர வேந்தரின் தட்சிண மண்டலாதிபதியாக இராமராச விட்டலதேவ மகாராயர் விளங்கினார். அவர்காலத்தில் வசவணநாயக்கரும் அவர் மகன் திம்மப்பநாயக்கரும் விட்டலதேவ மகாராயரின் அதிகாரிகளாகத் திகழ்ந்தனர். இவர்கள் தங்கள் காலத்தில் மதுரைப் பகுதியில் பல கோயில்களைத் திருத்திக்கட்டி அறக்கொடைகளும் அளித்திருக்கின்றனர். வஸவணர்நாயகத்தில் திம்மப்பநாயகருக்கு அளித்த அரசன் திருமுகப்படி திருமோகூர் காளமேகப் பெருமாளுக்கும் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் மதுரை மண்டலச் சீர்மையிலுள்ள களவேள்விநாட்டைச் சார்ந்த மானகுழியும் அதனைச் சார்ந்த கிராமப் பகுதிகளும் கி.பி. 1551ஆம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ளன. இதனைத் தெரிவிக்கும் கி.பி. 1551-ஆம் ஆண்டு இரண்டு கல்வெட்டுகள் திருமோகூர் கோயிலில் காளமேகப்பெருமாள் சன்னதியில் மகாமண்டபத் தெற்குப்பகுதியில் அதிட்டானப்படையில் காணப்படுகின்றன. ஒரே செய்தியைக் கூறும் இவ்விருகல்வெட்டுகளில் ஒன்று அரசனது ஆணையாக நிலக்கொடை அளித்ததைத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு அதே நிலக்கொடையை காளமேகப் பெருமாளே வழங்கிய ஆண்டவனது ஆணையாக உள்ளது. இக்கல்வெட்டு காளமேகப்பெருமாள் கொண்டகோயிலில் சதுர்முகப்பிடத்தில் அவரது தேவியரோடு வீற்றிருந்தபோது அவரது கோயிலில் பணிசெய்யும் குடவர், கோவர், பூவிடுவார், தளையிடுவார், அணுக்கர், கணக்கர், காரியத்துக்குக் கடவார் ஆகிய அனைவரும் பெருமாளிடத்து முறையிடவே அதன்படி திம்மப்பநாயக்கர் அளித்த திருடையாட்டமாகக் கிராமங்கள் பெருமாளாலும் உறுதி செய்யப்பட்டு ஆணை வழங்கியதாகக் கூறுகிறது. கி.பி.1551-ஆம் ஆண்டைச் சார்ந்த இவ்விரு கல்வெட்டுகளும் காளமேகப்பெருமாளுக்கும் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் நித்திய நைவேந்தியங்களுக்காகவும் திருவாராதனைகளுக்காகவும் மானகுழி கிராமப்பகுதிகள் திருவிடையாட்டமாக அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. இதன்படி இக்கிராமப் பகுதிகளிலிருந்து வரும் கலிபொன் முப்பத்தாறும் எட்டுப்படி மரக்காலால் நெல் நானுற்றைம்பதின்கலமும் திருமோகூர் கோயிலுக்குத் தானமாகத் தரப்பட்டன. திம்மப்பநாயக்கர் காலை சந்தியில் தத்தியோதன (தயிரமுது) அவசரத்துக்கு மேலே இரண்டாம் அவசரமாக தம் பெயரால் கட்டளையிட்டுச் செய்தார். இந்த அவசரத்துக்கு நாள் ஒன்றுக்கு அவசரம் ஒன்றுக்கு தூணிப்பதக்கும் அமுதுபடிக்கு கலனேமுக்குறுணி நெல்லும் அளிக்கப்பட்டது. நைவேத்திய கட்டளைக்கு தயிரமுது, நெய்யமுது, ஸம்பாரம், கறியமுது, எரிதுரும்பு திருப்பனாஞ்சம்சமைப்பார்கூலி மற்றும் எப்பேர்ப்பட்ட செலவுகளுக்கும் இத்தானம் தரப்பட்டது. மேலும் காணியாட்சியாக அமுதுபடிச்சோற்றில் பிரசாதமும் திருமோகூர் மாடத் திருவீதியில் மனையும் கொடுக்கப்பட்டதைத் திம்மப்பநாயக்கர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திருமோகூர் கோயிலின் பெரியமதிலின் தென்கிழக்கு மூலையில் வெளிப்புறச் சுவரில் கி.பி.1700 - ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று உள்ளது. இது மதுரைநாயக்க மன்னரின் தளவாய் நரசப்பய்யன் குமாரர் வேங்கப்பய்யன் தனது தந்தையின் அனுமதியின் பேரில் வெளிப்புறத் திருமதில் கட்டித் திருப்பணி செய்ததைக் கூறுகிறது. இத்திருப்பணியை அவருடன் பழனியப்பன் என்பவரும் சேர்ந்து செய்துள்ளார். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | மகாமண்டபத்தின் உட்புறத்தினை விசயநகர வேந்தர்காலப் பாணியில் உருவான மிகப்பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. தூண்களின் மீது அமர்ந்திருக்கும் சிம்மங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. இம்மண்டபத்தின் விதானத்திற்கு கீழே தூண்களுக்கு மேலே உள்ள சன்னல் சட்டங்களில் சிற்றுருவக் காட்சிகள் காணப்படுகின்றன. திருமாலின் பல அவதார நிலைகளையும் திருவிளையாடல்களையும் காட்டும் சிறு சிற்பங்கள் இங்கு உள்ளன. மகாமண்டபத்தினை அடுத்துள்ள முன்மண்டபமாக விளங்கும் கருடமண்டபத்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டு விசயநகரவேந்தர் காலத்துப் பெருந்தூண்களும் அவற்றில் ஆள் உயர அளவில் பெருஞ்சிற்பங்களும் காணப்படுகின்றன. சிற்பங்கள் மிகுந்த வேலைப்பாடும் அலங்காரமும் நிறைந்த உயர்ந்த கலைத்திறன் வாய்ந்த விசயநகரவேந்தர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. கருடமண்டபத்தின் தென்புறத் தூண் ஒன்றில் வடக்குநோக்கிய நிலையில் மன்மதனின் உருவம் காணப்படுகிறது. இடக்கரத்தில் கரும்பு வில்லும் வலக்கரத்தில் மலர்கணையும் ஏந்தி நின்றநிலையில் மன்மதன் காட்சியளிக்கின்றான். இவ்வுருவத்தின் எதிரே வடக்கிலுள்ள தூணில் மன்மதனை நோக்கி அன்னப்பறவையில் அமர்ந்த நிலையில் இரதிதேவி காட்சியளிக்கின்றாள். தலையில் வலபுறமாக அலங்காரக் கொண்டையிட்டு, கண்ணைக்கவரும் அழகுமிக்க உடற்கட்டுடன், வலக்கரத்தில் மலரைக் கணையாக ஏந்தி அன்னத்தின் மீது விளங்குகின்றாள். இராமர்-சீதை, இலக்குவன், சிற்பங்கள் மண்டபத்தின் கீழ்புறமுள்ள தூண்களில் காளமேகப் பெருமாளை நோக்கி காணப்படுகின்றன. வலப்புறம் நிற்கும் சீதையை தன் வலக்கரத்தால் அணைத்துக் கொண்டு இடக்கரத்தில் வில்லேந்தி கம்பீரமாக நின்றநிலையில் இராமபிரானின் உருவம் திகழ்கிறது. அலைஅலையான மடிப்புடன் காட்டப்பட்டுள்ள மெல்லிய சீதாப் பிராட்டியின் இடை ஆடையும் ஆபரணங்களும் அலங்காரமும் அவளது எழிற்கோலத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. சீத்தாராமனின் வடக்கேயுள்ள தூணில் வில்லை இடக்கரத்தில் பற்றி உறங்காவில்லியான இலக்குவன் நின்ற கோலத்தில் காணப்படுகின்றான். கருடமண்டபத்தின் நடுவே பெருமாளை வணங்கி நின்ற நிலையில் பெரிய திருவடியான கருடனின் உருவம் திகழ்கிறது. பிற்காலப்பாண்டியர் காலத்தினைச் சார்ந்த பழமையான சக்கரத்தாழ்வார் கற்சிற்பம் மட்டும் இரண்டாம் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் காட்சியளிக்கிறது. சதுரமான பலகைக்கல் ஒன்றில் ஒருபுறம் சுழற்சி நிலையில் பதினாறு கரங்களுடன் அவற்றில் பதினாறு வகை ஆயுதங்களை ஏந்தி சக்கரத்தாழ்வார் உருவம் திகழ்கிறது. இவ்வுருவத்தினைச் சுற்றி எண்திசைக் காவலர்கள் மற்றும் பல தெய்வங்களின் சிற்றுருவங்கள் காணப்படுகின்றன. சக்கரத்தாழ்வார் சிற்பமுள்ள பலகைக் கல்லின் பின்புறம் யோக நிலையில் அமர்ந்துள்ள நிலையில் உள்ள நரசிம்மரின் திருவுருவம் காட்சியளிக்கின்றது. இதேபோன்று ஆனால் சக்கரமும் மந்திர எழுத்துக்களும் உள்ள பிற்காலச் சக்கரத்தாழ்வாரின் உருவம் முதல் திருச்சுற்றில் தற்போது வழிபாட்டில் விளங்கிவரும் சக்கரத்தாழ்வார் கோயிலில் காணப்படுகிறது. திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்து அறக்கொடைகளை மருதுபாண்டியர் அளித்துள்ளனர். இவர்களது ஆள்வுயர அழகிய உருவச் சிற்பங்கள் காளமேகப்பெருமாள் கோவில் கம்பத்தடி மண்டபத்து தூண்களில் பெருமாளை நோக்கி வணங்கி நின்ற நிலையில் காட்சியளிக்கின்றன. இவ்வுருவங்களுக்குப் பக்கவாட்டில் இவர்களது அலுவலர்களது உருவங்களும் உள்ளன. பள்ளிகொண்ட பெருமாள் தனிக் கோயில் கருவறையில் மேற்கே தலைவைத்து, கிழக்கே பாதங்களை நீட்டி, வடக்கே பின்புறம் காட்டி, தெற்கு நோக்கி முகம் சாய்த்து, கிடந்த கோலத்தில் திருமால் பேருருவ வடிவிலே காட்சி தருகின்றார். கல்லாலான இத்திருமேனி கி.பி.13 ஆம் நூற்றாண்டில் செய்விக்கப்பட்டதாகும். நீண்ட திண்டின் மீது நீள்முடியை வைத்து வலக்கரத்தினைத் தலைக்கு மேலே நீட்டி இடக்கரத்தினை உடம்பின் மீது வைத்து கிடந்த கோலத்தில் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனி திகழ்கிறது. பெருமாளின்தலைக்கு மேலே ஐந்தலை அரவுக்குடை பிடித்த ஆதிசேடனின் பாம்பணை மீது பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் வடிக்கப்பட்டுள்ளார். பாம்பணை மூன்று மடிப்பாக விளங்குகிறது. அறிதுயிலில் கிடக்கும் பெருமாள் கண்திறந்தால் காணும் நிலையில் திருமகள், பூமகள் இருவரும் பள்ளிகொண்ட பெருமாளின் நீட்டிய பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறம் நீட்டி அமர்ந்துள்ளனர். தங்கள் கரங்கள் இரண்டையும் பெருமானை நோக்கி நீட்டி கால்களுக்கு அருகில் வைத்து இறைஞ்சும் நிலையில் (பிரார்த்திக்கும் நிலை) காட்சியளிக்கின்றனர். இந்தியாவில் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் பாம்பணையில் பள்ளிகொண்ட பெருமானின் பழமையான உருவங்கள் உள்ளன. 8 இவற்றில் திருமோகூரில் இருப்பது போல் தேவியர் இருவரும் திருமாலைப் பிரார்த்திக்கும் நிலையில் உள்ள உருவங்கள் இல்லை. பொதுவாக இவற்றில் திருமகள் திருமாலின் பாதத்திற்கு அருகில் அமர்ந்து அவரது பாதங்களை மடியில் வைத்துக் கையால் வருடும் நிலையில் காட்சியளிப்பாள். இந்நிலைக்கு மாறாக திருமோகூரில் எங்கும் இல்லாத திருக்கோலத்தில் திருமகள் மட்டுமல்லாமல் பூமகளும் அமர்ந்து பள்ளிகொண்ட பெருமாளைப் பிரார்த்திக்கும் நிலையில் காட்சியளிக்கின்றாள். எம்பெருமானிடத்து அடியவரின் குறைகளைத் தாயாரின் மூலமாக எடுத்துக்கூறித் தீர்க்கும் ஸ்ரீவைணவத் தத்துவத்தின் சிறப்பை விளக்கும் திருக்கோலமாக திருமோகூர் பள்ளிகொண்ட பெருமாளின் திருக்கோலம் திகழ்கிறது. இவரை ராப்திநாதர் (பாற்கடலில் பள்ளி கொண்ட நாதர்) என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர். இவரது சன்னதியின் பின்புறம் கோவிலுக்கு வடபுறம் உள்ள தாமரைக்குளம் இக்கோயிலின் திருக்குளமாக ராப்தி புஷ்கரணி என்று பெயர் பெற்று விளங்கி வருகிறது. பாற்கடல் கடையும் போது அதிலிருந்து தோன்றிய துளி ஒன்று இதில் தெரித்து விழுந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பள்ளிகொண்ட பெருமாளின் கருவறைக்கு முன்பாக யானைகள் இழுத்துச் செல்லும் நிலையில், மேற்கிலும் தெற்கிலும் அமைந்த வாயிற்படிக்கட்டுகளைக் கொண்ட பெரியமண்டபம் ஒன்று நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் தெற்கு வாயிலில் உள்ள தூண்களில் இதனைக் கட்டியவரின் உருவச் சிலைகள் சிறிய அளவில் செய்விக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தினை அறுபதிற்கும் மேற்பட்ட தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்களில் பல அழகிய திருவுருவங்களும் ஆடல்காட்சிகளும் விலங்கின் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. சங்க இலக்கியப் பாடலிலும், தாலமியின் குறிப்புகளிலும் திருமோகூர் சுட்டப்பட்டுள்ளது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மணவாளமாமுனி ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். 108- வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். |
|
சுருக்கம்
மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் (நரசிங்கத்திலிருந்து 6 கி.மீ) திருமோகூர் உள்ளது. இங்கு காளமேகப் பெருமாள் கோவில் உள்ளது. பாண்டியரின் தலைநகரமாகத் திகழ்ந்த மதுரை மாநகருக்கு வடக்கே ஆனைமலைக்குக் கிழக்கே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வைணவத் தலம் திருமோகூர். மோகனபுரம், கோயில்குடி, திரும்பூர் என்ற பல பெயர்கள் இதற்கு உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத்தில் பழையன் என்ற சிற்றரசனுக்கு உரிய ஊராக இது விளங்கியது என்று கருதுகின்றனர். அதில் சிறப்புமிக்க அறங்கூறும் நீதிசபை ஒன்று இருந்தது. கோசர்கள் என்ற வீரர்கள் அங்கு இருந்தனர். மோரியர்படை மோகூரைத் தாக்கிய போது பழையனுக்கு துணை புரிவதாக உறுதிமொழி அளித்திருந்த கோசர்கள் மோகூர் அவையகத்து ஆலமரத்தடியில் தோன்றி மோரியரை வென்று துரத்தினர். இவ்வூரில் குறுநிலமன்னன் பழையன் காத்து நின்ற காவல்மரமான வேம்பை சேரன் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தினான் என்று சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பதிற்றுப்பத்து, அகநானூறு முதலிய இலக்கியங்களில் மோகூர் பற்றிய செய்திகள் வருகின்றன. சிலப்பதிகாரத்திலும் மோகூர் பழையனின் காவல்மரமான வேம்பினைச் செங்குட்டுவன் வெட்டியழித்த செய்தி வருகின்றது. சங்ககாலத்து தமிழ்நாட்டு கரங்களைப் பற்றிக் குறிப்பிடும் தாலமி என்ற அலெக்சாண்டிரியாவின் வெளிநாட்டு ஆசிரியர் (கி.பி.140) தமிழ்நாட்டின் உள்நாட்டு நகரங்களில் ஒன்றாக மோகூரைக் குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றார். இதனால் மோகூர் என்று பெயர்பெற்று விளங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம் சங்ககாலத்தில் தமிழ் மன்னர் ஆட்சியில் இருந்திருக்கிறது என்று கூறலாம். ஆனால் சங்ககாலத்தில் குறுநிலமன்னன் பழையன் காத்து நின்ற மோகூரே தற்போது வழங்கும் திருமோகூரா என்பதை வருங்காலத்தில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகள் தான் உறுதிப்படுத்த வேண்டும். திருமோகூர் சங்ககாலத்திற்குப் பின்னர் வைணவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்ற சமயத்தலமாக மாறியுள்ளது. கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பாசுரங்களில் இடம் பெற்றுள்ளது. இத்தலத்தில் திருமால் மோகினி அவதாரம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. நூற்றெட்டு திவ்யதேசங்களில் ஒன்றாகப் பாண்டிநாட்டு திவ்ய தேசமாக விளங்கி வருகிறது இத்திருத்தலத்திலுள்ள காளமேகப்பெருமாள் கோயிலை ஆழ்வார்கள் மட்டுமன்றி விசயநகரவேந்தர், நாயக்கர் காலங்களில் தோன்றிய ஆசாரியர்களும் புலவர்களும் பாடிப்பரவியுள்ளர் வடமொழிப் புராணங்களில் இத்தலத்தின் வரலாறு இடம் பெற்றுள்ளது. வைணவ ஆசாரியர்களான மணவாளமாமுனிகள் இயற்றிய திருவாய்மொழி நூற்றந்தாதியிலும் அழகிய மணவாளப் பெருமாள் இயற்றிய ஆசார்யஹிருதயம் என்ற வடமொழிச் சூத்திரத்திலும் திருமோகூர்கோயில் பெருமாளின் சிறப்பு கூறப்படுகிறது. மேலும் சிலேடைக் கவிஞர் காளமேகமும் தனிப்பாடல் ஒன்றின் மூலம் திருமோகூர் காளமேகத்தின் அருஞ்செயல்களைத் தொகுத்துப் பாடியுள்ளார். கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து அஷ்டபிரபந்தம் என்னும் எட்டுவகைச் சிற்றிலக்கியங்களை இயற்றிய இருமொழிப்புலமைபடைத்த அழகிய மணவாளதாசர் என்ற பெயர் கொண்ட பெரும்புலவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஆவார். வைணவப் பெரியாரான இவரும் தாம் இயற்றிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி திருமோகூர் திருத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருவாய்மொழியில் ‘தாளதாமரை' என்று தொடங்கும் பத்துப்பாடல்கள் மூலமாக நம்மாழ்வார் திருமோகூர் திருத்தலத்தின் பெருமையைப் பாடிப் பரவியுள்ளார். திருமோகூர் ஊரின் சிறப்பையும் அங்கு கொண்டகோயிலில் குடி கொண்டிருக்கும் பெருமாளின் அழகு, அருஞ்செயல், நற்கருணை ஆகியவற்றையும் எடுத்து மொழிகின்றார். வேறு கதி இல்லையென்று அவன் அடியினைச் சரண் அடைந்தவர்க்கு எல்லாமளிக்கும் இன்பனாகத் திகழ்வான் என்று கூறுகின்றார். திருமோகூர், அவர் காலத்தில் இருந்த நிலையினை அவர் பாடல்கள் நன்கு நமக்குக் காட்டுகின்றன. நான்கு வேதம் வல்ல நான்மறை வாணர்கள் இவ்வூரில் வாழ்ந்தார்கள். இவ்வூர் நீர்வளமும் நிலவளமும் நிறைந்ததாகத் திகழ்ந்தது. தாமரைத் தடாகமும் எட்டுத் திசைகளிலும் கரும்பும் செந்நெல்லும் விளைந்து கவின்பெரு வனப்புடன் உயர்ந்த சோலைகள், தன்பனண வயல்கள் சூழ்ந்து விளங்கிற்று என்று நம்மாழ்வார் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன. "தாளதாமரை தடம்அணிவயல் திருமோகூர்” "நலங்கொள் நான்மறைவாணர் வாழ் திருமோகூர்” "எண்திசையும் ஈன்கரும்போடு பெருஞ்செந்நெல்விளைய” "வாய்த்த தண்பணை வயல் சூழ் திருமோகூர்” "உயர்கொள்சோலை ஒண்தடமணியொளி திருமோகூர்” இத்தகு சிறப்புவாய்ந்த திருமோகூரில் குடியிருக்கும் பெருமாளின் கோயிலை வலம்வந்து நம்மாழ்வாரின் மனம் களிப்பால் கூத்தாடியது. திருமோகூரைச் சுற்றி வலம் வந்தாலே நம்பிறவித் துயர் அழியும் எனவும் தமது பாடல்களில் ஆழ்வார் சுட்டிக் காட்டுகின்றார். நம்மாழ்வாரை அடுத்து திருமங்கையாழ்வாரும் இத்திருத்தலத்தை அழகர்கோயிலோடு இணைத்து தமது சிறிய திருமடலில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். "சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்" என்கிறார். தமிழ்நாட்டில் நாயக்கர் காலத்தில் இரண்டு பொருள்பட சிலேடைக் கவிபாடுவதிலும் வசைப்பாடல் பாடுவதிலும் கொடிகட்டிப் பறந்த கவிஞர் காளமேகம் ஆவார். அவரது வாக்கிலும் திருமோகூர் காளமேகப் பெருமாள் வாழ்த்தப்பட்டுள்ளார். திருமோகூர்ப் பெருமாள் இரணியனை (பொன்னன்) அவனது மகனுக்காக கூரிய நகத்தால் வயிற்றைக் கீறி அழித்தார். இராவணனை (வாள் அரக்கன்) அமரர்க்காக அம்பால் தலையைக் கொய்தார். கெளரவர்களைப் (நூற்றுவரை) பாண்டவர்களுக்காகப் பாரதப்போரில் சங்கொலியால் போரில் வீழ்த்தினார். பாரிசாதச்சோலையைச் சத்தியபாமாவின் காதல் நட்பிற்காக கருடனால் கொண்டு வந்தார். வில்லை சீதைக்காக தன்தோள் வலியால் இறுத்தார். கத்தும்கடலை வழிக்காக வானரங்களைக் கொண்டு அடைந்தார் என்று காளமேகம் பாடியுள்ளார். தனது ஒரே பாடலில் திருமாலின் ஆறு அருட்செயல்களை அடக்கிக் காட்டியுள்ளார். நரசிம்ம அவதாரம், இராம அவதாரம், கண்ணன் அவதாரம் எடுத்து பெருமாள் செய்த செயல்கள் காளமேகப் புலவரால் திருமோகூர் பெருமாளின் பெருமைகளாக அவரது தனிப்பாடல் ஒன்றில் எடுத்துக் கூறப்படுகின்றது. “பொன்னனை வாள்அரக்கனை நூற்றுவரைக் காவைப் பொருசிலையைக் கனைகடலைப் பொன்னன் ஈன்ற நன்மகற்காய்ச் சுரர்க்காய் ஐவருக்காய்க் காதல் நட்பினுக்காய்ச் சானகிக்காய் நடவைக்காக மன்னுகிரால் வடிக்கணையால் வளையால் புள்ளால் வயங்குதோள் வலியால் வானரங்களாலும் முன்னுடல் கீறிச் சிரங்கொண்டு அமரில் முதலொடுங் கொண்(டு) இறுத்தடைத்தான் மோகூரானே.“இக்கோவிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கைச் சீமையை ஆட்சிபுரிந்த மருது சகோதரர்களின் திருப்பணியாகும். தமிழ் மக்களின் சிற்ப, கட்டடத் திறனுக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சிறந்த வைணவத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும், இதன் கொடுங்கைகளும், இதர சிற்ப வேலைப்பாடுகளும் சிறப்புமிக்கவை. தாயார் மோகனவல்லி எனப்படுகிறார். இக்கோவிலின் கம்பத்தடி மண்டபம் ஒரு சிற்பக் கருவூலமாக உள்ளது. இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது சகோதரர்களின் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.
|
|
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | பாண்டியர், விசயநகரவேந்தர், மதுரை நாயக்கர், மருதுபாண்டியர் காலங்களில் தோற்றுவிக்கப்பட்ட விமானம், மண்டபங்கள், கோபுரம், திருச்சுற்றுமாளிகை, திருச்சுற்றுச்சுவர்கள், திருக்குளம் ஆகியவற்றுடன் திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில் விளங்குகிறது. படமொழிப்புராணங்கள், ஆழ்வார்பாசுரங்கள், ஆசாரியர், பெரும்புலவர்கள் பாடல்கள், கல்வெட்டுகள், கட்டடங்கள், கோயிலின் வரலாற்றை அறிய பெருந்துணைபுரிகின்றன. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் பெருமாள் காளமேகப் பெருமாள் என்றும் தாயார் மோகனவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகின்றனர். பள்ளிகொண்ட பெருமாளுக்கும் இங்கு தனிக்கோயில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. ஆண்டாளுக்கும் இங்கு சன்னதி உள்ளது. சக்கரத்தாழ்வார், அனுமார், நவநீதிகிருஷ்ணன், ஆகியோருக்கும் தனிச் சிற்றாலயங்கள் உள்ளன. காளமேகப்பெருமாள் கோயில் கருவறையைச் சுற்றி இரண்டு பெரிய திருச்சுற்று மதில்களைக் கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலின் முதல்சுற்று, இரண்டாம்சுற்று கிழக்கு கோயில்களில் சிறிய கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் நுழைவாயிலில் காணப்படும் கோபுரம் அண்மைக்காலத்தில் எடுக்கப்பட்டதாகும். அதனை அடுத்துக்காணப்படும் முதல்சுற்றுக் கோபுரம் விசயநகர வேந்தர்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதல் சுற்று மதிலும் இரண்டாம் திருச்சுற்று மதிலும் பிற்காலப்பாண்டியர் காலத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டுள்ளன. அவை விசய நகர வேந்தர், நாயக்கர்காலங்களில் கோட்டைச்சுவர் போன்று மிகவும் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. வெளிச்சுற்றுச் சுவரில் காணப்படும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளுக்கு மேலே உள்ள பகுதி நாயக்கர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளது என்பதற்கு கி.பி. 1700-ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு ஒன்று சான்றாக விளங்குகிறது. 4 கல்வெட்டு திருச்சுற்றுமதில் கட்டும் திருப்பணியை நாயக்க மன்னரின் தளவாய் நரசப்பையன் குமாரர் வேங்கடப்பய்யன் செய்தார் அதற்குப் பழனியப்பன் என்பவர் துணைபுரிந்துள்ளார் என்று தெரிவிக்கிறது. நாயக்கர் காலத்தில் அன்னியர் படையெடுப்பிலிருந்து கோயிலின் செல்வங்கள் கொள்ளை போகாமல் இருப்பதற்காக இவ்வாறு உயரமா திருமதில்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். காளமேகப்பெருமாள் கோவில் விமானம் சதுரவடிவில் அமைந்த கருவறை அதன் முன்னர் அர்த்தமண்டபம் மகாமண்டபம், கருடமண்டபம் (முன்மண்டபம்) ஆகியவற்றுடன் விளங்குகிறது. கருட மண்டபத்தின் தென்புறமாகவும் வடபுறமாகவும் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளின் வழியா மகாமண்டபத்திற்குள் செல்லலாம். இதே போன்று அர்த்தமண்டபத்திற்கும் மகாமண்டபத்திற்கும் இடையில் பக்கவாட்டில் கோயிலுக்குள் நுழைவதற்கு ஏதுவாக இரண்டு வாயில்கள் உள்ளன. இதுபோன்ற அமைப்புடைய வாயில்கள் சோழர் காலத்தில் தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் முதலிய இடங்களில் அமைந்த கோயில்களில் காணப்படுகின்றன இவ்வமைப்பைப் பின்பற்றியே மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் உட்புறம் காளமேகப் பெருமாள் நின்ற நிலையிலும் தாயார் இருவரும் அமர்ந்த நிலையிலும் காட்சி தருகின்றனர். காளமேகப்பெருமாள் நின்ற கோலத்தில் விளங்கு கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையுள்ள விமானம் உயர்ந்த உபபீடத்துடன் (உபானம்) அதிட்டானம், சுவர் பிரஸ்தரம், கீரிவம், சிகரம், ஸ்தூபி என்று ஆறு அங்கங்களையும் இரண்டு தளங்களையும் கொண்டு மிகுந்த வேலைப்பாடுகளுடன் அழகியதாகத் தோற்றமளிக்கிறது. அதிட்டானம் அதோபத்மத்துடன் போன்ற அழகிய வர்க்கவேறுபாடுகளால் அணி செய்யப்பட்டுள்ளது. கருவறைச் சுவர்களை நுட்பமா புனைவுடன் கூடிய தேவகோட்டங்கள், அரைத்தூண்கள் கும்பபஞ்சரங்கள் அலங்கரிக்கின்றன. இவ்விமானத்தின் சிகரம் சதுர வடிவில் அமைந்த நாகர சிகரமாகும். இவ்விமானத்தின் கலைப்பாணி விசயநகர வேந்தர் காலக் கட்டடப்பாணியில் அமைந்திருக்கிறது. இது கி.பி. 16ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் திருத்திக் கட்டப்பட்டிருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் மகாமண்டபத்தின் தென்புறத்து அடித்தளத்தில் கி.பி. 1551-ஆம் ஆண்டைச் சார்ந்த விசயநகர வேந்தர் காலக் கல்வெட்டுகள் இரண்டு பொறிக்கப்பட்டுள்ளன. (மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் விமானமும் இதே காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளது). கி.பி. 1551-ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டுகள் உள்ள மகாமண்டபமும் கருடமண்டபமும் இவ்விசயநகரவேந்தர் காலத்தில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டிருக்க வண்டும். மகாமண்டபத்தின் உட்புறத்தினை விசயநகர வேந்தர்காலப் பாணியில் உருவான மிகப்பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. தூண்களின் மீது அமர்ந்திருக்கும் சிம்மங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. இம்மண்டபத்தின் விதானத்திற்கு கீழே தூண்களுக்கு மேலே உள்ள சன்னல் சட்டங்களில் சிற்றுருவக் காட்சிகள் காணப்படுகின்றன. திருமாலின் பல அவதார நிலைகளையும் திருவிளையாடல்களையும் காட்டும் சிறு சிற்பங்கள் இங்கு உள்ளன. காளமேகப் பெருமாள் விமானத்தைச் சுற்றியுள்ள திருச்சுற்றுச் சுவரினையொட்டி தூண்கள் தாங்கி நிற்கும் திருச்சுற்று நடைமாளிகை காணப்படுகிறது. இதன் தென்புறப் பகுதியில் ஸ்ரீதேவித் தாயாரின் கோயிலும் சக்கரத்தாழ்வார் கோயிலும் உள்ளன. ஆண்டாள் சன்னதி பெருமாளின் விமானத்திற்குத் தென்புறம் தனியாக உள்ளது. இதற்குக் கிழக்கே முதல் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் நவநீதகிருஷ்ணன் சன்னதி காணப்படுகிறது. பரமபதவாசல் முதல் திருச்சுற்று திருமதிலின் வடபுறம் உள்ளது. இக்கோயிலுள்ள சக்கரத்தாழ்வார் பக்தர்கள் போற்றிக் கொண்டாடும் சக்திமிக்கவராக வணங்கி வரப்படுகின்றார். சக்கரத்தாழ்வார் என்றழைக்கப்படும் திருவாழி ஆழ்வாருக்குத் தனிச்சிற்றாலயம் எடுத்து வழிபடும் மரபு பிற்காலச்சோழர் பிற்காலப் பாண்டியர் காலங்களில் அதிகரித்திருக்கின்றது. இம்முறையில் திருமோகூர் கோயிலிலும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் சடையவர்மன் சந்தரபாண்டியனின் ஏழாவது ஆட்சியாண்டில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிக்கோயில் ஒன்று காளமேகமான காங்கேயராயர் என்ற பாண்டிய அரசனின் அதிகாரியால் எடுக்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. 6 இக்கோயில் இரண்டாம் திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் எடுக்கப்பட்டது. இது பற்றிய கல்வெட்டும் இவ்விடத்திலேயே திருமதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அழிவுற்ற நிலையில், தற்போது, இன்றுள்ள கோயிலின் முதல் திருச்சுற்றில், தென்மேற்கு மூலையில் மற்றொரு சக்கரத்தாழ்வார்கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டு வழிபாட்டில் விளங்கி வருகிறது. இரண்டாம் திருச்சுற்றின் தென்கிழக்கு மூலையில் அழிந்தநிலையில் நாயக்கர்காலத்தில் எடுக்கப்பட்ட மண்டபம் ஒன்று காணப்படுகிறது. இதனையொட்டி மேற்கே வடக்கு நோக்கிய நிலையில் அனுமார்கோவில் உள்ளது. கருவறை அர்த்தமண்டபம் கொண்ட சிறிய விமானத்துடன் கூடிய கோயிலாக இது விளங்குகிறது. அனுமார்கோவிலுக்கு வடக்கே காளமேகப்பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் காணப்படுவது கம்பத்தடி மண்டபமாகும். இது கி.பி. 17-18 ஆம் நூற்றாண்டு கலைப்பாணியில் விளங்குகிறது. இவற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள தூண்கள் பெரிய யாளியின் உருவங்களைக் கொண்டதாக விளங்குகின்றன. இங்குள்ள தூண்களில் பல தெய்வவுருவங்கள் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபத்திற்கு வடக்கே தெற்கு நோக்கிய நிலையில் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாள் கோவில் காணப்படுகிறது. நம்மாழ்வார் திருமோகூர் பெருமாளைப் பற்றிப் பாடும்போது அவரை "படர்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்" என்று பாடியுள்ளார். இதனை நினைவில் கொண்டு பாண்டியர்கள் இக்கோயிலைத் திருமோகூரில் எடுத்திருக்க வேண்டும். இக்கோயிலின் கருவறை பிற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் தேவகோட்டங்களுடன் எளிமையாய் உருவாக்கபட்டுள்ளது. கருவறையின் பின்புறம் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. 7 இக்கோயிலின் விமானம் திருவரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் போன்று சாலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவாதவூர் திருமறைநாதர் கோயில், யோகநரசிங்க பெருமாள் கோயில், யானை மலை முருகன் (இலாடன்) கோயில் |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில், மாணிக்கவாசகர் உதித்தருளிய திருவாதவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. மதுரைக்கு வடகிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமோகூர் ஆலயம் வயல்சூழ்ந்த இடத்தில் வானளாவிய கோபுரத்துடன் வனப்புறக் காட்சியளிக்கிறது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை |
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | மாட்டுத்தாவணி, யானைமலை ஒத்தக்கடை, நரசிங்கம்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மதுரை |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | மதுரை நகர விடுதிகள், மேலூர் நகர விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | இந்துசமய அறநிலையத்துறை |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | இந்துசமய அறநிலையத்துறை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 30 May 2017 |
| பார்வைகள் | 1207 |
| பிடித்தவை | 0 |