வழிபாட்டுத் தலம்
விசயமங்கலம் நாகீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | விசயமங்கலம் நாகீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | நாகீசுவரமுடையார் கோயில், குறுப்பு நாட்டு விசையமங்கலத்து ஆளுடையார் திருநாகீஸ்வரமுடைய நாயனார், விசையமங்கலத்து மகாதேவர் ஸ்ரீநாகபுரமுடையார் |
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | ஆளுடைய நாச்சியார் |
| வழிபாடு | இருகாலப் பூசை, காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நைவேத்தியம் படைத்து பூசை செய்யப்படுகின்றன. |
| திருவிழாக்கள் | கார்த்திகை நாள், நவராத்திரி உற்சவப் பூசை, மார்கழி திருவாதிரை, மாசி சிவராத்திரி, நாயன்மார் குருபூசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இச்சிவன் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் இறைவனை 'திருநாகீஸ்வரமுடையார்' என்றே குறிக்கின்றன. முன்மண்டபம், இரண்டாம் விக்கிரமசோழனின் 9-வது ஆட்சியாண்டில் (சகவருடம் 1085 கி.பி. 1163) பழுது பார்க்கப்பட்டதை அவனது கல்வெட்டு தெரிவிக்கின்றது. அச்சமயத்தில் முன்பிருந்த கல்வெட்டுகளை மறுபடியும் எழுதி வைத்து விட்டதை அவனது கல்வெட்டு குறிக்கிறது. அபிமான சோழ ராசாதிராசனின் கல்வெட்டு அம்மன் கோயிலில் இருப்பதால் கல்வெட்டைக் கொண்டு காலத்தைக் கருதும் போது கி.பி. 12-ஆம் நூற்றாண்டு எனக் குறிக்கலாம். அம்மனை கல்வெட்டுகள் 'திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்' என்று குறிக்கின்றன. வீரபாண்டிய தேவனின் 5-ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டில் சிவன் கோயிலில் சந்தியா தீபத்திற்காக ஸ்ரீயக்கி பழஞ்சலாகை என்ற நாணயம் ஒன்று கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மன்னனின் 10-ஆவது ஆட்சியாண்டில் வடகரை நாடு வெள்ளாளன் குலத்தைச் சேர்ந்தவன் விஜயமங்கலத்திலிருக்கின்ற திருமால் கோயிலில் வைத்த சந்தியா தீபமொன்றுக்காக ஸ்ரீயக்கி பழங்சலாகை அச்சு என்ற நாணயம் கொடுத்தான் என்று கல்வெட்டுக் கூறுகின்றது. இவனின் 17-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு காங்கய நாட்டு வாமதேவர் மகள் பிள்ளை அம்மை என்பவள் விஷ்ணு கோயிலில் வைத்த சந்தியா தீபத்திற்கு ஸ்ரீயக்கி பழங்சலாகை அச்சு என்ற நாணயத்தை கொடுத்ததாகக் கூறுகிறது. வீரராசேந்திர சோழனின் 2-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சிவன் கோயிலில் சந்தியா தீபம் வைத்ததற்கு புதுச்சலாகை நாணயம் ஒன்று கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனின் 41-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் சிவன் கோயிலுக்கு நந்தா தீபம் ஒன்றுக்காக பழஞ்சலாகை அச்சு என்ற நாணயமொன்றை அக்கோயிலைச் சார்ந்த ஆளவந்தீமாணிக்கன் முதலியவர்களிடம் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. குலோத்துங்க சோழனின் 13-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு சந்தியா தீபம் ஒன்றுக்காக அச்சு பழஞ்சலாகையும், புதுச்சலாகை அச்சும் கொடுத்ததாகக் குறிக்கின்றது. இதே அரசனின் 14-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் திருநாகீஸ்வரமுடையாருக்கு சந்தியா தீபத்திற்காக புதுச்சலாகை அச்சு ஒன்று தந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இதே ஆட்சி ஆண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு கைக்கோளர் குலத்தைச் சேர்ந்தவன் சந்தியா தீபம் ஒன்றை சிவன் கோயிலில் வைத்ததற்காக புதுச்சலாகை அச்சு ஒன்றை தந்ததாகக் கூறுகிறது. கொங்குப் பாண்டியன் வீரபாண்டியனின் சக வருடம் 1202, 5-ஆவது ஆட்சியாண்டு குறிக்கப்பட்ட கல்வெட்டு விஜயமங்கலத்திலுள்ள குளத்தைப் பழுது பார்த்து இந்தக் குளமும், நீர் பாயும் நிலங்களும் திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார்க்கு தேவதானமாகக் கொடுக்கப்பட்டது. வீரபாண்டியனின் கல்வெட்டில் மற்றொரு கல்வெட்டில் சிவன் கோயில் திருப்பணிக்காக ஆமூர் என்ற இராகுந்தராயநல்லூரை திருநாகீஸ்வரமுடைய நாயனார்க்கு தேவதானமாக தந்து, அணை, குளம், புன்செய் நிலம், கிணறு, மரம் முதலிய அனைத்தும் எந்த வரியும் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற செய்தி உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. |
விசயமங்கலம் நாகீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கோயிலினுள் நுழையுமிடத்தில் இருபுறமும் திண்ணைகளுடன் கூடிய நுழைவாயில் உள்ளது. அதிலிருக்கின்ற தூண்களில் நாகபந்தங்கள் பெரியதாகவும், போதிகையில் வாழைப்பூ மாதிரி தொங்குகின்றன. வெளியே சிறுமண்டபத்தின் நடுவில் துவஜஸ்தம்பம் உள்ளது. கருவறை அமைப்பு அதிட்டானப்பகுதி கீழிருந்து மேலாக ஜகதி, முப்பட்டைக் குமுதம், கண்டம், வேதிகை ஆகிய அங்கங்களுடன் உள்ளன. அதிட்டானத்தின் மேலுள்ள பகுதி சுவர் அல்லது கால் என அழைக்கப்படும். தேவகோட்டங்கள் வேதிகையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. வேதிகைப்பட்டி தேவகோட்டத்தில் இடைவெளி விட்டுச் செல்கிறது. தேவகோட்டத்திற்கு மேலே வேலைப்பாடு இல்லாத, மகரதோரணம் அரை வட்ட வடிவில் காணப்படுகிறது. அதன் நடுவில் வட்டமாகப் பத்ம இதழ்களுடன் உள்ளன. கால்வாயில் பத்மபந்தம், தாடி, இதழ், பலகை, போதிகை, முதலியன இருக்கின்றன. கருவறையில் மூன்று தேவகோட்டங்கள் உள்ளன. தேவகோட்டங்களில் உருவங்கள் இல்லை. கூரைப்பகுதியில் பூதவரியில் சிறுசிறு சிற்பங்கள் இருக்கின்றன. கபோதத்தின் கூடுகள் உள்ளன. பக்கத்திற்கு நான்காக (வடக்கு, கிழக்கு, தெற்கு) மொத்தம் பன்னிரண்டு கூடுகள் வேலைப்பாடுகள் அதிகமில்லாமல் இருக்கின்றன. கபோதத்திற்கு மேலே யாளி வரி இருக்கின்றது. இரு தளங்களையுடைய நாகர விமானமாகும். ஒவ்வொரு தளத்திலும் இருபுறமும் கர்ணகூடு, இடையில் சாலை அமைப்பைக் கொண்டது. நாகர விமானத்துக்கு மேலே கலசம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் கருவறையின் அதிட்டான அமைப்பை போலவே இருக்கிறது. சுவர்ப்பகுதியில் தேவகோட்டமோ அல்லது வேதிகைப்பட்டியோ எதுவும் இல்லாமல் வெறுமனாக உள்ளது. அர்த்த மண்டபத்தின் பிரஸ்தரம் பகுதி கருவறையின் அமைப்பை போலவே உள்ளது. முன்மண்டப அமைப்பு அர்த்த மண்டபத்தைப் போலவே ஒத்திருக்கிறது. ஆனால் தூண்களில் பத்ம இதழ்கள் உள்ளன. கருவறையின் கிழக்கு, தெற்கு, வடக்குச் சுவர்களின் நீளம் 6.68 மீட்டராக உள்ளது. அர்த்த மண்டபத்தின் நீளம் 24 மீட்டராக உள்ளது. முன்மண்டபத்தின் நீளம் 7.67 மீட்டராகவும், மேற்கு திசையில் அகலத்தில் நுழைவாயில் அகலம் 1.04 மீட்டராக உள்ளது. முன்மண்டபத்துள் இருக்கும் தூண்களும் முன்மண்டபத்துக்கு வெளியேயுள்ள மகாமண்டபத்தில் முருகன் கருவறைக்கு எதிரேயுள்ள மூன்று தூண்களைத் தவிர மற்ற தூண்களில் உடல் சதுரமாகவும், போதிகை வேலைப்பாடு இல்லாமல் காணப்படுகின்றன. முருகன் கருவறைக்கு எதிரேயுள்ள மூன்று தூண்களில் நாகபந்தங்கள் உள்ளன. முன்மண்டபத்துள் நான்கு முழுத்தூண்களும், நான்கு அரைத்தூண்களும் இருக்கின்றன. மகாமண்டபத்தில் மொத்தம் பத்தொன்பது தூண்கள் இருக்கின்றன. மகாமண்டபத்தின் வடமேற்கு மூலையில் முருகப்பெருமானின் கருவறை அமைந்துள்ளது. வடக்கு திசையில் 51.3 மீ. நீளமும், கிழக்குத் திசையில் 11.0 மீ. அகலமும், தெற்குத் திசையில் 28.55 மீ. நீளமும் கொண்ட திருச்சுற்று மாளிகையில் மொத்தம் இருபத்து மூன்று தூண்கள் உள்ளன. தூண்கள் கீழ்ப்புறம் சதுரமாயும் அதை அடுத்து எண்பட்டையாகவும் மீண்டும் சதுரமாகவும் பின்னர் போதிகை முடிவு கொண்டதாக உள்ளன. கருவறையின் வடக்கில் தெற்கு பார்த்தபடி சண்டிகேசுவரர் ஆலயம் உள்ளது. கட்டட அமைப்பு சிவனின் கருவறைக் கட்டட அமைப்பை போலவே இருக்கிறது. கருவறையின் தெற்கு சுவருடன் சேர்ந்து தட்சிணாமூர்த்தியின் உருவம் உள்ளது. இரண்டாம் திருச்சுற்றின் மதிற்சுவரின் நுழைவாயிலின் நேர் உள்ளே பலிபீடம் அமைந்துள்ளது. தென்கிழக்கு மூலையில் ஒன்பது தூண்களை நிறுத்தி மேலே மட்டும் மூடப்பட்ட மண்டபம் உள்ளது. தூண்களின் அமைப்பை பார்க்கும் போது அம்மண்டபம் சுமார் 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததைப் போல காணப்படுகின்றது. மதிற்சுவர் சுமார் 2 மீ. உயரமுள்ளது. முற்றிலும் கல்லால் கட்டப்பட்டது. இறைவன் கருவறையிலிருந்து இரண்டாவது திருச்சுற்றில் தெற்குத்திசையில் திருக்காமக்கோட்டமுடைய அம்மனின் சந்நிதி உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம் முதலிய அமைப்புகளோடு அம்மன் கோயிலுள்ளது. ஒருதளமுடைய வேசர விமானத்துடன் கூடிய கருவறையாகும். கருவறை அர்த்தமண்டபம் ஆகியவற்றின் அதிட்டானப்பகுதிகள் உபானம், பத்ம, ஜகதி, முப்பட்டைக் குமுதம், கண்டம், வேதிகை முதலிய அமைப்புகளுடன் உள்ளன. சுவர்ப்பகுதியிலுள்ள மூன்று தேவகோட்டங்களிலும் சிற்பங்கள் இல்லை . கால் வரிகள் உள்ளன. அதில் நாகபந்தம் சிறியதாக உள்ளது. பத்மபந்தம் இதழ் போதிகை முதலியன உள்ளன. கூரைப் பகுதியில் கீழே பத்மவரியும், இடையில் கபோதமும், மேலே யாளி வரிகளும் இருக்கின்றன. கபோதத்தில் கூடுகள் உள்ளன. அம்மன் கருவறைக்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அந்தராளம் அமைந்துள்ளது. அதில் தேவகோட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தேவகோட்டங்களில் உருவங்கள் இல்லை. இவைகள் சுவரை விட சற்று முன்னால் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தில் மொத்தம் எட்டு தூண்கள் நான்கு முழு தூண்களாகவும் நான்கு அரைத் தூண்களாகவும் உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கரிவரதராசப்பெருமாள் கோயில், சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில் |
| செல்லும் வழி | விசயமங்கலம் கோயமுத்தூரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47 நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் (பெருந்துறையில் இருந்து 12 கி.மிட்டர்) தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 51 |
| பிடித்தவை | 0 |