Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்
வேறு பெயர்கள் பெண்ணை நாயனார், பெண்ணை தம்பிரான் நாயனார்
ஊர் பெண்ணேசுவரமடம்
வட்டம் பையூர் பற்று
மாவட்டம் கிருஷ்ணகிரி
உட்பிரிவு 1
மூலவர் பெயர் அருள்மிகு பெண்ணேசுவரர்
தாயார் / அம்மன் பெயர் ஸ்ரீவேதநாயகி
தலமரம் பெண்ணை (பனை மரம்)
திருக்குளம் / ஆறு தென்பெண்ணை ஆறு
காலம் / ஆட்சியாளர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு / மூன்றாம் குலோத்துங்கன்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் 30-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ளன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். பரிவார சந்நிதிகளாக தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடகிழக்கில் சுப்ரமண்யரும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் சிற்பம் உள்ளது. இராஜகோபுரம் 149 அடி கொண்டு 7 நிலைகளில் சுதைச் சிற்பங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. திருச்சுற்றில் விஜயநகர, போசளர் காலத் தூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தலத்தின் சிறப்பு 900 ஆண்டுகள் பழமையானது. பிற்காலச் சோழர் கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது.
சுருக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று பெண்ணேசுவர மடம் திருக்கோயிலாகும். மிக உயர்ந்த இராஜகோபுரம் இங்குள்ளது. இக்கோயில் மலைகள் சூழ்ந்த பகுதியிலும், தென்பெண்ணையாற்றங்கரையிலும் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்த இக்கோயில் பெண்ணை (பனை)யின் கீழ் அமர்ந்த நாயனார்க்காக எடுப்பிக்கப்பட்டது. பனை அதியர்களின் குலச்சின்னமாகும். பிற்காலச் சோழர்காலத்தில் இக்கோயில் கற்றளியாக எடுப்பிக்கப்படும் முன்னரே அதியர்கள் இங்கு வழிபாடு மேற்கொண்டிருக்க வேண்டும். இக்கோயிலைச் சுற்றிலும் நடுகல் சிற்பங்களும், தலைப்பலி சிற்பங்களும் காணப்படுகின்றன. திருக்கோயில் வாயில் முன்னே இரண்டு தலைப்பலி நடுகற்கள் நடப்பட்டுள்ளன. இவை இக்கோயில் சமூகத்தோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குகிறது. இக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில மூன்றாம் குலோத்துங்க சோழன் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்னனது காலத்தில் இப்பகுதியில் அரசாண்ட அதியர்கள் சோழர்களுக்கு கீழ் சிற்றரசர்களாயிருந்தனர். எனவே அதியர்களே இக்கோயிலை எடுப்பித்திருக்க வேண்டும். இக்கோயிலில் உள்ள சிற்பங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உச்சிஷ்ட கணபதி சிற்பமும், துர்க்கை சிற்பமும் கருதப்படுகிறது. துர்க்கை மகிஷாசுரனைக் கொன்ற நிலையில் காட்டப்பட்டுள்ளாள். இது தனித்துவமாகும். இக்கோயிலில் ஏறத்தாழ 30 கல்வெட்டுகள் உள்ளன. இவை கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வெட்டுகள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. பிற்காலச் சோழர், அதியர், போசளர், விஜயநகரர், நாயக்கர் ஆகியோரது கல்வெட்டுகள் இதில் அடங்கும்.
அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் பிற்காலச் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை திருமுன்னில் பிற்காலச் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பெண்ணேசுவரமடம் திருக்கோயிலைச் சுற்றிலும் எட்டு மலைகள் உள்ளன. இம்மலையின் அடிவாரங்களில் பல நடுகற்கள் உள்ளன. தலைப்பலிக் கொடுக்கும் வீரர்களின் சிற்பங்களும் இதில் அடங்கும். இக்கோயிலைச் சுற்றியுள்ள மலைகளில் தொல்பழங்கால பாறையோவியங்களும் காணப்படுகின்றன.
செல்லும் வழி சென்னையிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ. தொலைவில் உள்ள கிருஷ்ணகிரி சென்று அங்கிருந்து காவேரிப்பட்டிணம் வழியாக பெண்ணேசுவர மடம் சென்றடையலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00-12.30 மாலை 4.00-8.30
அருள்மிகு பெண்ணேசுவரர் திருக்கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காவேரிப்பட்டிணம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, மொரப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் மதுரை கோ.சசிகலா
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 47
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்