வழிபாட்டுத் தலம்
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருஉத்தரகோசமங்கை, தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி |
| ஊர் | உத்தரகோசமங்கை |
| வட்டம் | இராமநாதபுரம் |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | மங்களேசுவரர், மங்களநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி |
| தலமரம் | இலந்தை |
| திருக்குளம் / ஆறு | அக்கினி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம், மொய்யார் தடம் பொய்கை தீர்த்தம் |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | ஆனி திருமஞ்சனம், ஆருத்திரா தரிசனம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி |
| சிற்பங்கள் | மூலவர் சதுர ஆவுடையார். உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். பிரகார அழகு இராமேஸ்வரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகர், இடப்பால் திரும்பி உமாமகேசுவரர் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. உமாமகேசுவரர் சந்நிதிக்கு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | திருவாசகப் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம். |
|
சுருக்கம்
இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர். சேது வளநாட்டின் தலைநகரான ராமநாதபுரத்திற்கு தென்மேற்கில் 15 கி.மீ., தூரத்தில் திருஉத்தரகோசமங்கை தலம் உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளை கொண்ட அருள் தரும் மங்களநாயகி அம்பாளுடன் அருள் பாலிக்கும் மங்களநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானதாகவும், தொன்மை யானதாகவும் அமைந்துள்ளது. வேத ஆகமத்தை உமாதேவிக்கு உபதேசம் செய்த புண்ணியதலம் என்பதால் "திரு' எனும் தெய்வ அடைமொழியுடன் இத்தலம் திருஉத்தரகோசமங்கை என பெயர் பெற்றது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றாகிய "வலைவீசிய லீலை' நடந்த இடமான பரதவர்கள் நிறைந்த கடற்பகுதி திருஉத்தரகோசமங்கைக்கு அருகில் உள்ளது. சிவபெருமான், அம்பிகையை பரதவர் (மீனவர்) மகளாக பிறக்கச் செய்து, பின் அவளுக்கு விமோசனம் கொடுத்து, திருமணம் செய்து, இத்தலத்திலேயே தங்கி வேதப்பொருளை உபதேசம் செய்தார். இத்தலத்தில் இருந்த சிவனடியார்கள், சிவயோகிகள் 60 ஆயிரம் பேருக்கும் ஞானோபதேசம் செய்து, அம்பிகையோடு மதுரை சேர்ந்ததாக புராணம் கூறுகிறது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம், அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது. அவர் தன் முற்பிறவில் இங்கு அவதரித்து , சிவபெருமான் கட்டளைப்படி வேதாகமப் பொருளை இந்த உலகிற்கு தந்து , அடுத்த பிறவியில் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்து, இங்கு வந்து "மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே' என திருவாசகத்தால் பாடியிருப்பது இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பாகும். சிவாலயங்களில் பள்ளியறை பூஜை நடக்கும் போது பாடப்படும் ""திருப்பொன்னூஞ்சல்'' பாடல், மாணிக்கவாசகரால் இக்கோயிலில் பாடப் பட்டதாகும். அருணகிரியாரும் இத்தலத்தை பற்றி பாடல்களை பாடியுள்ளார். பாண்டித்தலங்கள் பதினான்கும் தோன்றும் முன்பே, ஓர் இலந்தை மரத் தின் அடியில் சுயம்புவாய் தோன்றியவரே, மங்களநாதர் ஆவார். "மண் முந்தியோ, மங்கை முந்தியோ'' என்று தொன்று தொட்டு வழக்கத்திலிருந்து, மண்ணிலும் முந்தியது "மங்கை' என்னும் திருஉத்தரகோசமங்கை தலம் என்பதை அறியலாம். இத்தலத்திற்கு ""தென் கைலாயம்'' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. தொன்மையான இக் கோயிலில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தை மரம் (தல விருட்சம்) உள்ளது. ஆலயத்தின் வடக்கில் ஆறு அடி உயர மரகத நடராஜருக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் இருக்கும் மரகத நடராஜரை, மார்கழி மாத திருவாதிரை தினத்திற்கு முந்தைய நாள் நடக்கும் அபிஷேகத்தின் போது, பச்சை வடிவாய் மரகத மேனியனாய் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு காணக் கிடைக்காத காட்சியாகும். இந்த கோயிலின் உள்ள நடராஜர் சிலை, நவரத்தினங்களில் ஒன்றான மரகதத்தால் ஆனதால், இத்தலம் "ரத்தினசபை' என்றும், சிதம்பரத்தில் ஆடும் முன் இங்கு ஆடி காட்சி கொடுத்ததால் "ஆதிசிதம்பரம்' எனவும் அழைக்கப்படுகிறது. சிவலிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் உள்ள ஸ்படிக மற்றும் மரகத லிங்கத்திற்கு தினம் தினம் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இவ்விரு லிங்கங்களும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தினமும் உச்சிகால பூஜையின் போது, இந்த லிங்கங்களை நடராஜர் சன்னதி முன்மண்டபத்திலுள்ள ஒரு பீடத்தில் வைத்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். அதன்பின் இந்த லிங்கங்களை நடராஜர் சன்னதி படியில் வைக்கின்றனர். நடராஜருக்கு தினசரி அபிஷேகம் இல்லாததால், அவரது பிரதிநிதியாக இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அதன் மூலம் நடராஜருக்கே அபிஷேகம் நடத்தப்படுவதாக ஐதீகம். ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதால் அன்று ஒருநாள் மட்டும் அன்னாபிஷேகம் நடப்பதில்லை.
|
|
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | உத்தரகோசமங்கை தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் சிவன் கோவில் எனும் பிரபலமான இந்து கோவில் உள்ளது. ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் காட்சியளிக்கிறார். இவ்வூர்க் கோயிலிலுள்ள சிவபெருமானைத் திருவாசகம் 38 இடங்களில் குறிப்பிட்டுள்ளது. தேவாரப் பாடல்கள் இதனைப் பாடவில்லை. இக்கோயிலின் தலமரம் இலந்தை. ‘இலவந்திகை’ என்னும் சொல்லே மருவி ‘இலந்தை’ எனக் கருதுகின்றனர். இதனால் சங்ககால ‘இலவந்திகைப்பள்ளி’ இக்கால உத்தரகோசமங்கை எனக் கருதுகின்றனர். இவ்வூர் சிவனுக்கு வழிபாட்டுக்கு உரியதல்லாமல் போன தாழம்பூவும் சாத்தப்படுகிறது. மண்டோதரி இவ்வூர் இறைவனை வழிபட்டு இராவணனைக் கணவனாகப் பெற்றதாக ஒரு கதை உண்டு. ஆருத்திரா தரிசனம் இவ்வூரின் சிறப்பாகும். மார்கழித் திருவாதிரையில் அன்று ஒரு நாள் மட்டுமே நடராசருக்கு சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தைக் கொண்டுள்ளது. கையை நுழைத்து, இந்தப் பந்தை நகர்த்த முடியும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருப்புல்லாணி, இராமேஸ்வரம், தேவிப்பட்டினம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன்பாலம் |
| செல்லும் வழி | மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, இவ்வூரை அடையலாம். மதுரை-மண்டபம் சாலையில் இராமநாதபுரத்திலிருந்து மேற்கே 10 கி.மீ, பரமக்குடியிலிருந்து கிழக்கே 32 கி.மீ. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 11 May 2018 |
| பார்வைகள் | 360 |
| பிடித்தவை | 0 |