வரலாற்றுச் சின்னம்
திருமலை சமணக்குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் திருமலை சமணக்குடைவரை
அமைவிடம் சமணர் குகைக் கோயில்
ஊர் திருமலை
வட்டம் திருமலை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
திருமலை ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள குன்று ஒன்றில் குடைவரைக் கோயிலொன்று காணப்படுகிறது. குன்றின் சரிவில் வடக்கு நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ள இக்குடைவரைக்குச் சற்று மேலே சமணர்கள் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன. குன்றின் சரிவில் உள்ள குடைவரை முகப்பு, அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றைப் பெற்று விளங்குகிறது. முகப்பில் இரு தூண்களும் அதற்கு நேராகப் பக்கச் சுவர்களில் இரண்டு அரைத்தூண்களும் இக்குடைவரையில் காணப்படுகிறது. தூண்களும் அரைத்தூண்களும் சதுரம், எட்டுப்பட்டை ஆகியவை அற்று காணப்படுகின்றன. இருப்பினும் இவை கோண வடிவ தரங்கப் போதிகைகளைப் பெற்று விளங்குகின்றன. முகப்பை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் தரைப்பகுதி உயர்ந்து காணப்படுகிறது. குடைவரையின் கருவறை கிழக்கு நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்பகுதியில் இரண்டு பூதங்கள் புடைப்புச் சிற்பமாக காட்சியளிக்கின்றன. கருவறையின் இருபக்கச் சுவர்களில் அடியவர் இருவர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளனர். பின் சுவரில் உமையுடன் கூடிய சிவன் அழகுடன் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளார். சுகாசனத்தில் ஒரு காலை பற்றிள்ளாள். இங்கு இருக்கையின் மீது இருத்தி - பிறிதொரு காலை தொங்கவிட்டு பொதுவாக இறைவன் காட்டப்படுவார். ஆனால் இங்குள்ள இறைவர் உட்குடி இருக்கையில் காட்டப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. உமை அன்னையும் இதே நிலையில் காட்டப் பட்டுள்ளாள். சிவன், உமையின் இடக்கையைத் தனது வலக்கையால் பற்றி, மற்றொரு கையைத் தொடை மீது இருத்தியுள்ளார். உமையின் பிறிதொரு கை இருக்கையை பிடித்தவாறு காட்டப்பட்டுள்ளது. பிறை சூடிய பெம்மானின் சடைமுடி இருபுறங்களிலும் விரிந்து காணப்படுகிறது. இவரது மற்றிரு கைகள் தமரும், பரசும் பெற்று விளங்குகின்றன. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் காணப்படுகின்றன. உமையன்னையின் மார்பு, கச்சை இல்லாமல், கழுத்தில் கழுத்தணி, காதுகளில் பனையோலைக் குண்டலங்கள் ஆகியவை பெற்று உள்ளது. உமையின் அருகில் இடப்பக்கம் பணிப்பெண் ஒருவர் நின்ற நிலையில் காணப்படுகிறாள். இப்புடைப்புச் சிற்பத்தை மக்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் எனக் கூறுகின்றனர். இதுபோன்ற புடைப்புச் சிற்பம் திருப்பரங்குன்றம், பிரான்மலை ஆகிய குடைவரைகளில் காணப்படுகிறது. குடைவரை மண்டபத்தின் வடக்கு நோக்கி உட்புறம் உள்ள பாறை ஒன்றில் முருகனின் புடைப்புச் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இளமை ததும்பும் முகப்பொலிவுடன் விளங்கும் கந்தனின் இரு கைகளில் ஒன்றை தொடை மீதும் , மற்றொரு கையை இடுப்பிலும் இருத்தி காணப்படுகிறார். கரண்ட மகுடமும் மார்பில் அக்கமாலையும் இடுப்பில் கடிபந்தமும் பெற்று இவர் விளங்குகிறார். தலைக்கு மேல் குடை ஒன்று காணப்படுகிறது. குமரனின் வலப்பக்கம் பூத உருவம் ஒன்றும் கொடிமரத்தில் சேவலும் இடப்பக்கம் வணங்கிய நிலையுடைய முனிவரும் காணப்படுகின்றனர். கீழ்ப்பகுதியில் இறைவனின் வாகனமான மயிலும் ஆடு மற்றும் பூங்கொத்து உள்ள ஜாடி போன்றவை காணப்படுகின்றன. இவ்விறை வரும் இன்றளவும் வழிபாட்டில் உள்ளார். குடைவரைக் கோயிலின் அருகில் பிற்காலத்தைச் சார்ந்த கோயிலொன்று உள்ளது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் திருமலை பாறை ஓவியங்கள், மேல்பாடி அரிஞ்சிச்சீவரம்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலிருந்து திருப்பத்தூர் செல்கின்ற வழியில் ஓக்கூர் என்னும் ஊருக்கு அருகில் திருமலை என்ற ஊர் உள்ளது. ஓக்கூரிலிருந்து கட்டாணிப்பட்டி என்னும் ஊருக்குச் செல்லும் பிரிவுச் சாலையில் 10 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள குன்று ஒன்றில் குடைவரைக் கோயிலொன்று காணப்படுகிறது. குன்றின் சரிவில் வடக்கு நோக்கிய நிலையில் அமைக்கப்பட்டுள்ள இக்குடைவரைக்குச் சற்று மேலே சமணர்கள் வாழ்ந்த குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் அவர்கள் தங்கியிருந்த படுக்கைகள் காணப்படுகின்றன. குகையின் கூரை முகப்பில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இங்குள்ள இறைவன் "மலைக்கொழுந்தீசர்" எனப்படுகின்றார். இங்குள்ள கல்வெட்டுகள் குடைவரைக் கோயிலின் இறைவனை குன்றத்து நாயனார் என்றும் மலைக்கொழுந்தீசரை திருமலைப் பெருமாள் என்றும் குறிப்பிடுகின்றன. திருமலைக் குடைவரையின் அமைப்பின்படி இக்குடைவரை கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதலாம்.
குறிப்புதவிகள்
திருமலை சமணக்குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_MON_00096/TVA_MON_00096_தி...

  • TVA_MON_00096/TVA_MON_00096_தி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 230
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்