வரலாற்றுச் சின்னம்
குடுமியான் மலை குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் குடுமியான் மலை குடைவரை
அமைவிடம் குடுமியான் மலை
ஊர் குடுமியான்மலை
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
குடுமியான் மலை மேலக்கோயில் என்னும் குடைவரைக் கோயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இது "திருமேற்றளி” என்றும் "மேற்றளி" என்றும் குறிப்பிடப்படுகிறது. குடைவரையின் முகப்பில் இரண்டு முழுத் தூண்களும் பக்கச் சுவர்களில் இரண்டு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. தூண்கள் கலசம், கும்பம் போன்ற அங்கங்களைப் பெற்று வளர்ச்சி பெற்ற கலைப்பாணியைக் கொண்டு விளங்குகின்றன. இவை மேலைச் சாளுக்கியர் குடைவரைகளில் காணப்படும் தூண் அமைப்பு போன்று காணப்படுகின்றன. தூண்களின் நடுவில் பட்டையுடன் கூடிய தரங்கப் போதிகைகள் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. குடைவரையில் இரு வாயிற்காவலர் சிற்பங்கள் பக்கத்திற்கு ஒன்றாக நின்ற நிலையில் நேர்நோக்கியவாறு காட்சியளிக்கின்றன. இவ்விருவரும் கதையைக் கையில் பிடித்து சிறிது சாய்ந்த நிலையில் காணப்படுகின்றனர். கதையின் மீது பாம்பு சுற்றியுள்ளது. இரு வாயிற் காவலர்களும் அக்கமாலை அணிந்துள்ளனர். இருவரில் ஒருவர் மட்டுமே முப்புரி நூலுடன் காணப்படுகின்றார். கைகளில் சர்ப வளையங்களும், மணிகளால் கோர்த்த கண்டியும், கடி பந்தமும் உதரபந்தமும் பெற்று இவர்கள் காணப்படுகின்றனர். கருவறையின் உள்ளே தாய்ப்பாறையிலேயே குடையப்பட்ட சதுரவடிவ இலிங்கத் திருமேனி காணப்படுகிறது. இவர் "ஜெயந்தவனேசுவரர்" என்று கூறப்படுகிறார். கல்வெட்டுக்களில் இவ்விறைவன் திருநலக்குன்றத்துப் பரமேஸ்வரர்" என்றும் "திருமூலட்டானத்துப் பெருமானடிகள்" என்றும் குறிக்கப்படுகின்றார். கருவறையின் முன்புறம் மேல்பகுதியில் பூதகணங்கள் நான்கு புடைப்புச் சிற்பங்களகக் குடையப்பட்டுள்ளன. கருவறையின் வலப்பக்கம் வலம்புரி விநாயகரின் புடைப்புச் சிற்பம் ஒன்று கோட்டத்தில் காணப்படுகிறது. இதன் அருகில் தனிச்சிற்பங் களாக சண்டிகேஸ்வரரும், சோமாஸ்கந்தரும் காணப்படுகின்றனர். வலம்புரி விநாயகர் நான்கு கைகளுடன் உள்ளார். கீழிரு கைகளில் ஒன்றில் மோதகமும் மற்றொரு கை தொடை மீது இறுத்தியும் காணப்படுகிறது. இவ்விநாயகருக்குச் சற்றுத் தொலைவில் சப்தமாதர்களின் புடைப்புச் சிற்பத் தொகுதி காணப்படுகிறது. குடைவரையின் தென்பகுதியில் சௌந்திர நாயகித் தாயாரின் சன்னதி கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே பாறையில் புடைப்புச் சிற்பமாக பிறிதொரு விநாயகர் சிற்பம் மிகப்பெரிய அளவில் குடையப்பட்டுள்ளது. இவர் இடம்புரி விநாயகராகக் காட்சியளிக் கின்றார். இதற்கும் வடக்கே சிறிது தள்ளி உள்ள குறுகிய பாறையில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை யாவும் குடைவரைக்கும் பிற்பட்ட காலப்பகுதியைச் சார்ந்தவை. குடுமியான் மலைக் குடைவரைக்கு தெற்குப் பகுதியில் உள்ள பாறையில் புகழ்பெற்ற இசைக்கல்வெட்டு காணப்படுகிறது. ஏழு பகுதிகளுடன் பல உட்பிரிவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இவ்விசைக் கல்வெட்டு உருத்திராச்சாரியார் என்பவரின் மாணவர் ஒருவரால் இயற்றப்பட்டது. "பரிவாதினி" என்ற இசைக்கருவி குறித்தும் பிறிதொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இக்குடைவரையின் அமைப்பு கொண்டு இதன் காலத்தை 8-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். பாண்டிய நாட்டில் "மாகேசுவரர்" பிரிவுக் குடைவரைகளில் குடுமியான் மலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. சப்தமாதர்களின் சிற்பங்களும், புகழ்பெற்ற இசைக்கல்வெட்டு இயற்றிய “உருத்திராச்சாரியர்" பற்றியக் குறிப்பும் இக்குடைவரை "மாகேசுவரர்" பிரிவைச் சார்ந்தது எனக் கட்டியம் கூறுகின்றன.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் குடுமியான்மலை விஷ்ணு கோயில், குடுமியான்மலை இசைக்கல்வெட்டு
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் திருநலக்குன்றம் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள கோயில் மூலவர் "சிகாநாதர்" எனக் குறிக்கப்படுகிறார். இப்பெயரை வைத்தே இவ்வூரும் "குடுமியான் மலை" எனப்படுகிறது. இவ்வூரில் உள்ள குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குடைவரை காணப்படுகிறது. இதன் மேல் பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகள் காணப்படுகின்றன. இங்கு சமணர்கள் தங்கியிருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. குகையின் தரைப்பகுதியில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. மேலும் இதன் அருகில் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன.
குறிப்புதவிகள்
குடுமியான் மலை குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 249
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்