வரலாற்றுச் சின்னம்
சொக்கம்பட்டி குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் சொக்கம்பட்டி குடைவரை
அமைவிடம் பேச்சிப்பாறை
ஊர் சொக்கம்பட்டி
வட்டம் கடையநல்லூர்
மாவட்டம் தென்காசி
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம் சொக்கம்பட்டி என்னும் ஊருக்கு அருகில் உள்ள பேச்சிப்பாறையில் இக்குடைவரை அமைந்துள்ளது. இக்குடைவரை இரட்டைக் கருவறை அமைப்பு உடையதாகும். இதில் சிவன் கருவறையில் சிற்பங்கள் இல்லை. திருமால் கருவறையில் சிற்பம் செதுக்குவதற்கான கல் மட்டும் உள்ளது. அக்கல்லின் கீழ்ப்பகுதியில் அரசனும் அரசியும் மண்டியிட்டு வணங்குவது போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. ஆனால் திருமால் உருவம் செதுக்கப் படவில்லை. மேலும் சொக்கம்பட்டி குடைவரை முக மண்டபத்தின் பின் சுவரில் திருப்பரங்குன்றம் குடைவரையில் இருப்பது போல மூன்று மாடக் குழிகள் வெட்டப் பட்டுள்ளன. ஆனால் அவற்றில் சிற்ப உருவங்கள் செதுக்கப் படவில்லை. இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது சொக்கம்பட்டி குடைவரை திருச்சி கீழ்க்குடைவரை, திருப்பரங்குன்றம் குடைவரை ஆகிய இரு குடைவரைகளின் இணைவாகத் தோன்றுகிறது. மேலும் சொக்கம்பட்டி குடைவரையானது முழுமையாகச் செதுக்கப் படாத குடைவரையாகும். இக்குடைவரையின் முன்பகுதியில் இரண்டு ஆண் பெண் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இவர்கள் இளவரசன், இளவரசி போலக் காணப்படுகின்றனர். ஆண் சிற்பம் ஒரு கையில் வாள், மற்றொரு கையில் மலர் தாங்கியுள்ளது. பெண் சிற்பம் மலர் ஏந்தி நிற்கிறது. இளவரசனின் மகுடத்தை மூன்று தலைப் பாம்பு அழகு செய்கிறது. இவ்விரண்டு புடைப்புச் சிற்பங்களும் மிக அழகாகச் செதுக்கப் பட்டுள்ளன. கருவறைகளின் இருமருங்கிலும் துவார பாலகரது புடைப்பு உருவங்கள் அழகுடன் திகழ்கின்றன. குடைவரையின் முகப்பில் பூத கணங்கள் பல பல்வேறு விதமான நிலைகளில் சிறு சிறு உருவங்களாகப் படைக்கப் பட்டுள்ளன.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை சமணர் சிற்பங்கள்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
தென்காசியிலிருந்து மதுரை செல்கின்ற வழியில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருபது கி.மீ. தொலைவில் சொக்கம்பட்டி அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து கருப்பாந்தி அணைக்கட்டிற்குச் செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பேச்சிப் பாறைப் பகுதி உள்ளது. இங்குள்ள மலைச்சரிவில் குடைவரை காணப்படுகிறது. எனவே இது "பேச்சிப்பாறைக் குடைவரை அல்லது பேச்சிக்கோயில்" என்றும் கூறப்படும். இவ்வூரில் முற்காலப் பாண்டியர்களின் குடைவரைக்கோயிலொன்று உள்ளது. இக்குடைவரை எளிமையுடன் சிற்ப வேலைப்பாடுகள் அற்று உள்ளது. முகப்பு மண்டபத்தில் இரு பெரிய தூண்களும் அதற்கு நேர் எதிரே பக்கவாட்டில் இரு அரைத்தூண்களும் உள்ளன. தூண்கள் கீழ் இருந்து மேல்வரை சதுரமாகவே அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் தொடக்கநிலைக் குடைவரைகளுக்கு சொக்கம்பட்டிக் குடைவரை சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதை எளிமையான தூண் அமைப்பு உணர்த்துகிறது. இக்குடை வரையின் அமைப்பு கொண்டு இது மலையடிக்குறிச்சி குடைவரைக்கும் முற்பட்டதாக இருக்கலாம். இக்குடைவரை திருமால், சிவனுக்காக அமைக்கப்பட்ட குடைவரையாகும்.
குறிப்புதவிகள்
சொக்கம்பட்டி குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_MON_00106/TVA_MON_00106_தி...

  • TVA_MON_00106/TVA_MON_00106_தி...

  • TVA_MON_00106/TVA_MON_00106_தி...

  • TVA_MON_00106/TVA_MON_00106_தி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 414
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்