அதிசய மனிதர்... அறிவியலாளர் ஜி.டி.நாயுடு !
(23.03.1893 – 04.01.1974)

மக்களின் நன்மைக்கே மோட்டார் தொழிலினை
மாநிலத்தில் ஓங்க செய்தானடி
திக்கெல்லாம் கொண்டாட ஜி.டி. நாயுடுவின்
தீரத்தைப் புகழ்ந்து கும்மியடி

மலிவு விலைதனில் ரேடியோவும் பெரும்
மதிப்புமிகும் ரேஸர் பிளேடுகளும்
பொலிவுற தந்து புகழடைந்தான் அந்தப்
புண்ணியனைப் பாடி கும்மியடி

- ஜி.டி.நாயுடு கும்மி, தேவகோட்டை பாலம்மாள் பாடியது.

இந்திய வரலாற்றில் அறிவியலாளர் ஒருவருக்கு, அவரைப் புகழ்ந்து மரபிலக்கியம் ஒன்று பாடப்பட்டதென்றால், அது ஜி.டி.நாயுடு அவர்களுக்கு மட்டும்தான். ஜி.டி.நாயுடு அவர்கள் குறுநில மன்னரல்லர்; எனினும் மன்னர்களுக்கு நிகராகச் சிற்றிலக்கியம் அவர்மீது பாடப்பட்டது; ஏனெனில் அவர் ஆற்றிய அறிவியல்சார் கல்விப்பணிக்கும், சமூகத்தின் அறியாமை நீக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் மக்கள் அளித்த மாட்சிமை அடையாளம்தான் தேவகோட்டை பாலம்மாள் என்னும் பெண்பாவலர் பாடிய ஜி.டி.நாயுடு கும்மி.

பிறப்பும் பன்முகத் திறமையும்

கோவை மாவட்டம், கலங்கல் என்னும் சிற்றூரில் 23.03.1893 அன்று பிறந்தவர் ஜி.டி.நாயுடு. துரைசாமி என்பது இவரின் இயற்பெயர். கோபாலசாமி இவரின் தந்தையார்; கோபாலசாமி துரைசாமி என்பதன் சுருக்கமே ஜி.டி.

தொழில்துறைவித்தகர், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் அறிவியல் கண்டுபிடிப்பாளர், திறன்மிகு நிர்வாகி, சித்த மருத்துவர், உயிரியல் விஞ்ஞானி, வேளாண் ஆராய்ச்சியாளர், நிழற்படக் கலைஞர், கட்டடக்கலை நிபுணர், ஆட்டோமொபைல் துறையின் அண்ணல், பகுத்தறிவுவாதி, கல்வியியல் ஆலோசகர், பேச்சாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தக் கொள்கையாளர், அரசியல் கருத்தாளர் எனப் பன்முகங்கள் ஜி.டி.நாயுடு அவர்களுக்கு உண்டு.

வேளாண்கூலிகளுக்குக் குறைந்த கூலியைக் கொடுத்த நிலக்கிழார்களுக்கு எதிராக இளம்வயதில் போராடியவர், பின்னாட்களில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சங்கம் கண்டார்.

கண்டுபிடிப்புகளின் மன்னன்

மாந்தநேயம் கொண்ட இந்தத் தமிழ்நாட்டு அறிவியலாளரின் கண்டுபிடிப்புகள் ஏராளம்; அதனால் இவர் அதிசய மனிதர் என மக்களால் அடையாளப்படுத்தப்பட்டார். அதிசய ரேடியேட்டர், வாக்குப் பதிவு இயந்திரம், ஒளி சமனக் கருவி, ராடர்களில் பயன்படும் மைக்கா கெப்பாசிடர், கார்பன் ரெசிஸ்டர், கால்குலேட்டர், சலவை இயந்திரம், கிரைண்டர், காசு போட்டால் பாட்டுப் பாடும் இயந்திரம் இரும்புச் சட்டங்களில் வெடிப்புகளைக் கண்டுபிடிக்கும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, ஒலிப்பதிவு இயந்திரம், டிக்கெட் தரும் இயந்திரம் என இவரின் கண்டுபிடிப்புகள் எண்ணற்றவை. இவர் கண்டுபிடித்த டீசல் நாசில், அயல்நாட்டுத் தயாரிப்பைவிட மேன்மையானது எனப் பாராட்டப்பெற்றது. ஜெர்மனியின் கிரண்டிக் ரேடியோ நிறுவனம், ஜி.டி.நாயுடுவின் ரேடியோ தயாரிப்பை, தன்பெயரில் வெளியிட வேண்டியது. புதிய முறையிலான 16 எம்.எம் புரெஜெக்டர், 640 பூட்டுக்களைத் திறக்கவல்ல மாஸ்டர் கீ என ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை விவரித்துக்கொண்டே செல்லலாம்.

ரேசன்ட் பிளேட் (Rasant Blade): 1932 இல் இவர் கண்டுபிடித்த ரேசன்ட் பிளேடு என்னும் சவரக் கத்தி அரிய கண்டுபிடிப்பாகும். ஓர் அங்குலத்தில் 1/200 குறுக்களவு உடைய இந்த பிளேடின் இருமுனைகளையும் ஒன்றாகச் சேர்த்து வளைத்தால்கூட ஒடியாத தன்மையுடையது. ஐந்நூறுமுறைக்கும் மேலாக முகம் மழிக்கும் திறனைக் கொண்டது. 1962 ஆம் ஆண்டுவரை இதற்கு இணையான மழிப்புக் கத்தி உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தொழில் மற்றும் விவசாயம்

1933 இல் யூ.எம்.எஸ். என்னும் கூட்டுறவு முறையிலான பேருந்து நிறுவனத்தைத் தொடங்கி வெற்றியடைந்தார். பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியவர்; 1964 ஆம் ஆண்டு கணக்கின்படி ஜி.டி.நாயுடு, 64 தொழில் நிறுவனங்களை நடத்திவந்தாரென அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தம்முடைய அறிவியல் அறிவை, தொழில்திறமையை, தாம் மட்டும் பயன்படுத்தாமல் தொழில்நடத்துவோர் அனைவருக்கும் ஆலோசனைகளை வழங்கியவர்.

கோவை போத்தனூரில் வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார். பருத்தி, வாழை, துவரை, பப்பாளி, ஆரஞ்சு, காலிபிளவர், சோளம் ஆகியவற்றில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்கன. 1948 இல் அறிவியலாளர் சர்.சி.வி.இராமன் இவருடைய வேளாண்பண்ணைக்கு வருகைதந்து, ஜி.டி.நாயுடு அவர்களின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டினார்.

சித்த மருத்துவ ஆராய்ச்சி

சித்தமருத்துவம் அவருக்கு விருப்பமான மருத்துவமுறை; இளம்வயதில் சித்தவைத்திய மருத்துவ நூல்களைப் படித்து, தன் மருத்துவப் புலமையைப் பெருக்கிக்கொண்டார். கோவை போத்தனூரில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். மக்களுக்காக இலவச சித்தவைத்திய மருத்துவமனையையும் தொடங்கி நடத்திவந்தார். நீரிழிவு நோய்க்காக, டயபயடிக் தூள், வெட்டைநோய்க்காக வியோகோடயட்டிக் முதலிய மருந்துகளை இந்த ஆய்வுமையத்தின் மூலம் கண்டுபிடித்தார். டயபயடிக் தூள் ஆறே மாதத்தில் நீரிழிவு நோயைக் குணப்படுத்தியது. வெள்ளைப்படுதல் நோய்க்கு ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த மருந்தை அமெரிக்க நாட்டின் பைசர்கல் நிறுவனம் அங்கீகரித்தது.

கால்வலி, இருமல், மூலம், ஆஸ்துமா முதலிய நோய்களுக்கும் புதிய மருந்துகளைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் ஜி.டி.நாயுடு அவர்கள். 1.3.1958, 19.1.1959 ஆகிய நாள்களில் மேற்கு ஜெர்மனி ஸ்டார்கார்ட் நகரில் சித்த மருத்துவம் தொடர்பாகச் சொற்பொழிவு செய்யும் அளவுக்கு, அவர் சித்த மருத்துவத்தில் தேர்ச்சிபெற்றிருந்தார்.

கல்வியும் சமூகப் பணியும்

ஆர்தர்ஹோப் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி இரண்டும், பொறியியல் இளையோரிடம் பரவ அவர் செய்த பெருஞ்செயல். இந்தப் பொறியியல் கல்லூரியில் பத்தாம் வகுப்பில் தேறாத மாணவர்களை மட்டும் சேர்த்து, கற்பித்து அவர்களைப் பொறியியல் பட்டதாரிகளாக ஆக்கினார். மழைக்குக்கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர், ஆர்தர்ஹோப் பாலிடெக்னிக்கின் முதல்வராக இருந்தார். 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள நிறுவனம், பாலிடெக்னிக்கிலும் பொறியியல் கல்லூரியிலும் ஜி.டி.நாயுடு அவர்கள் ஆற்றிய ஆட்டோமொபைல் தொடர்பான 18 விரிவுரைகளை 2,000 பவுண்டிற்கு வாங்கிச்சென்றது. கருவிலே திருவுடையார் என்பதை மறுப்பவர் ஜி.டி.நாயுடு; கல்வி என்பது பயில, பயில வருவது என்னும் கொள்கையர் அவர்; கல்வியிலும் வேலையிலும் பால்வேறுபாட்டிற்கு எதிராக இயங்கினார்; 12 வயது பெண்குழந்தை ஒருவருக்கு வானொலி பெட்டி தயாரிக்கக் கற்றுக்கொடுத்து, மற்றவர்கள் முன்னிலையில் எவருடைய உதவியின்றி, அக்குழந்தையை, தானே வானொலிப் பெட்டியைத் தயாரித்து செய்துகாட்டச் செய்தார். அதுமட்டுமின்றி, அவருடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வானொலிப் பெட்டி செய்வதில் பயிற்சி அளித்த மேதை அவர்.

தொழிலாளர்களுக்கான மலிவுவிலை வீடுகளை உருவாக்கியது இவருடைய பொறியியல் அறிவு. முன்னாள் குடியரசு தலைவர் வி.வி.கிரி அவர்கள், காலையில் இத்திட்டத்திற்கான வீடுகளுக்கு அடிக்கல்நாட்டிவிட்டு ஓய்வெடுக்க, மாலைக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அவராலேயே திறந்துவைக்கப்பட்டது.

கலை, ஆவணக்காப்பாளர்

நிழற்படங்கள் எடுப்பதிலும் திரைப்பட கேமிராவை இயக்குவதிலும் பெருவிருப்பம் கொண்டவர்; முசோலினி, ஹிட்லர், இங்கிலாந்து மன்னர் ஆகியோரைச் சலனப்பட கேமிராவில் பதிவுசெய்தவர். தம்வாழ்நாள் சாதனைப் பணிகளை நிழற்படங்களாகப் பதிவுசெய்த ஆவணக்காப்பாளராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர். இராதா அவர்களின் புரட்சிகர நாடகங்களுக்கு எவரும் இடம்தராத நிலையில், தமக்குச் சொந்தமான இடத்தில் நாடகங்களை நடத்த உதவியவர் ஜி.டி.நாயுடு. 1967 ஆம் ஆண்டு கோவையின் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தை நடத்த, எவரும் இடம்தராதபோது மிரட்டல்கள் வந்தநிலையிலும் தமக்குச் சொந்தமான பிரெசிடெண்ட் ஹாலில் கூட்டத்தை நடத்த இலவசமாக இடம் தந்தார்.

கொள்கையும் நட்பும்

ஆரம்பக் கல்வியே பயிலாத ஜி.டி.நாயுடு, பெரும் நூலகத்தைச் சொந்தமாக வைத்திருந்தார். அவருடைய தொகுப்பிலிருந்து 30 ஆயிரம் புத்தகங்களை அந்நாளைய கோவை நகரமன்றத்திற்கு அன்பளிப்பாக அளித்தார். பொதுவிழாக்களில் கலந்துகொள்ளும்போது, இவருடைய உரையை சிறுநூலாக அச்சடித்து எடுத்துச் சென்று கூட்டத்தினருக்குக் கொடுப்பது இவருடைய வழக்கம்.

பெருமைமிக்க ஆளுமைகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் நட்பும் தோழமையும் இருப்பினும், அவற்றைத் தம் வணிகத்திற்கோ, தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கோ, சுயநலனுக்கோ ஒருநாளும் அவர் பயன்படுத்தியதில்லை. சர்.சி.வி. இராமன் போன்ற அறிவியலாளர்கள் ஆங்கிலேய அரசு வழங்கிய சர் பட்டத்தைப் பெற்றகாலத்தில், திவான் பகதூர், இராவ் பகதூர், சர் முதலிய ஆங்கிலேயப் பட்டங்கள் தேடிவந்த போதிலும் அவற்றை ஏற்க மறுத்த நாட்டுப்பற்றாளர் ஜி.டி.நாயுடு. விடுதலைக்குப் பின் பல்கலைக்கழகங்கள் பல, டாக்டர் பட்டங்களை அளிக்க முன்வந்தபோதும் அவற்றைப் பெறாது மறுத்துவிட்டார். ஜி.டி.நாயுடு அவர்களும், தந்தை பெரியார் அவர்களும் 1924 ஆம் ஆண்டுமுதலே நெருங்கிய நண்பர்கள் ஆவர். “ஜி.டி.நாயுடு அவர்கள் தமிழ்நாட்டின் நிதி; இவருடைய புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும்” என்பது பெரியாரின் ஆசை.

மக்களுக்குக் கல்வியையும் அறிவியலையும் மட்டும் வாரிவழங்கவில்லை; பொருளையும் வாரிவழங்கினார்; உலகப் போர் முடிவுற்ற நிலையில் பங்கு பத்திரங்களை கோபால் பாக்கின் முன் நின்று பொதுமக்களுக்கு அள்ளிக்கொடுத்த கொடைவள்ளலாகவும் விளங்கினார்.

ஒன்றிய அரசு, அவரின் கண்டுபிடிப்புகளுக்கு பாராமுகம் காட்டியது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஒன்றிய அரசின் நிதி அமைச்சகத்தோடு, வருமானவரி தொடர்பாகத் தொடர்ந்து யுத்தம் நடத்தியவர் அவர். “சிந்தனையாளரான ஜி.டி.நாயுடு அவர்களை மாநில அரசும், இந்திய அரசும் இதுவரை பயன்படுத்தவில்லை; இனியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று நீதிக்கட்சி தலைவரான பி.டி.இராஜன் கூறியது பொருத்தமான ஒன்று.

மறைவும் புகழும்

04.01.1974 அன்று தமிழ்நாட்டின் அறிவியலாளர் ஜி.டி. நாயுடு அவர்கள் இயற்கையெய்தினார்; இருப்பினும் அவருடைய பெயரால் அமைந்துள்ள அறிவியல் அருங்காட்சியகங்கள், கல்விக்கூடங்கள் வழியாக இன்னும் அவர் பொதுமக்களுக்கு அறிவியலைக் கற்றுக்கொடுத்துவரும் ஆசானாக வலம் வருகிறார். தமிழ்நாடு அரசு கோவையில் அமைத்துள்ள, மாநிலத்திலேயே மிக நீண்ட பாலத்திற்கு அறிவியலாளர் ஜி.டி.நாயுடு அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஜி.டி.நாயுடு மேம்பாலம் எனப் பெயரிட்டு மகிழ்ந்தது. தமிழ்நாட்டு அறிவியலாளர் என்று தமிழர்களால் கொண்டாடப்படும், பள்ளிக்குச் சென்று பயிலாமல், தாமே பயின்ற மேதை ஜி.டி.நாயுடு அவர்களின் திருவுருவச்சிலை அமைக்கப்படவுள்ளது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழ் மின்நூலகம் ஜி.டி.நாயுடு அவர்களைச் சிறப்பிக்கும்விதமாக இந்தச் சிறப்புப் பக்கத்தை உருவாக்கியுள்ளது.

அதிசய மனிதர், மோட்டார் மன்னன், இந்தியாவின் நப்பீல்டு தமிழ்நாட்டு அறிவியலாளர் ஜி.டி.நாயுடு அவர்களின் வரலாற்று நூல்கள், அவர் பதிப்பித்த நூல்கள், எழுதிய கட்டுரைகள், நிழற்படத் தொகுப்புகள், அவரைப் பற்றிய இதழ்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாக் கொண்டுள்ளது இந்த சிறப்புப் பக்கம்.

“ஜி.டி.நாயுடுவின் அறிவைச் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியருக்கு, அவருடைய கண்டுபிடிப்பும் அறிவும் பெரும்கருவூலங்களாக அமையும்”
- பேரறிஞர் அண்ணா

என அறிஞர் அண்ணா கூறியதைத் தமிழ்நாடு அரசு அவருடைய சிந்தனைகளைக் கருவூலமாக்கி வெளியிட்டு நனவாக்கியுள்ளது.

“அறிவென்பது அறிவியலே”