வரலாற்றுச் சின்னம்
திருவெள்ளறை ஜம்புநாதசாமி கோயில் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | திருவெள்ளறை ஜம்புநாதசாமி கோயில் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | ஜம்புநாதசாமி கோயில் |
| ஊர் | திருவெள்ளறை |
| வட்டம் | திருவெள்ளறை |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
திருவெள்ளறையில் உள்ள சுவேதகிரி என்ற மலைச்சரிவில் மேலும் ஒரு குடைவரைக் கோயில் காணப்படுகிறது. குடைவரையின் முகப்பில் நான்கு பெரிய தூண்களும் மேற்புறமும் கீழ்ப்புறமும் சதுரமாகவும் நடுவில் எட்டு பட்டைகள் கொண்டதாகவும் இது அமைந்துள்ளது. இரண்டு அரைத்தூண்கள் பக்கவாட்டுச் சுவரையொட்டி பிடிப்பு ஏதும் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடையே வட்டமான போதிகை உருவாக்கப்பட்டுள்ளது. இக்குடைவரை அந்தராளம் மற்றும் கருவறையைக் கொண்டதாக உள்ளது. கருவறையின் உள்ளே தாய்ப்பாறையிலேயே இலிங்க உருவம் குடையப்பட்டுள்ளது. வடஜம்பு நாதர் என இவர் குறிக்கப்படுகின்றார். கல்வெட்டுகளில் இவர் "திருஅனைக்கல் மகாதேவர்" எனக் குறிக்கப்படுகின்றார். கருவறையை ஒட்டித் தெற்குப் பகுதியில் உள்ள கோட்ட மொன்றில் திருமால் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் புண்டரிகாக்சன் என்ற பெயருடன் சிற்பமாகக் காணப்படுகிறார். அடுத்த கோட்டத்தில் விநாயகப் பெருமாள் எழில் கொண்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்குடைவரையும் "ஷன்மதக் கொள்கைப்படி" அமைந்துள்ளது. கோட்டங்களில் வடிவங்கள் ஏதும் காணப்படவில்லை. வடபுறத்தில் பிற்காலத்தைச் சார்ந்த ஜம்பு மகரிஷியும், காலபைரவரும் உள்ளனர் குடைவரையை இணைத்து முகமண்டபம் ஒன்று பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் மேல் கபோத வரிசையின் கீழே பூதகண அமைப்பு காணப்படுகிறது. வாயிலின் இருபுறமும் உள்ள வாயிற்காப்போர் திரிபங்க நிலையில் இரு கைகளுடன் மானிட உருவில் காணப்படுகின்றனர். தென்புறம் உள்ளவர் கதையின் மேல் கையை ஊன்றிச் சாய்ந்தவாறு காட்சியளிக்கின்றார். வடபுறம் உள்ளவர் ஒரு கையை கதையின் மேலும் மற்றொரு கையில் பூவும் பெற்று நேராகப் பார்க்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளார். விநாயகர், முருகன், அகிலாண்டேஸ்வரி ஆகிய கடவுளர்க்குப் பிற்காலத்தில் தனித்தனி சன்னதிகள் இங்கு கட்டப்பட்டுள்ளன. மூன்றாம் நந்திவர்மனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டும் வரகுணபாண்டியனின் பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டும், முதற்பராந்தகனின் 32 ஆம் ஆண்டுக் கல்வெட்டும், இராச இராச சோழனின் 11 ஆம் ஆண்டுக் கல்வெட்டும் இக்குடைவரைக் கோயிலில் காணப்படுகின்றன. இவற்றை எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்த குடைவரைகளாகக் கருதலாம். திருவெள்ளறை பல்லவர் பகுதிக்கும் பாண்டியர் ஆட்சிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் இக்குடைவரைகளில் உள்ள சிற்பங்கள் முத்தரையர் கலைப்பாணி சிற்பங்களை போன்று காணப்படுகிறது. எனினும் இவை பாண்டியர்களின் கலைச் செல்வங்களே ஆகும்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | சுவஸ்திக வடிவ கிணறு, சுவேதாம்பரர் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் காவேரியின் வடமேற்கில் திருவெள்ளறை எனும் சிற்றூர் அமைந்துள்ளது. திருவெள்ளறையிலிருக்கும் குடைவரையாக ஜம்புநாதசாமி கோயிலும் புண்டரீகாட்ச பெருமாள் கோயிலும் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டனுள் ஜம்புநாதசாமி கோயில் மட்டுமே குடைவரை. புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் கட்டுக்கோயில் வகையது. திருவெள்ளறையில் உள்ள சுவேதகிரி என்ற மலைச்சரிவில் இக் குடைவரைக் கோயில் காணப்படுகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 166 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |