வரலாற்றுச் சின்னம்
நாமக்கல் நரசிங்கப்பெருமாள் கோயில் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | நாமக்கல் நரசிங்கப்பெருமாள் கோயில் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | நரசிங்கப்பெருமாள் குடைவரை |
| ஊர் | நாமக்கல் |
| வட்டம் | நாமக்கல் |
| மாவட்டம் | நாமக்கல் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
அரங்கனின் குடைவரைக்கோயிலின் நேர் எதிரே மலையின் மறுபக்கம் அதாவது கிழக்கு நோக்கியவாறு இக்குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. மலையின் அடிவாரத்தில் சற்றுத் தாழ்வாகவே இக்குடைவரை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் மண்டபங்கள் யாவும் இதன் முன்புறத்தைப் பெரிதும் அடைத்துக் கொண்டு இங்கு ஒரு குடைவரைக் கோயில் இருப்பதை மறைத்தவாறு குடைவரை அமைப்பையே மாற்றியுள்ளன. கோபுர வாயிலும், இருபுறமும் மலைப்பாறையை ஒட்டியவாறு "ப" வடிவத்தில் அமைந்துள்ள திருமதிலும் இடது பக்கம் மதிற்சுவற்றை யொட்டி குளமும், பிரகாரத்தில் தாயார் (அம்மன்), வேணுகோபாலன் சன்னதிகள், மடப்பள்ளி, வாகன மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் போன்ற பல கட்டிடங்கள் இங்கு உள்ளன. இம்மண்டபங் களைக் கடந்து உள்ளே சென்றால் குடைவரைக்கோயிலை அடையலாம். குடைவரை மண்டபத்தின் முகப்பில் முன்புறமுள்ள இரண்டு தூண்களை இணைத்து பாதுகாப்பாக பிற்காலத்தில் அமைக்கப்பட்ட சுவரின் நடுவில் கதவும் உள்ளன. இப்பகுதியிலிருந்து பிற்கால இணைப்புகளான மண்டபம், சிறு சன்னதிகள் போன்றவற்றை குடைவரையுடன் இணைத்துள்ளனர். இதற்காகக் குடைவரையில் பாறைப்பகுதியின் கீழ்த் தரைப்பகுதி மூடப்பட்டுள்ளது. குடைவரை தரையிலிருந்து சிறிது மேலே அமைக்கப்பட்டுள்ளதால் குடைவரையை அடைய இருபக்கங்களிலும் கைப்பிடியுடன் கூடிய படிக்கட்டுகள் குடைவரை குடையப்பட்ட காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. தரை மட்டத்திலிருந்து 6 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி தற்பொழுது பாறைப் படிக்கட்டுகளை மூடி இரண்டு சிறிய சன்னதிகளாக மாற்றியுள்ளதுடன் நிலவறை போன்ற அமைப்பையும் இங்கு உருவாக்கிச் செப்புப் படிமங்களை வைக்கும் அறையாக விஜயநகர காலத்தில் பயன்படுத்தி உள்ளனர். பிற்காலச் சோழர் காலம் வரை இக்குடைவரை தனித்தே இருந்துள்ளமை நிலவறையின் கீழ்ப் பாறைப்பகுதியில் உள்ள பிற்காலச் சோழர்களின் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இக்கல்வெட்டுக்களில் "ஆரைக்கல்" என இவ்வூர் குறிக்கப்படுகிறது. குடைவரையில் அர்த்த மண்டப அமைப்பையும் பின்சுவற்றின் நடுவில் மூலச்சிற்பமாக விளங்கும் நரசிம்மருக்கு எதிரே ஒரு மண்டபம் போன்ற விதான அமைப்பும் காணப்படுகிறது. முன்புறம் நான்கு தூண்களும் பின்புறச்சுவரை யொட்டி இரண்டு தூண்களும் கொண்ட இம்மண்டப அமைப்பில் பின்புறச் சுவற்றில் புடைப்புச் சிற்பமாக மிகப் பெரிய அளவில் நரசிம்மர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் இருபுறமும் சூரிய, சந்திரர்கள் சாமரம் வீசியவாறு நிற்கின்றனர். நான் முகனும் சிவபிரானும் இருபக்கமும் காணப்படுகின்றனர். முன்புறம் அதிட்டான அமைப்பும் மிகவும் அழகாக உள்ளது. முன்புறமுள்ள இரு தூண்களும் கீழும் மேலும் சதுரமாகவும் நடுவே எட்டு பட்டைகளுடனும் சதுரத்தில் தாமரை மலர் வடிவங்களும் கொண்டு வழக்கமான முறையில் அமைக்கப் பட்டுள்ளன ஆனால் உள் மண்டபத்தில் நான்கு தூண்களும் சற்றே அளவில் சிறியதாகவும் இவற்றில் மூன்று பகுதிகள் சதுரமாகவும் தாமரை மலர் அமைக்கப்பட்டும் மற்று இரு பகுதிகள் எட்டு பட்டைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயின் சுவற்றை யொட்டியுள்ள இரு தூண்களும் முழுவதும் சதுரமாக உள்ளன. தூண்களின் மேலே போதிகை மற்றும் உத்தர அமைப்பு உள்ளது. கருவறை மண்டபத்தின் மேலே கூடுகள் வளைவுகள் கொண்ட கபோத அமைப்பும் உள்ளது. கூடுகளின் நடுவே மனித உருவங்கள் காணப்படுகின்றன. மூலச்சிற்ப அமைப்பான நரசிம்மர் தவிர அதன் இரு பக்கமும் பக்கவாட்டுச் சுவர்களிலும் முன் சுவற்றிலுமாக முழுவதும் சிற்ப வரிசைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில் திருமாலின் நரசிம்ம அவதாரம் மூன்று நிலைகளில் சித்தரிக்கப் பட்டுள்ளது. முதலில் வைகுண்டத்தில் பெருமாள் (நாராயணன்) தான் எடுக்கப்போகும் அவதாரம் பற்றி மற்ற கடவுளர்களிடம் எடுத்துரைக்கின்ற சிற்பத் தொகுதி உள்ளது. அடுத்து இரண்யகாசிபை வதம் செய்தலும், மூன்றாவதாக அரக்கவதம் முடிந்த பின்பு அமர்ந்த கோலத்திலும் வராக மூர்த்தியாகவும் வாமனனாகவும் அவதரித்ததை யும் சிற்பங்களாகச் சித்தரித்துள்ளனர். அர்த்த மண்டபத்தின் இடது பக்கச் சுவற்றில் வைகுந்தநாராயணன் உருவம் காணப்படுகிறது. திருமால் வைகுண்டத்தில் ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க வலது காலை மடித்தவாறும் இடது காலை தொங்கவிட்டபடியும் மேற்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். இவை கைகளில் இல்லாமல் விரல்களுக்கு மேல் தனியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன் கீழே பாலநரசிம்மர் தான் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை மற்ற கடவுளர்களுக்கு எடுத்துக் கூறுவது போன்று உள்ளது. இத்தகைய சிற்பத் தொகுதி தமிழ்நாட்டில் வேறெங்கும் அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. பின்புறம் நான்முகன் நின்ற கோலத்திலும் அரண்மேலே மேகத்தினிடையே சந்திரனும் மற்றும் திருமாலின் வலப்புறமாக நின்ற கோலத்தில் உள்ள சிவபெருமானும் அருகில் மானுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் சூரியன், மார்கண்டேயர் ஆகியோர் காணப்படுகின்றனர். வைகுந்த நாராயணன் சிற்ப அமைப்பு தமிழ்நாட்டின் கலைச்செல்வங்களில் அற்புதமானக் கலைப்படைப்பாக அமைந்துள்ளது. கருவறைப் புடைப்புச் சிற்பத்தின் இடது பக்கம் எட்டு கைகளுடன் உக்கர நரசிம்மரது உருவம் காணப்படுகிறது. வலது கால் தரையில் ஊன்றியவாறு இடது காலைச் சற்றே உயர்த்தி தொடைமீது இரண்ய காசிபுவை வைத்து, அவன் பெற்ற வரத்திற்கு ஏற்ப வதம் செய்யும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது தென் இந்தியச் சிற்பங்களில் மிகவும் அரிதாகக் காணப்படுவதாகும். வலப்புறச் சுவற்றில் வராக அவதாரச் சிற்பம் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. பூதேவியை இரண்யகாசிபுவிடமிருந்து மீட்டு இரு கரங்களில் அம்மையை அழகுறத் தூக்கி நான்கு வேதங்களையும் உருவங்களாக காட்டி கடலிலிருந்து வெளியே வருவது போன்ற திருமாலின் வராக உருவ அமைப்பு, சிற்ப உலகின் ஒரு சாதனையாக அமைந்துள்ளது. இடது புறம் வைத்த தலை அருகே ஆதிசேஷனும் வலது புறம் கருடனும், மண்டியிட்டுக் கூப்பிய கரங்களுடன் இங்கு காணப்படுகின்றனர். அர்த்த மண்டபத்தின் வலப்புறச் சுவற்றில் திருமாலின் மற்றொரு அவதாரமான வாமன அவதாரச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இவன் வலது புறம் கையில் குடை பிடித்தவாறு வாமனனின் சிறு உருவம் அவருக்கு எதிரில் கேட்டபடி மூன்றடி மண்ணை தானமாகக் கரங்க ஆதிசேஷயாக கொடுக்கும் பலிச்சக்கரவர்த்தியும் அருகே தானத்தைத் தடுக்கும் சுக்கிராச்சாரியாரும் மேலே நடந்து முடிந்த அசுவமேத யாகத்தை குறிக்கும் வகையில் குதிரை முகமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருமாலின் உலகளந்த உத்தமனாம் திருவிக்கிரமனின் உருவமும் மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பமும் சிற்பியின் கைவண்ணத்தைக் காட்டும் கலைப்படைப்பு எனலாம். வரலாற்று அறிஞர்களில் ஒருசிலர் இங்குள்ள நரசிம்மர் குடைவரைக் கோயில் பல்லவ நரசிம்மவர்மன் காலத்தியது என்பர். கல்வெட்டு எழுத்துக்களில் அமைப்பு முறைகளும் விருதுப் பெயர்களும் பல்லவ முறையிலேயே அமைந்துள்ளதால் இக்குழப்பம் ஏற்பட்டுள்ளது எனக் கருதலாம். எனினும் அதியமான்களும் அக்கால முறையைப் பின்பற்றி இருப்பதில் வியப்பேதுமில்லை. இங்குள்ள சிற்ப வேலைப்பாடுகளும் இக்குடைவரை கோயில்களின் அமைப்பும் இதனை பல்லவர்களின் கலைப்பாணியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது என உறுதியாகக் கூறலாம். தவிர இக்குடைவரை அமைந்துள்ள பகுதி அதியமான்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகும். எனவே இக்குடைவரைகள் இரண்டும் அதியமான்களின் கலைப் படைப்புகள் எனலாம்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | நாமக்கல் அரங்கநாதர் குடைவரை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரித்தாயார் ஆவார். நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார்.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 115 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |