Back
சிற்பம்
பிட்டுக்கு மண் சுமந்த சிவனார்
சிற்பத்தின் பெயர் பிட்டுக்கு மண் சுமந்த சிவனார்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
மதுரையம்பதியில் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் பிட்டுக்கு மண் சுமந்த கதையும் ஒன்றாகும். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் இக்கதை இடம் பெற்றுள்ளது. பாண்டிய மன்னன் வரகுணன் ஆட்சி காலத்தில் ஒரு பொழுது ஓயாத பெருமழை பெய்து வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. இறைவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே, உதிர்ந்த பிட்டை ஏற்றுக் கொள்வதாகக் கூறி மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். பிட்டை வாங்கி உண்ட பின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார். உண்ட மயக்கம் தொண்டருக்கும் வருமே அது பிட்டு உண்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே அவனை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. இச்சிற்பத்தில் மரத்தினடியில் பிட்டு சுட்டு விற்கும் முதியவள் வந்தியிடம், தன் கையை நீட்டி கூலியாக பிட்டு கேட்கும் சிவபெருமான். சிவன் எளியராய், தலையில் மண் கூடையை வைத்துக் கொண்டு, இடது கையால் மண் வெட்டியை பிடித்துக் கொண்டு, இடது தோளில் சாய்த்தி, கோவண ஆடையோடு, நீள் செவியராய், இளம் வயதினராய் விளங்குகிறார். மரத்தினடியில் பிட்டு விற்பதற்காக அமர்ந்திருக்கும் முதியவள் வந்திக்கிழவியோ தன் அகன்ற பிட்டு சட்டியிலிருந்து உதிர்ந்த பிட்டை எடுக்கிறாள்.
குறிப்புதவிகள்
பிட்டுக்கு மண் சுமந்த சிவனார்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்