சிற்பம்
பாசுபதமூர்த்தி
பாசுபதமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | பாசுபதமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மாமல்லபுரம் |
ஊர் | மாமல்லபுரம் |
வட்டம் | திருக்கழுக்குன்றம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
விளக்கம்
அர்ச்சுனனின் தவத்தை மெச்சி பாசுபதாஸ்திரத்தை வழங்கியருள நின்றிருக்கும் பாசுபதமூர்த்தி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மகாபாரதப் போரில் பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற பாசுபதாஸ்திரத்தை சிவனிடம் வேண்டிப் பெற அர்ச்சுனன் தவம் மேற்கொள்கிறான். துரியோதனன் அர்ச்சுனனின் தவத்தைக் கலைக்க மூசாசுரன் என்ற அரக்கனை ஏவினான். அந்த அரக்கன் பன்றி உருவெடுத்து உறுமியபடி அர்ச்சுனன்மீது பாய்ந்து அவன் தவத்தைக் கலைக்க முயன்றான். சினமுற்ற அர்ச்சுனன் பன்றியை நோக்கி தன் வில்லில் நாண் பூட்டி அம்பு ஒன்றை எய்தினான். அர்ச்சுனனின் தவத்தை மெச்சி அவனைக் காக்கும் பொருட்டு வேடர் உருத்தாங்கி வந்த சிவபெருமானும் பன்றியின் மேல் அம்பெய்தார். பன்றி வீழ்ந்தது. இருவரும் தன்னுடைய அம்பால் தான் பன்றி வீழ்ந்தது என்று வாதிட்டு சண்டையிட்டனர். வேடன் உருவில் வந்த சிவபெருமானை அறியாத அர்ச்சுனன் அவரோடு மோதுகிறான். இறுதியில் அவனுடைய உறுதியையும், தளராத ஆற்றலையும் கண்டு சிவபெருமான் தன்னுருவைக்காட்டி அவனுக்கு பாசுபத அஸ்திரம் அளித்து அருளுகிறார். மகாபாரதக் கதையில் இடம் பெற்றுள்ள இந்நிகழ்வு மாமல்லையில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. கணங்கள் புடை சூழ சிவபெருமான் பாசுபதாஸ்திரத்துடன் காட்சியளிக்கிறார். நான்கு திருக்கைகள் பெற்றுள்ள சிவபெருமான் முன் வலது கையில் இடையில் வைத்தவாறு பாசுபத அஸ்திரத்தையும் பிடித்து, வலது தோளில் சார்த்தியுள்ளார். இடது முன் கை வரத முத்திரை காட்டுகிறது. பின் வலது கை கடக முத்திரை காட்டுகிறது. பின் இடது கையில் உள்ள மழுவாய் இருக்கலாம். பூரிமத்துடன் கூடிய ஜடாமகுடம் தரித்தவராய், வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் சங்கக் குழையும் அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளியும், மணியாரம் ஒன்றும் அணி செய்கின்றன. மார்பில் துணியாலான முப்புரி நூல் விளங்குகிறது. கைகளில் தோள்வளை, மூன்றடுக்கு முன் வளைகள் ஆகியன கையணிகளாக காட்டப்பட்டுள்ளன. இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய முழங்காலுக்கு மேல் வரை உள்ள அரையாடை அணிந்துள்ளார். இடைக்கட்டு வலது பின்புறம் முடிச்சுடன் காட்டப்பட்டுள்ளது. அரைப்பட்டிகை இறுக்கத்தினால் வயிறு சற்று பிதுங்கியுள்ளது. இடது காலை ஊன்றி, வலது காலை சற்று தள்ளி தளர்வாக வைத்த நிலையில் நிற்கிறார். பாசுபதமூர்த்தியைச் சுற்றி நான்கு கணங்கள் இக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தவாறு உள்ளன. சிவனாரின் வரத கரத்தின் கீழ் நிற்கும் கணத்தின் வயிற்றில் யாளி முகம் காட்டப்பட்டுள்ளது. புன்னகைக்கும் முகத்துடன் தலையைச் சாய்த்துள்ள இக்கணம் வலது கையில் சாமரம் போன்ற ஒன்றைப் பிடித்துள்ளது . இடது கையை உயர்த்தி தன் மகிழ்வைத் தெரிவிக்கின்றது. பாசுபதமூர்த்தியின் வலது காலுக்கருகே நிற்கும் பூதகணம் வலது கையில் கடக முத்திரை காட்டுகிறது. இடது கையில் கொம்பு போன்ற ஒன்றை பிடித்துள்ளது. இக்கணம் தம் தலைவரைப் போலவே காதணிகளைக் கொண்டுள்ளது. இக்கணத்திற்கு பின்னால் நிற்கும் மற்றொரு கணம் தன் தலையைச் சாய்த்து தலைவரை ஏறிட்டு நோக்குகிறது. கழுத்தில் புலிப்பற்றாலி அணிந்துள்ளது. வலது கையில் குடுவை போன்ற ஒன்றைப் பிடித்துள்ளது. இவ்விரு கணங்களுக்கு மேலே காட்டப்பட்டுள்ள மற்றொரு கணம் குறிப்பிடத்தக்கது. இக்கணம் குரங்கு முகத்தைப் பெற்றுள்ளது. உயர்த்திய இடது கையில் சூலம் போன்ற கருவியைப் பிடித்துள்ளது. வலது கை வியப்பு முத்திரையைக் காட்டுகிறது. தன் படைகளான பூதகணங்கள் சூழ பாசுபதத்தை அளிக்க வந்திருக்கும் சிவனாரின் முன் ஏகபாதத்தில் தவம் செய்து கொண்டிருப்பது அருச்சுனனா? என்பதில் கேள்விக் குறியிருக்கிறது. உணவின்றி வற்றிய முகத்தில் குழிகள் தெரிய, தாடி, மீசையுடன், மார்பெலும்புகளும், விலா எலும்புகளும் வெளித் தெரிய, ஒட்டிய வயிற்றுடன், இரு கைகளையும் மேலே உயர்த்தி, இடது காலை ஊன்றி, வலது காலை ஏகபாதத்தில் வைத்து, இடையில் தோலாடை உடுத்தி, மார்பில் புரி நூலூடன் தவம் புரியும் இம்மனிதர் யார்? அருச்சுனனா? பகீரதனா?
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
பாசுபதமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |