வழிபாட்டுத் தலம்
திருவிற்குடி வீரட்டேசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவிற்குடி வீரட்டேசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வீரட்டானம், அட்டவீரட்டம் |
| ஊர் | திருவிற்குடி |
| வட்டம் | நாகப்பட்டினம் |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | வீரட்டானேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | ஏலவார்குழலி, பரிமள நாயகி |
| தலமரம் | துளசி |
| திருக்குளம் / ஆறு | சக்கரதீர்த்தம், சங்குதீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மாசி மாதத்தில் பெருவிழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவார சங்காபிஷேகம் விசேஷமானது. சஷ்டியில் லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. நவராத்திரி முதலியனவும் சிறப்பாக நடைபெறுகின்றன. |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | துவார பாலகரைத் தொழுது, துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார். மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உளர். அம்பாள் நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் அமைந்த நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. |
|
சுருக்கம்
சோழநாட்டு (தென்கரை)த் தலம். ஊரின் தென்புறம் விளப்பாறும் (ரக்த நதி) வடபுறம் பில்லாலி ஆறும் பாய்கின்றன. அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. சலந்தரனை சம்ஹரித்த தலம். சலந்தரனின் மனைவியான பிருந்தையை திருமால் துளசியாக ஏற்ற தலம். நகரத்தார் திருப்பணி பெற்று, கோயில் அழகாகவுள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோயிலுள் நுழையும்போது மூலவர் சந்நிதி நேரே தெரிகின்றது. நல்ல கட்டமைப்புள்ள கற்கோயில்.
|
|
திருவிற்குடி வீரட்டேசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்ல படித்துறைகளும் சுற்றுச் சுவரும் கொண்ட பெரிய குளம். தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச் சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் பிரகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன் சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்தமூர்த்தி - ‘ஜலந்த்ரவத மூர்த்தி - தலச்சிறப்பு மூர்த்தி (உற்சவத்திருமேனி) தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை ஆயுத முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து நேரே சென்றால் மூலவர் சந்நிதி. முன்னால் இடப்புறம் அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது. மண்டபத்தின் இடப்பால் நடராச சபை. எதிரில் (தெற்கு) வாயிலும் சாளரமும் உள்ளன. பக்கத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மயாளேஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | மயிலாடுதுறை - திருவாரூர் பேருந்துச் சாலையில், வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி, நாகூர்- நாகப்பட்டினம் சாலையில் சென்று, விற்குடி புகைவண்டி நிலையத்தை (ரயில்வே கேட்டை) தாண்டி, விற்குடியை அடைந்து, ‘விற்குடி வீரட்டேசம்’ என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (‘வளப்பாறு’ பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். நாகூர், நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பஸ், கார் செல்லும். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 05 Dec 2018 |
| பார்வைகள் | 23 |
| பிடித்தவை | 0 |