வழிபாட்டுத் தலம்
திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சுவேதகிரி, ஹித சேத்ரம், உத்தம சேத்ரம் |
| ஊர் | திருவெள்ளறை |
| வட்டம் | துறையூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | புண்டரீகாட்சன் (தாமரைக் கண்ணன்) |
| தாயார் / அம்மன் பெயர் | செண்பகவல்லி, பங்கயச் செல்வி |
| திருக்குளம் / ஆறு | திவ்ய தீர்த்தம், வராஹ தீர்த்தம், குசஹஸ்தி தீர்த்தம், சந்திர புஷ்கரிணி தீர்த்தம், பத்ம தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், மணிகர்ணிகா தீர்த்தம். |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். ஸ்வஸ்திக வடிவில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. |
|
சுருக்கம்
வராக அவதாரத்தை நினைவுப்படுத்தும் ஷேத்திரம். மார்க்கண்டேயரின் வேண்டுகோளின்படி வடநாட்டில் வாழ்ந்து வந்து 3700 ஸ்ரீ வைஷ்ணவர்களை இங்கே கொண்டு வந்து குடியேற்றி கோவிலையுங் கட்டிப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்தார் சிபிச் சக்கரவர்த்தி. பிரதிஷ்டை செய்ததும் ஒரு வைஷ்ணவர் காலமாகிவிடவே மிகவும் மனம் வருந்தினார். சிபி. சிபிச் சக்கரவர்த்தியின் வேதனையைத் தீர்க்க பகவான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனின் வேடங்கொண்டு மன்னனிடம் வந்து வேதனைப் படாதே, என்னையும் சேர்த்தே 3700 என கணக்கிட்டேன் என்று ஸ்ரீவைஷ்ணவர்களின் மேன்மைக்கு அடையாளமிட்ட திவ்ய தேசஇதனால்தான் “பாங்குடன் மூவாயிரத்து எழுநூற்றாள் வாழியே”என்று தாயாருக்கு திருமொழி உண்டாயிற்று. இங்குள்ள பூங்கிணற்றில் பகவானை நோக்கி தவம் செய்த பிராட்டிக்கு (பங்கயச் செல்வி) பெருமாள் செந்தாமரைக் கண்ணனாய் காட்சியளித்தார். எனவே கிருஷ்ணாவதாரத்தை மறைமுகமாக உணர்த்தும் ஸ்தலம். இதனால்தான். பெரியாழ்வாரும் இங்குள்ள பெருமாளை ஓடிவிளையாடும் கண்ணனாகப் பாவித்து பூச்சூட்டி, நீராட்டி காப்பிட்டு மகிழ்கிறார் தமது பாசுரங்களில். இங்கு எழுந்தருளியுள்ள ஜீயர் சுவாமிகளுக்கும் பங்கயச் செல்வி ஜீயர் என்னும் அழகு தமிழ்ப் பெயரே பிராட்டியின் நினைவாக இலங்குகிறது. இக்கோவிலுக்கு அருகில் “நீலிவனம்” (திருப்பைஞ்ஞீலி) என்னும் கிராமம் உள்ளது. சிவன் தன்கையில் ஒட்டிக் கொண்ட கபாலம் நீங்குவதற்காக இப்பெருமாளை வழிபட்டதால், நீலி வனத்தில் இப்பெருமாளை வழிபட்ட வண்ணமான சிவஸ்தலம் இன்றும் உள்ளது. பிரம்மனுக்கும் இத்தலத்தில் காட்சி கொடுத்தமையால் மும்மூர்த்திகளும் (மறைமுகமாக) ஒருங்கிட்ட ஸ்தலம். இங்கு ஸ்வஸ்திக்குளம் என்று சொல்லப்படும், சக்ரகுளம் ஒன்று உள்ளது. இதில் ஒரு துறையில் குளிப்பவர்களை இன்னொரு துறையில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. உத்ராயணவாசல், (தை முதல் மார்கழி வரை திறந்திருக்கும்) வழியாகவே பெருமாளை வழிபட வேண்டும். 6 மாதத்திற்கு ஒரு முறை வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே சென்று எம்பெருமானை வழிபடும் நடைமுறை இங்கு தவறாமல் பின்பற்றப்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி, சூரிய, சந்திரன், ஆதிசேடன் இவர்கள் மானிட உருவில் இங்கு நின்று பெருமாளை வழிபடுவதாக ஐதீஹம், இவ்வமைப்பில் இங்குள்ள திருக்கோலம் கண் கொள்ளாக் காட்சி, “இந்திரனோடு, பிரமன், ஈசன், இமையவரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு வந்து மறைந்தவராய் வந்து நின்றார், சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை” என்பது பெரியாழ்வாரின் பாசுரம். திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களாசாசனம்,(மொத்தம் 24 பாசுரம்) ஸ்ரீ நாதமுனிகளின் சீடரான உய்யக் கொண்டார் என்ற வைணவ மேதாவியும், முற்றுப் பெறாமல் இருந்த ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்த விஷ்ணு சித்தர் என்ற எங்களாழ்வான், (இவரது மேதாவிலாசத்தைக் கண்டு எம்பெருமானே இவரை எங்களாழ்வான் என்று சொன்னதாக ஐதீஹம்) மேற்குறிப்பிட்ட இருவரும் அவதரித்த ஸ்தலம். வைணவத்தைப் போற்றி வளர்த்த இராமானுஜர் சிலகாலம் வாசம் செய்த தலம். ஸ்ரீ சுவாமி தேசிகனும், மணவான மாமுனிகளும் மங்களாசாசனம்செய்த ஸ்தலம். பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் இக்கோவில் கட்டிடப் பணியில் தன் கலையம்சத்தைக் காட்டி மெருகூட்டினான் என்பதை பல்லவர்களின் வரலாற்றால் அறிய முடிகிறது.
|
|
திருவெள்ளறை புண்டரீகாக்ஷ பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயிலின் விமானம் விமலாக்ருதி விமானம் என்ற வகையைச் சார்ந்தது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருஎறும்பூர் கடம்பவனேசுவரர் கோயில், சீனிவாசநல்லூர்,திருப்பைஞ்ஞீலி |
| செல்லும் வழி | இத்திருவெள்ளறை திருச்சியிலிருந்து 13 மைல் தொலைவில் துறையூர் செல்லும் பாதையில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Nov 2018 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |