வழிபாட்டுத் தலம்
திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பிரம்மசிரக்கண்டீசர், வீரட்டேசர், பிரமநாதர், ஆதிவில்வநாதர், திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர் |
| ஊர் | திருக்கண்டியூர் |
| வட்டம் | திருவையாறு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| தொலைபேசி | 04362-261100, 262 222 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | பிரம்மசிரக்கண்டீஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | மங்களநாயகி, மங்களாம்பிகை |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | நந்தி தீர்த்தம், குடமுருட்டி, பிரம்மதீர்த்தம், தட்ச தீர்த்தம் |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| திருவிழாக்கள் | சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர் திருவிழா (சித்திரை மாதம்), பிரம்மோற்சவம் (வைகாசி மாதம்), அன்னாபிஷேகம் (ஐப்பசி மாதம்), ஆருத்ரா தரிசனம் (மார்கழி மாதம்) |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-11-ஆம் நூற்றாண்டு / நிருபதுங்க வர்மன், முதலாம் பராந்தகசோழன், சுந்தரசோழன், உத்தமசோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயிலில் பல்லவ மன்னன் நிருபதுங்க விக்ரமவர்மன், சோழ மன்னர்களான முதலாம் பராந்தகன், சுந்தரசோழன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர் என்று குறிப்பிடப்படுகின்றார். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | திருச்சுற்று மாளிகையின் கிழக்குப் புறத்தில் மட்டும் வடகிழக்கு மூலையில் தென்திசை நோக்கியவாறு பைரவர், மேற்கு நோக்கிய நிலையில் சப்த விநாயகர் எனும் ஏழு விநாயகர்கள், சூரியன், அமர்ந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரர், சந்திரன் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் நின்ற நிலையில் அல்லாது அமர்ந்த நிலையில் பின்புறம் ரிஷபத்தோடு காணப்படுகிறது. இத்திருச்சுற்று மாளிகையின் தூண்கள் சிமெண்ட்டால் ஆனவை. ஆகவே இது அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கக்கூடும். மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றோடு காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவார பாலகர்களுக்கு பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும் தாமரை மொட்டு ஏந்திய வீரஸ்கந்தரும் வீற்றுள்ளனர். முக மண்டபத்திலேயே மூலவரின் வலப்புறத்தில் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் இரண்டாம் திருச்சுற்றில் தேவகோட்ட மூர்த்தங்களுடன் காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் சமபாத ஸ்தானகத்தில் அம்மன் திருவுருவம் அமைந்துள்ளது. பிரம்மா மற்றும் சரஸ்வதி திருமுன் முதல் திருச்சுற்றில் விஷ்ணு துர்க்கைக்கு அருகில் கிழக்கு நோக்கிக் காணப்படுகிறது. நான்கு சிரங்கொண்ட பிரம்மா அமர்ந்த நிலையில் இருகரங்களோடு புன்னகை புரிவது போன்ற தோற்றத்துடன் சரஸ்வதிதேவியுடன் காணப்படுகிறார். சரஸ்வதி நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். பொற்காளியம்மன் திருமுன் இரண்டாம் திருச்சுற்றில் தென்திசையில் வடக்கு நோக்கிய நிலையில் சுதையினால் ஆன இரு துவாரபாலிகைச் சிற்பங்களோடு சிறு சிற்பமாகக் காணப்படுகிறது. தேவகோஷ்டத்தின் வடக்கே நான்முகன் மற்றும் சரஸ்வதி, விஷ்ணு துர்க்கை, பிரம்மா, கிழக்கே அண்ணாமலையார் (இலிங்கோத்பவர்), தெற்கே தென்முகக்கடவுள் (தக்ஷ்ணாமூர்த்தி) அதற்கு சற்று தள்ளி பைரவரும் வீற்றுள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலம். காவிரியின் தென்கரைத் தலங்களான 127 ல் 12 வது தலமாகும். சிவபெருமான் வீரச்செயல் புரிந்த அஷ்ட வீரட்டத் தலங்களில் திருக்கண்டியூர் முதலாவது தலம் ஆகும். சப்தஸ்தானங்களில் இது ஐந்தாவது தலம் ஆகும். |
|
சுருக்கம்
தற்போது கண்டியூர் என இவ்வூர் வழங்கப்பட்டாலும் இவ்வூர் பாடல்பெற்றத் தலமாகையால் திரு என்ற முன்னொட்டினைப் பெற்று திருக்கண்டியூர் எனவும் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த தலங்களுள் ஒரு தலமாதலால் திருக்கண்டியூர் வீரட்டானம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. கண்டனபுரம், ஆதிவில்வாரண்யம், பிரமபுரி என்ற சில புராணப்பெயர்கள் கொண்டும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் தினமும் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது. இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் கல்வெட்டே காலத்தால் முற்பட்டதாகும். இதன் மூலம் இக்கோயில் பல்லவர்காலம் அல்லது முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாயிருக்கலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றையும் அதை சுற்றியுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங்கள் சப்தஸ்தான தலங்களாகும். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் இத்தலங்கள் பாடப்பெற்றுள்ளன. மேலும் இந்த ஏழு தலங்களும் ஏழு முனிவர்களின் ஆசிரமங்களாகக் கருதப்படுகின்றன. திருவையாற்று ஐயாறப்பர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சுற்றிலுமுள்ள ஆறு தலங்களிலுள்ள கோயில்களையும் இணைத்துப் பெருவிழாவாக நடக்கிறது. இவ்விழாவின் 12 ஆம் நாள் விழா சப்தஸ்தானத் தலங்களில் இறைவன் வலம் வரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
|
|
திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | பெரும்பாலும் கிழக்கு திசை நோக்கியே கோயில்கள் அமைந்திருக்க விதிவிலக்காக இக்கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இரு புறமும் கல்லினால் ஆன துவாரபாலகர்கள் அணி செய்ய 5 நிலைகளுடன் அமைந்துள்ளது இக்கோயிலின் ராஜகோபுரம். மேலும் இக்கோபுரத்தின் கோஷ்டங்களில் தெய்வ மூர்த்தங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் கோபுரம் மொட்டைக்கோபுரமாக தளங்கள் ஏதுமின்றி உள்ளது. இக்கோபுர வாயில் அணுக்கன் திருவாயில் என அழைக்கப்படுகிறது. இதன் மேல் அம்மையப்பர் திருக்கயிலாயத்தில் அமர்ந்து காட்சி தர பிரம்மா, சரஸ்வதி இருவரும் வணங்கி நிற்பது போன்று சுதை உருவங்கள் உள்ளன. மூலவர் திருமுன் விமானம் 18 அடி உயரமுள்ள இரு தள விமானம் ஆகும். விமானத்தின் தாங்குதளப்பகுதி தற்காலக் கட்டுமானங்கள் காரணமாக பெருமளவு புதைந்துள்ளது. வேதிகண்ட பகுதியில் கலபாதங்களில் புராண, இதிகாசச் சிற்பங்களை விளக்கும் சிறுபுடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கர்ணபாதங்கள் பிரம்மகாந்த வகையைச் சேர்ந்தவை. வழக்கம் போல பாதப் பகுதியின் மேற்பகுதியில் பூதமண்டலம் அணிசெய்கிறது. கர்ணகூடு மற்றும் சாலை சோழர் கலைப்பாணியைப் பிரதிபலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அம்மன் சன்னதி விமானமும் இருதளங்களை உடைய விமானம் ஆகும். இதன் மேற்கு மற்றும் கிழக்கு தேவகோஷ்டங்களில் மட்டும் தெய்வ மூர்த்தங்கள் காணப்படுகின்றன. அர்த்தமண்டபத்தில் 4 அழகிய விஷ்ணுகாந்தத் தூண்கள் உள்ளன. கோயிலின் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பான்மையான தூண்கள் வெட்டுப்போதிகையோடு கூடிய எண்பட்டைத் தூண்கள் ஆகும். அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபத்தின் வெளிப்புறச் சுவர்களில் எளிய அலங்காரங்களோடு பலகையோடு கூடிய அரைத்தூண்கள் காணப்படுகின்றன. நடராஜர் மண்பத்தில் ஒரே ஒரு சிம்மத் தூண் காணப்படுகிறது. முதல் திருச்சுற்றில் மதில் சுவரையொட்டி தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு திசைகளில் திருச்சுற்று மாளிகைக் காணப்படுகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதியகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் |
| செல்லும் வழி | இக்கோயில் தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தில் உள்ள திருக்கண்டியூரில் பிரதான சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் தஞ்சையிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவிலும் திருவையாறிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இவ்வூருக்குச் செல்ல தஞ்சையிலிருந்தும் திருவையாறிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரை |
திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | தஞ்சாவூர், திருவையாறு |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | தஞ்சாவூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி, சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | தஞ்சாவூர் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 37 |
| பிடித்தவை | 0 |