வழிபாட்டுத் தலம்

அருள்மிகு குன்னாண்டார் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு குன்னாண்டார் கோயில் |
---|---|
வேறு பெயர்கள் | குன்றக்குடி நாயனார், குன்றக்குடித்தேவர், குன்றப்பெருமாள் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
உட்பிரிவு | 1 |
மூலவர் பெயர் | ஸ்ரீகுன்னாண்டார் |
காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / பல்லவர் |
கல்வெட்டு / செப்பேடு | அறுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. |
சுவரோவியங்கள் | இல்லை |
சிற்பங்கள் | கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் விநாயகர், சிவன் உமை அமர்வு நிலை சிற்பம் உள்ளன. பரிவாரத் தெய்வங்களாக சப்தமாதர்கள், சண்டேசுவரர் ஆகிய சிற்பங்கள் உள்ளன. அடியார்கள், அய்யனார் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் இல்லாத சிற்பங்களாக உள்ளன. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால தூண்கள் காணப்படுகின்றன. |
தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால கலை, கட்டடக் கலையைப் பிரதிபலிக்கின்றது. |
சுருக்கம்
கீரனூர் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடைவரைக் கோயில்களைக் கொண்ட ஊர் குன்னாண்டார் கோயில் ஆகும். குன்றக்குடி என்பதே இவ்வூரின் பழம்பெயராகும். இங்குள்ள சிவன்கோயில் இறைவன் குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றார். இப்பெயர்களே குன்றாண்டார் என்று அழைக்கப்பட்டு இன்று குன்னாண்டார் கோயில் என்று மருவி இவ்வூருக்கு உரிய பெயராக விளங்குகிறது. அழகிய ஆடல்மண்டபம், கோபுரம் இரு குடைவரைகளைக் கொண்ட கோயிலாகக் குன்னாண்டார் கோயில் காட்சியளிக்கிறது. முற்றுப்பெற்ற குடைவரையும் முற்றுப்பெறாத குடைவரையும் குன்னாண்டார் கோயிலில் உள்ளன. வழிபாட்டில் உள்ள பெரிய குடைவரையின் கருவறையில் மூலப்பாறையில் வெட்டியெடுக்கப்பட்ட சிவலிங்கம் காணப்படுகின்றது. இதன் வாயிலில் பக்கத்திற்கு ஒருவராக இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் எடுப்பான தோற்றத்துடன் காணப்படுகின்றன. குடைவரையின் முன்மண்டபத்தில் அழகிய கம்பீரமான தோற்றத்துடன் விநாயகரும் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவபெருமானின் உருவமும் புடைப்புருவமாகக் காணப்படுகின்றன. சிவபெருமானின் மார்பில் காணப்படும் புரிநூல் வழக்கத்திற்கு மாறாக வலது தோளிலிருந்து புறப்பட்டு இடது கை வழியாகச் செல்கிறது. குன்னாண்டார் கோயிலில் பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் கால அறுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவை இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றித் தெரிவிக்கின்றன. இக்கோயிலில் பழமையான கலைச்சிறப்பு வாய்ந்த பல சிற்பங்கள் உள்ளன.
|
அருள்மிகு குன்னாண்டார் கோயில்
கோயிலின் அமைப்பு | சிவபெருமான் குடைவரைக்கோயில் வழிபாட்டில் உள்ளது. இப்பெரியக் குடைவரையின் கருவறையில் மூலப்பாறையில் வெட்டியெடுக்கப்பட்ட சிவலிங்கம் காணப்படுகின்றது. இதன் வாயிலில் பக்கத்திற்கு ஒருவராக இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. குடைவரையின் முன்மண்டபத்தில் உமையுடன் அமர்ந்திருக்கும் சிவன் சிற்பம், விநாயகர் சிற்பம் எழில் வாய்ந்தவை. |
---|---|
பாதுகாக்கும் நிறுவனம் | இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. |
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மலையடிப்பட்டி குடைவரைகள், கவிநாட்டுக் கண்மாய், தாயினிப்பட்டி |
செல்லும் வழி | மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். |
கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
பார்வைகள் | 84 |
பிடித்தவை | 0 |