வழிபாட்டுத் தலம்

கோவிந்தபுத்தூர் கங்காஜடேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கோவிந்தபுத்தூர் கங்காஜடேசுவரர் கோயில் |
---|---|
வேறு பெயர்கள் | கோவந்த புத்தூர், விசயமங்கை |
ஊர் | கோவிந்தபுத்தூர் |
வட்டம் | உடையார்பாளையம் |
மாவட்டம் | அரியலூர் |
உட்பிரிவு | 1 |
மூலவர் பெயர் | கங்காஜடேசுவரர் |
தாயார் / அம்மன் பெயர் | மங்களநாயகி |
வழிபாடு | ஒரு கால பூசை |
திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை |
காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
கல்வெட்டு / செப்பேடு | இக்கோயில் முற்காலச் சோழர்களின் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டில் முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டு காலத்தால் முந்தியது. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது ஆட்சியாண்டில் வழங்கப்பட்ட கொடைகளுக்கான கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. |
சுவரோவியங்கள் | ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தமைக்கான எச்சங்கள் காணப்படுகின்றன. முனிவர் கூட்டமொன்று மரத்தினடியில் காட்டப்பட்டுள்ள ஓவியக் காட்சியொன்று கோயில் புனரமைப்புக்கு முன்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. |
சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காணப்படுகிறார். வடபுற அர்த்தமண்டப கோட்டத்தில் எருமைத்தலையின் மேல் நிற்கும் கொற்றவை, அருகில் இருபுறமும் பஞ்சரக் கோட்டங்களில் பிட்சாடனர் மற்றும் காலாந்தகர் ஆகிய திருவுருவங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி, இறைவி, இராஜராஜன், அரசி, இராஜேந்திரன், சம்பந்தர், சப்தமாதர்கள், விநாயகர் ஆகிய சிற்பங்கள் உள் மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோயிலின் உள்சுற்றில் சுதையாலான முனிவர்களின் உருவங்கள் வண்ணம் பூச்சுடன் காணப்படுகின்றன. பசு பால் சொரிந்து வழிபடும் சிற்பம், இந்திரன், காமதேனு, அருச்சுனன் ஆகியோர் வழிபடும் சுதை சிற்பங்கள் உள்ளன. |
தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளார். முதலாம் பராந்தகச் சோழனின் கற்றளி. |
சுருக்கம்
இத்தலம் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தேவார வைப்புத் தலமாகும். கோவிந்த புத்தூர் - கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள தலம். தென்கரையில் விசயமங்கை என்னும் சிவாலயம் உள்ளது. கோயில் விமானம் உத்தமச் சோழப் பல்லவனின் காலத்திய வேலைப்பாடமைந்தது. ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் - கோயிலின் பெயர் விசயமங்கை. இது பாடல் பெற்ற தலம்; வைப்புத் தலமன்று என்பதொரு கருத்துள்ளது. வழக்கில் கொள்ளிடத் தென்கரைத் தலமான விசயமங்கையே தொன்று தொட்டு பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.
|
கோவிந்தபுத்தூர் கங்காஜடேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு | முதலாம் பராந்தகன் காலத்தில் இக்கோயில் முழுவதும் கற்றளியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய கட்டுமானங்களைப் பெற்று அமைந்துள்ளது. வெளிப்புறக் கோட்டங்களில் முன்னிழுக்கப்பட்ட நிஷ்காந்த பஞ்சரக் கோட்டங்களைப் பெற்றுள்ளது. இவ்வமைப்பு பராந்தகனின் கலைப்பாணியாக புள்ளமங்கையில் காணப்படுவது இங்கு கருதத்தக்கது. தற்போது கருவறை விமானத்தின் தளப்பகுதி புனரமைக்கப்பட்டுள்ளதால் பராந்தகன் காலத்திய தளங்களின் எண்ணிக்கையை அறியக் கூடவில்லை. விமான தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுவர்ப் பகுதியில் அரைத்தூண்களுக்கிடையில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூரைப்பகுதியில் கொடுங்கைக்குக் கீழே பூதவரிகள் செல்கின்றன. முன் மண்டப வெளிப்புறக் கோட்டங்கள் சிற்பங்களற்ற அரைத்தூண்களோடு அமைந்துள்ளன. |
---|---|
பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | விசயமங்கை சிவன் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு உட்கோட்டை |
செல்லும் வழி | ஜயங்கொண்டத்திலிருந்து 'மதனத்தூர்' சாலையில் வந்து - தா.பழூர், காரைக்குறிச்சி, ஸ்ரீ புரந்தரன் (திருபுரந்தன்) வழியாகக் கோவிந்தபுத்தூரை அடையலாம். கங்கைகொண்ட சோழபுரம் கூட்ரோடு - அங்கிருந்து ஜயங்கொண்டம் வந்து மேலே சொல்லியவாறு கோவிந்தபுத்தூரை அடையலாம். |
கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Mar 2019 |
பார்வைகள் | 41 |
பிடித்தவை | 0 |