வழிபாட்டுத் தலம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் |
---|---|
வேறு பெயர்கள் | கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், மதுரை, மதுரையம்பதி, சமட்டி விச்சாபுரம், துவாத சாந்தத் தலம், சருவதீர்த்த புரம், சிவராஜதானி, சிவநகரம், பூலோக கயிலாயம், கன்னிபுரீசம், சிவலோகம் |
ஊர் | மதுரை |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
தொலைபேசி | 0452-2344360 |
உட்பிரிவு | 1 |
மூலவர் பெயர் | சொக்கர், சொக்கநாதர், ஆலவாய் அண்ணல், சோமசுந்தரேசுவரர், கலியாணசுந்தரர், செண்பக சுந்தரர், மீனாட்சி சுந்தரேசுவரர் இலக்கியங்களில் - அடியார்க்கு நல்லார், அபிடேகச் சொக்கர், கடம்பவனச் சொக்கர், கற்பூரச் சொக்கர், புழுகுநெய்ச் சொக்கர், கடம்பவனேசர், மதுரேசுவரர் கல்வெட்டுகளில் - அழகிய சொக்கநாதர், திருவாலவாயுடைய நாயனார், மதுரை உடையார். அதிர வீசி விளையாடுவார், சொக்கநாத ஈஸ்வர உடையார், மாதேவரழகிய சொக்கனார். சுந்தர பாண்டிய சோழக் கோனார், திருவாலவாயுடைய தம்பிரானார் |
தாயார் / அம்மன் பெயர் | மீனாட்சி, அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, அபிடேகவல்லி, கர்ப்பூரவல்லி, மரகதவல்லி. சுந்தரவல்லி, அபிராமவல்லி. கயற்கண்குமாரி, குமரித்துறையவள், கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரித் தலைவி, முதுமலைத் திருவழுதிகள், திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் |
தலமரம் | கடம்பமரம், வில்வம் |
திருக்குளம் / ஆறு | பொற்றாமரைத் தீர்த்தம், வையை தீர்த்தம், எழுகடல் தீர்த்தம், கிருதமாலை தீர்த்தம், கொண்டாழி தீர்த்தம், தெப்பகுளம், புறத்தொட்டி நின்மாலிய தீர்த்தம் |
ஆகமம் | சிவாகமம், காரணாகமம் |
வழிபாடு | திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம், பள்ளியறை |
திருவிழாக்கள் | சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத்திருவிழா, தெப்பத் திருவிழா, வசந்த உற்சவம், முளை கொட்டு விழா, ஊஞ்சல் உற்சவம், புட்டுத் திருவிழா |
காலம் / ஆட்சியாளர் | கி.பி.11-15-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர் விஜயநகர, நாயக்கர் |
கல்வெட்டு / செப்பேடு | கல்வெட்டுகளை பொறுத்தவரை கி.பி. 12ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தற்போது காணப்படுகின்றன. ஆனால் முன்புள்ள சோழர் முற்காலப்பாண்டியர் தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படாதது வியப்பதாக உள்ளது. அதற்குப் பல காரணங்கள் இருக்க வேண்டும். காலவெள்ளத்தாலும் அரசியல் சமுதாய மாற்றங்களாலும் கல்வெட்டுப் பொறித்த கட்டடக் கற்கள் அழிவுக்குள்ளாகி இருக்கலாம். மதுரைநாயக்க மன்னர்கள் இக்கோயிலின் கருவறை முதலாக பல பகுதிகளை எடுத்துவிட்டு புதிய மண்டபங்களோடு விரிவுபடுத்திக் கட்டியபோது பழங்கல்வெட்டுகள் இடம் பெயர்ந்து மறைந்திருக்க வேண்டும். இக்கோயிலையும் சுற்றுப்புறத்தையும் நன்கு ஆய்வுசெய்தால் பழங்கல்வெட்டுகள் வெளிப்பட வாய்ப்புள்ளது. மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டிய மன்னனான சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1190-1216) காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரையிலான அறுபத்துநான்கு கல்வெட்டுகள் மத்திய அரசு தொல்லியல்துறையால் இதுவரை படியெடுக்கப்பட்டுள்ளன. காலமுறைப்படி இவற்றின் எண்ணிக்கை பின்வருமாறு அமைந்துள்ளது. 1..பிற்காலப்பாண்டியர்காலம் - 44 கல்வெட்டுகள் 2. விசயநகர மதுரைநாயக்கர்காலம் - 19 கல்வெட்டுகள் 3.ஆங்கிலேயர்காலம்-1 கல்வெட்டு என மொத்தம் – 64 கல்வெட்டுகள் உள்ளன. பிற்காலப் பாண்டிய மன்னர்களில் முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1194), முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. (1216-1244), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்(கி.பி.1238-1255) இரண்டாம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன் (1250-1276), முதலாம் குலசேகரபாண்டியன் (கி.பி. 1268–1318) மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1316-1334), பராக்கிரமபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. பாண்டியர் கல்வெட்டுகளில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் அதிகஅளவில் உள்ளன. இம்மன்னன் காலத்தில் மதுரைக்கோயில் பல திருப்பணிகளைக் கண்டு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. விசயநகர வேந்தர்களில் கிருஷ்ணதேவராயர் கி.பி.1509-1529) அச்சுததேவராயர் (கி.பி.1529-1542), சதாசிவராயர் (கி.பி.1542-1570) ஆகியோரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. மதுரைநாயக்க மன்னர்களில் வீரப்பநாயக்கர் (கி.பி. 1572-95) குமாரகிருஷ்ணப்பநாயக்கர் (கி.பி. 1595-1601), முத்துவீரப்பநாயக்கர் (கி.பி. 1609-23) திருமலைநாயக்கர் (கி.பி.1623–1659) விஜயரங்கசொக்கநாதநாயக்கர் (கி.பி. 1706-32) ஆகியோரது கல்வெட்டுகள் உள்ளன. கி.பி. 1842ல் பொறிக்கப்பட்ட பச்சையப்பமுதலியாரின் ஆங்கிலேயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் இக்கோயிலில் உள்ளது. கல்வெட்டுகள் கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பொருட்கொடைகள், நிலக்கொடைகள் பற்றிக் கூறுகின்றன. இவை கோயிலில் நடைபெறும் நாள்வழிபடு, திங்கள்வழிபாடு, ஆண்டுவழிபாடு, திருவிழக்கள் ஆகியவற்றின் செலவினங்களுக்காக அளிக்கப்பட்டவையாகும். கோயிலில் இரவும் பகலும் புறவிருளை அகற்றத் திருவிளக்குகள் எரிப்பதற்காகத் தானங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவாலவாயுடையாரின் கருவறை வெளிப்புற வாயிலில் இரண்டு நிலைவிளக்குள் வைத்து எரிப்பதற்காக சடையவர்மன் குலசேகரப்பாண்டியனின் ‘அகப்பரிவா முதலி’ என்றழைக்கப்பட்ட அதிகாரி ஒருவன் இருபது பொற்காகளைத் தானமாகத் தந்துள்ளான். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் இதேபோன்று திருவிளக்கு எரிப்பதற்காகத் தானம் தரப்பட்டிருக்கிறது. கோயிலில் நடைபெறும் சிறப்புப்பூசைகளின் போது இறைவன் முன்னர் திருப்பதியம் (தேவாரம்) பாடுவதற்குச் செண்டாடுவானான உத்தமபாண்டியப் பிச்சன் என்பவனுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அருளாளதேவனான வானதிராயன் என்பவன் ஏற்படுத்திய சிறப்புச்சந்திக்கு வெண்பைக்குடி நாட்டு நம்பிதாயநல்லூர் என்ற ஊர் தானமாகத் தரப்பட்டுள்ளது. மார்கழித்திருநாளில் திருவெம்பாவை பாடுகின்ற பரதேசி கோவனவர் என்றழைக்கப்படுவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவாலவாயுடையார் திருவுலா வந்து திருக்காமகோட்டத்தில் (மீனாட்சியம்மன் சன்னதி) ‘வாணாதிராயன் திருவாசல்’ என்றழைக்கப்பட்ட தெற்குவாசலுக்கு வந்து நிற்கும்போது இறைவன் கேட்கும்படியாக அவ்விடத்தில் ‘சதாரிப்பண்’ பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரைமாநகரில் திருவாலவாயுடையார் விறகுவெட்டியாக வந்து சேமநாதனின் இசைச்செருக்கு அழியும்படி பாணபத்திரனுக்காகப் பாடிய பாடலின் பண் சதாரிப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கருநாடகமன்னன் போசளர் அரச மரபைச் சார்ந்த வீரசோமீசுவரன் பெயரால் அவன் பிறந்தநாளான ஐப்பசித் திங்கள் மகநட்சத்திரநாளில் அவனது பெயரால் திருவாலவாயுடையார்க்குச் சிறப்புச்சந்தி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காகப் பலவூர்களிலிருந்து வரிநீக்கிய நிலங்கள் இறையிலியாகத் தரப்பட்டன. கருநிலக்குடி நாட்டிலுள்ள குண்ரான குலசேகர மங்கலத்து நிலங்கள் ஆலவாய் இறைவன் மீது பூசுவதற்காகும் வாசனைத்தைல செலவினங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இறைவன் மேனியில் பூசும் சந்தனத்தைக் கொண்டு வந்து தருவதற்காக அண்டநாட்டிலுள்ள துருமூர் என்ற ஊரின் நிலங்களிலிருந்து வரியாக வந்த நான்கு பொற்காசுகள் தானமாகத் தரப்பட்டுள்ளன. கோயிலில் திருச்சின்னப்பணி செய்வதற்காகப் பணியாளர்களுக்கு இரண்டு பொற்காசுகள் வழங்கப்பட்டுள்ளன என்று பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயில் மடைப்பள்ளிக்கு அன்றாடம் ஆகும் செலவினங்களுக்காக அடுக்களைப்புறம் என்ற பெயரில் நிலங்கள் வரிநீக்கி அளிக்கப்பட்டுள்ளன. மாதேவன் அழகிய சொக்கனார் என்பவனுக்கு முடித்தலைகொண்ட பாண்டியச் சதுர்வேதி மங்கலத்தினைச் சார்ந்த மாத்ர்நிலங்கள் அடுக்களைப்புறம் என்ற பெயரில் தானமாகத் தரப்பட்டுள்ளன. அண்டநாட்டு, மருத்துவக்குடி என்ற ஊரைச் சார்ந்த திருநாட்டப்பெருமாள் என்ற பிராமணன் மடைப்பள்ளியில் அடுவானாகப் பணிசெய்வதற்கு இறையிலியாக பராந்தகப்பாண்டியச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரிலிருந்து சில நிலங்கள் மானியமாகக் கொடுக்கப்பட்டன. இதேபோல் இராசந்தனான முனையதரையன் என்பவனுக்குப் பருத்திக்குடிநாட்டுக் கோடிக்காவல் நல்லூரில் அடுக்களைப்புறமாக நிலங்கள் தரப்பட்டுள்ளன. கோயிலில் பணிசெய்த பிற பணியாளர்களுக்கும் நிலக்கொடைகள் மானியமாக வழங்கியதைப் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் கூறுகின்றன. வழிபாட்டிற்காகும் பூக்களை அளிப்பதற்காக நந்தவனங்கள் தோற்றுவிப்பதற்கு நிலங்கள் தரப்பட்டதையும் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சிற்றாலயம், மண்டபம், கோபுரம் போன்ற கோயில் கட்டுமானங்களைக் கட்டியது குறித்தும் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ‘விரதம் முடித்த ஈஸ்வரமுடையார்’ என்ற பெயரில் மதுரைக் கோயில் வளாகத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அருளாளன் சேவகத்தேவனை வாணாதிராயன் நடராசருக்காக அதிரவீசியாடுவார் திருமண்டபம் (நடராசர் சன்னதி) ஒன்றை எடுப்பித்துள்ளான். இவனே திருவாலவாயுடையார் கோயிலைச் சுற்றித் திருநடைமாளிகையை எடுப்பித்துள்ளான். மேலும் மதுரைக்கோயில் திருத்தேரினைப் புதுப்பித்து எழுநிலைக் கோபுரத்தினையும் திருப்பணிசெய்து முடித்தான் இவ்வாணாதிராயன் இதற்காக இவன் ஆண்மர்நாட்டிலுள்ள சோழபாண்டிய நல்லூர் என்ற ஊரினைத் தானமாகத் தந்துள்ளான். மதுரைக்கோயிலின் கிழக்குராஜ கோபுரம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பல திருப்பணிகளைக் கண்டுள்ளது. நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1303-25) காலத்தில் இது திருப்பணிசெய்து திருத்திக்கட்டப்பட்டுள்ளது. இதனை உறுதிபடுத்தும் முறையில் கிழக்குக் கோபுரத்தின் உட்புறச் சுவரில் ‘அவனிவேந்தராமன் திருக்கோபுரம்’, ‘சுந்தரபாண்டியன் திருக்கோபுரம்’ என்று தெரிவிக்கும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேற்கு ராஜகோபுரம் பராக்கிரம பாண்டியனால் (கி.பி. 1315-1334) கட்டப்பட்டது. இதைத் தெரிவிக்கும் அவன் புகழ்பாடும் பாடல் கல்வெட்டுகள் கோபுரத்தின் உட்புறச் சுவரில் காணப்படுகிறது. மதுரைகோயிலைச் சூழ்ந்து பல சைவமடங்கள் இருந்ததையும் சில புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டதையும் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உருவாக்குவதற்கும், இவற்றிலிருந்து அன்னதானம் வழங்குவதற்கும் தானங்கள் தரப்பட்டுளளன. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ‘சுந்தரபாண்டியன் திருமடத்தில்’ தபசியருக்கு உணவளிக்க நிலங்கள் தானமாகத் தரப்பட்டுள்ளன. மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் இருந்த ‘நரலோக சூரியன் திருமடத்தில்’ மகேசுவரர்க்கு உணவளிப்பதற்காகப் பாகனூர்கூற்றத்தில் இருந்த நிலங்கள் தானமாகத் தரப்பட்டுளளன. மதுரையிலிருந்த சைவமடங்களில் சிறப்பு வாய்ந்த மடங்களில் ஒன்றாகத் ‘திருஞானசம்பந்தன்மடம்’ கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. புவனேசுவீரன் மடம், தெற்கில்மடம், மானப்பெரியான் மடம், என்ற பெயர்களில் பல சைவமடங்கள் மதுரையில் இருந்திருக்கின்றன, புவனேசுவீரன் மடத்தில் ஆவணித் திருநாட்களின் போது ஒவ்வொரு நாளிலும் நூறுபேர் வீதம் பத்துநாட்கள் ஆயிரம் அடியார்க்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. |
சுவரோவியங்கள் | மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஒவியங்கள் யாவும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. பொற்றாமரைக்குளத்துக்கு அருகிலே அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தின் விதானத்தில் மீனாட்சியின் திக் விஜயத்தையும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தையும் ஓவியங்களாக தீட்டியிருக்கின்றனர்.“எறிதரங்கம்உடுக்கும் புவனங் கடந்து நின்ற ஒருவன் திருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கும் உயிரோவிய”மாகிய மீனாட்சியின் திருக்கல்யாணக் காட்சியை சிற்பி கல்லிலே கவினுற வடித்துவிட்டான். ஆனால் ஒவியனுக்கு அது தீட்டமுடியாத ஒரு ஓவியமாகவே அமைந்து விட்டது. இந்தக் காட்சியில்தான் ராணி மங்கம்மாள் (கி.பி. 1869-1706) தளவாய் இராமய்யப்பர் நரசப்பையர்) முதலியோர் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசிப்பதாக ஊஞ்சல்மண்டப விதானத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொற்றாமரைக் குளத்தின் வடக்கு கிழக்கு சுவர்களிலும் நாயக்கர் கால ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வோவியங்கள் மூலம் புராணக் கதைகளை அறிவதோடு அக்கால மக்களின் ஆடைவகைகள் அணிகலன்கள் போன்றவை பற்றியும் அறிய முடிகிறது. |
சிற்பங்கள் | அட்டசக்தி மண்டபத்தில் எட்டு தூண்களில் எட்டு வடிவங்கட்கான சக்திப சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதலிப்பிள்ளை மண்டபத்தில் சிவபெருமானது பிட்சாடனர் வடிவம், தாருகாவன முனிவர்கள், மோகினி முதலியோர் உருவச் சிலைகள் அமைந்துள்ளன. சங்கிலி மண்டபத்தில் பஞ்சபாண்டவர் மற்றும் திரெளபதியின் உருவச் சிலைகள் உள்ளன. மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களைக் குறிக்கும் சிற்பங்கள் காணத்தகுந்தவை. மீனாட்சியம்மன் கருவறைச் சுவர்கள் கலைக்கூடமாக அமைந்துள்ளன. 32 சிங்கங்கள், தேவகோட்டம், உச்சிக் கொடுங்கைகள் ஆகியவை நுட்ப வேலைப்பாடுகள் அமையப் பெற்றவை. முக்குறுணி விநாயகர் சிற்பம் ஒரே கல்லினாலான அற்புத சிற்பம். சுந்தரேசுவரர் கோயில் சிற்பங்களில் மிகச்சிறந்த படைப்புகள் ஊர்த்துவ தாண்டவர், காளி, அக்கினிவீரபத்திரர், அகோரவீரபத்திரர் சிற்பங்கள் மிகப்பெரியவை. கம்பத்தடி மண்டப சிற்பங்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய சிறப்பு பெற்றவை. சிவபெருமானது 25 மூர்த்தங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணக்கோல சிற்பம் அமைந்துள்ளது. மேலும் இம்மண்படத்தில் புராண நிகழ்ச்சிகள் பல கருங்கல்லில் வடித்துக் காட்டப்பட்டுள்ளன. கொடிக்கம்பத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ள நந்தியின் சிலை ஒரே கல்லினால் ஆனது. கொடிக்கம்பத்தை அடுத்து சுவாமி சந்நிதி வாசலில் இருபுறங்களிலும் சதாசிவ மூர்த்தி, காயத்ரி இருவரின் அழகிய திருஉருவங்கள் உள்ளன. சைவ சமயக்குரவர் நால்வரின் உருவங்கள் தூண்களில் அமைக்கப்பெற்றுள்ளன. தூண்களின் அருகில் துவாரபாலகர் திருஉருவங்கள் மிகப்பெரியனவாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறை சுவர்களில் உள்ள 32 சிங்கங்கள் கலை நேர்த்தி உடையவை தேவகோட்டங்கள் மற்றும் 8 யானைகளின் சிற்ப உருவங்கள் காணத்தக்கவை. சுவாமி சந்நிதி முன் வெள்ளியம்பலத்தில் நடராசபெருமானின் உருவம் கல்லிலும் செம்பிலும் அமைந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம் ஒரு சிற்ப கலைக்கூடம் எனலாம். இங்கு 985 தூண்கள் உள்ளன. பல தூண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டப வாயிலில் நரியைப் பரியாக்கிய சொக்கநாதர் உருவம் குதிரை மீது அமர்ந்திருப்பதுபோல் உள்ளது. இத்தூணின் மேற்புறம் ஒரு உடும்பு ஒரு சிறு கல்வளையத்தை வாயில் கவ்வி நிற்கும் சிற்பம் கலைநுட்பம் வாய்ந்தது. மீனாட்சியம்மன் கோயிலில் உன்னதமான சிற்பங்கள் உள்ள இடம் மூன்று அவை புதுமண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால்மண்டபம் என்பன. புதுமண்டபத்தில் பிரம்மாண்டமான கலைநயம் மிக்க வியத்தக்க சிற்பங்கள் நிறைய உள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான சிற்பங்கள் நாயக்கர் காலப் பாணியிலேயே அமைந்துள்ளன. சிற்ப அமைப்பைக் கொண்டு நாம் அவற்றின் காலத்தை அறிய முடியும். சிற்ப நுட்பத்தின் அறிவார்ந்த படைப்புக்களைக் கொண்ட ஆலயமாக இது அமைந்திருப்பதால்தான் இன்றளவும் உலகப் பிரசித்தி பெற்றதாக உள்ளது. |
தலத்தின் சிறப்பு | 2000 ஆண்டுகள் பழமையானது. சங்க இலக்கியப் பாடல் பெற்றது. தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலம். பாண்டியர், விசயநகரர், நாயக்கர் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. |
சுருக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து சுமார் 498 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. பாண்டிநாட்டுத் தலங்கள் பதினான்கு இவற்றுள் தலையாயது தொன்மையும் தனித்தன்மையும் வாய்ந்த தெய்வமணங்கமழும் மதுரையே! தமிழ்மொழி பிறந்து, தவழ்ந்து, தளிர்நடைபயின்று வளர்ந்த முச்சங்கங்கள் கூடிய இடமும் இத்திருத்தலமே! இறைவனே அரசனாயிருந்து ஆண்டதும், இறைவியே கன்னியாக இருந்து ஆட்சிபுரிந்ததும், அவர்களது இரண்டாவது மகன் முருகனே உக்கிரக்குமாரனாக மானுடப்பிறவி எடுத்து இங்கே பிறந்ததும், அவனிடத்திலே அரசாட்சியை ஒப்படைத்து ஆலவாயில் இறைவனும், இறைவியுமாய் எழுந்தருளியதும் எண்ணி இன்புறத்தக்கன. பொய்யடிமை இல்லாத புலவர்கள் மதுரையைப் பற்றி நிறைய பாடியிருக்கிறார்கள். மதுரையைப் புலவர்கள் தம் மதிக் கோலால் அளந்து, சொல் ஏரால் வளப்படுத்தி அறிவு நீர் பாய்ச்சி, கவிதைப்பயிர் தழையச் செய்தார்கள். அவர்கள் இட்டபயிர்தான் இரண்டாயிரம் ஆண்டுகளாகியுங்கூட இன்றைக்கும் இளமை நலம் துய்க்கும் வண்ணம் சிவயோகத்தையும் அறிவமுதத்தையும் அளித்து வருகிறது. வடமொழியாளர்களால் பழமையான காவியங்கள் என்று போற்றப்படும் இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பாண்டி நாட்டைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. “சீதையைத் தேடப்போகும் வானர வீரர்களிடம் சுக்ரீவன், தென்புலத்தில் கபாடபுரம் என்றொரு நகரம் உண்டென்றும், அதன் வாயிற்கதவுகள் பொன்னாலும், முத்தாலும் அழகு படுத்தப்பட்டிருக்கும் என்றும் கூறினான்” என்று வால்மீகி இராமாயணம் இயம்புகிறது. (கபாடபுரம் கடல்கோளால் அழிந்துபட்ட; இரண்டாம் தமிழ்ச்சங்கம் கூட்டப்பெற்ற; தற்போதைய மதுரைக்கு முன்பு பாண்டித் தலைநகராக விளங்கிய நகரம்) “குமரியந்துறையிடச் சென்ற போது ஐவரில் அழகனான அருச்சுனன், வழியில் பாண்டிய அரசனின் மகளை மணந்துகொண்டான்” என மகாபாரதம் பகர்கின்றது. ஹாலாஸ்ய மஹாத்மியம்இந்த இலக்கியமே பரஞ்சோதிமுனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தின் - முதல் நூல்“வந்தே ஹாலாஸ்ய நகரீம் வந்தே ஹேமாப்ஜினீ மபி வந்தே ஸுமீன நயனாம் வந்தே ஸுந்தர நாயகம்” என்ற ஸ்லோகத்தை வியஸாசாரியார் இயற்றியுள்ளார். நான்கு வேதங்களையும் முறைப்படுத்தி, பதிநென் புராணங்களையும் இயற்றி, ஸ்ரீ மஹாபாரதத்தையும் படைத்து நமது இந்து தர்மத்திற்குப்பெரும் தொண்டு செய்த வியாஸர் எந்தவொரு தனி நகரத்தையும் இப்படி வாழ்த்தி வணங்கியதில்லை. ஆனால் ஸ்ரீ ஸ்கந்த மகாபுராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் மதுரை நகருக்கு நமஸ்காரம் என்று வந்தித்துப் போற்றுகின்றார் சிலப்பதிகாரப் பதிகம் மதுரை நகரினை ஐந்து இடங்களில் சுட்டுகிறது. புகார் காண்டத்தில் மதுரை நகரம் ஐந்துமுறை குறிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டம் மதுரைக் காண்டம் என்று பெயர் பெறுகிறது. இக்காண்டத்தில் மதுரை நகரம் பற்றிய குறிப்பு இருபத்தி மூன்று அடிகளில் காணப்படுகிறது. இவை தவிர மதுரைக் காண்டத்தில் நெடுஞ்செழியன் காலத்து மதுரையின் இயல்பு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. மூன்றாவதாக உள்ள வஞ்சிக் காண்டத்தில் மதுரை பற்றிய குறிப்பு பதின்மூன்று அடிகளில் உள்ளது. இளங்கோவடிகள் கண்ணகி முதலியோர் மதுரை வந்து சேரும் போது“புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்னும் பொய்யாக் குலக்கொடி” என்று வையையைப் போற்றிப் பின், “மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி வானவர் உறையுமதுரை வரங்கொள”ன்று அவர்கள் வையையாற்றை மரப்புணை (ஓடம்) மூலமாகக் கடந்து நகரை வலங்கொண்ட செய்தியைத் தருகிறார். எட்டுத்தொகை நூல்களுள் ‘ஒங்கு பரிபாடல்’ என்று உயர்த்தி கூறப்படும் இவ்விலக்கியம் எழுபது பாடல்களைக் கொண்டது. நல்லந்துவனாரால் இயற்றப்பட்டது. இவற்றில் நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் இருபத்தி இரண்டு. தொல்காப்பிய உரை முதலியவற்றால் நமக்குக் கிடைத்திருப்பவை பதினொன்று, இந்த பதினோரு பாடல்களில் ஆறுபாடல்கள் மதுரையைப் பற்றிக் கூறுகின்றன. பரிபாடலில் மதுரையின் நகரமைப்பு தாமரை மலரோடு ஒப்பிட்டு மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரை மலரை ஒத்தது மதுரை நகர் தாமரையின் இதழ்களை ஒத்தது அதன் தெருக்கள். அவ்விதழ்களின் மையத்தில் உள்ள பொகுட்டினைப் போன்றது அண்ணல் கோயில். அப்பொகுட்டிலே காணப்படும் மகரந்தத் துளினைப் போன்றவர்கள் தண்மையான தமிழ்மொழி பேசும் மக்கள். மேலும் வஞ்சி, உறையூர் மக்களைப் போல் கோழி கூவும் ஒலிகேட்டு துயிலெழாமல் மறை ஒலி கேட்டு கண்விழிப்பர் மதுரை மக்கள் என்று கூறுவதன் மூலம் மதுரை நகரிலே எப்பொழுதும் மறைஒலி கேட்டுக் கொண்டே இருக்கும் என்பதனை உணர்த்துகின்றனர். ஒரு புலவர் தன் அறிவென்னும் தராசிலே மதுரையை ஒரு தட்டிலும் மதுரை அல்லாத உலகத்தை மற்றொரு தட்டிலும் வைத்தாராம் அருளும் பொருளும், மலரும், நலமும் நிறைந்த மதுரைத் தட்டு தாழ்ந்ததாம். இப்பாடலின் மூலம் மதுரையின் சிறப்பினை ஏத்திக் கூறுகின்றார். கொடுப்பவரைக் கொண்டாடி, கேட்டு வருபவரைக் கண்டு மனம் பூரிக்கும் வள்ளல் தன்மை கொண்டு வாழ்கின்ற மதுரை, திருப்பரங்குன்றத்து மக்களே வாழ்பவர்களாக கருதப்படுபவர். மற்றெல்லாரும் மறுமை இன்பம் பெற மாட்டார்கள் என்ற பொருள்படும் பாடலால் மதுரை நகர மக்களின் வள்ளல்தன்மை விளங்கும். பொன்னலாகிய வேப்பமாலையை அணிந்த பாண்டியர்க்கு வழிவழியாக உரிமையுடையது இம்மதுரை. புதிதாக மணந்த பெண்ணினது கூந்தலையும், நெற்றியையும் போலக் கடைத் தெருக்கள் பல்வேறு மணங்களும் கலந்து கமழுகின்றன. மதுரையில் திருவிழாக்கள் இல்லாத நாளே கிடையாது. பாண்டியனது கயற்கொடியானது இடங்கள் தொறும் விளங்குகிறது. இம்மதுரை, போர்களில் வென்று அழியாப் புகழ்கொண்ட அரசனின் ஆட்சிக்குரியது. பலநாடுகளையும் வென்று தமதாக்கிக் கொண்ட பசும்பூண்பாண்டியனுக்குச் சொந்தமானது பொன்மலிந்தது; புகழ் மலிந்தது; இசை மிக்கது; மலையையொத்த அரண்மனைகள் பலவற்றையும் உடையது என்று பல புலவர்கள் பேசுகின்றார்கள்.“சால்பாயமும்மைத் தமிழ்தங்கிய அங்கண் மூதூர்” "பொய்யா விழவின் கூடல்” “கொடி நுடங்கு மறுகில் கூடல்” “பாடுபெறு சிறப்பிற் கூடல் " “பொன்மலி நெடுநகர்க் கூடல்” “மாடமலிமறுகில் கூடல்” தமிழால் மட்டும் பாண்டியர்க்குச் சிறப்பு வந்துவிடவில்லை. அதனுடன் மற்றொரு சிறப்பும் அவர்கட்கு உண்டு என்று புறநானூறு கூறுகின்றது. “நெல்லும் நீரும் பொதுவாக எல்லா மன்னர்க்கும் எளிமையுடையன. அவற்றையே தாமும் பெற்றுத் திகழ்தல் அத்துணை சிறப்பன்று என்று கருதிய பாண்டியர், யாவர்க்கும் பெறுதற்கரிய பொதிய மலையிடத்தில் உண்டாகும் மணமுள்ள சந்தனத்தையும் தென்கடலில் திகழும் முத்தையும் பெற்று வீறுகொண்டு விளங்குகின்றனர் ஒலிக்கும் குரலையுடைய மூவகை முரசுகளுடன் அரசோச்சுகின்றனர்; தமிழ் பொருந்திய மதுரையில் அருள்பொருந்திய செங்கோலைத் தாங்கியுள்ளனர்.”இப்பாடலிலே ‘தமிழ்கெழு கூடல்' என்று மதுரை சிறப்பிக்கப்படுகிறது. மேலும் இந்நூலில் ‘மாடமலி மதுரை' எனவும் ‘வானத்தன்ன வளநகர்’ எனவும் அடைமொழிகளால் இத்தலத்தின் சிறப்பு எடுத்துரைக்கப்படுகிறது.
|
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு | சிற்றாலயம், மண்டபம், கோபுரம் போன்ற கோயில் கட்டுமானங்களைக் கட்டியது குறித்தும் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ‘விரதம் முடித்த ஈஸ்வரமுடையார்’ என்ற பெயரில் மதுரைக் கோயில் வளாகத்தில் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அருளாளன் சேவகத்தேவனை வாணாதிராயன் நடராசருக்காக அதிரவீசியாடுவார் திருமண்டபம் (நடராசர் சன்னதி) ஒன்றை எடுப்பித்துள்ளான். இவனே திருவாலவாயுடையார் கோயிலைச் சுற்றித் திருநடைமாளிகையை எடுப்பித்துள்ளான். மேலும் மதுரைக்கோயில் திருத்தேரினைப் புதுப்பித்து எழுநிலைக் கோபுரத்தினையும் திருப்பணிசெய்து முடித்தான் இவ்வாணாதிராயன் இதற்காக இவன் ஆண்மர்நாட்டிலுள்ள சோழபாண்டிய நல்லூர் என்ற ஊரினைத் தானமாகத் தந்துள்ளான். மதுரைக்கோயிலின் கிழக்குராஜ கோபுரம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பல திருப்பணிகளைக் கண்டுள்ளது. நான்காம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1303-25) காலத்தில் இது திருப்பணிசெய்து திருத்திக்கட்டப்பட்டுள்ளது. இதனை உறுதிபடுத்தும் முறையில் கிழக்குக் கோபுரத்தின் உட்புறச் சுவரில் ‘அவனிவேந்தராமன் திருக்கோபுரம்’, ‘சுந்தரபாண்டியன் திருக்கோபுரம்’ என்று தெரிவிக்கும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேற்கு ராஜகோபுரம் பராக்கிரம பாண்டியனால் (கி.பி. 1315-1334) கட்டப்பட்டது. இதைத் தெரிவிக்கும் அவன் புகழ்பாடும் பாடல் கல்வெட்டுகள் கோபுரத்தின் உட்புறச் சுவரில் காணப்படுகிறது. மதுரைகோயிலைச் சூழ்ந்து பல சைவமடங்கள் இருந்ததையும் சில புதியதாகத் தோற்றுவிக்கப்பட்டதையும் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவற்றை உருவாக்குவதற்கும், இவற்றிலிருந்து அன்னதானம் வழங்குவதற்கும் தானங்கள் தரப்பட்டுளளன. மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ‘சுந்தரபாண்டியன் திருமடத்தில்’ தபசியருக்கு உணவளிக்க நிலங்கள் தானமாகத் தரப்பட்டுள்ளன. மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் இருந்த ‘நரலோக சூரியன் திருமடத்தில்’ மகேசுவரர்க்கு உணவளிப்பதற்காகப் பாகனூர்கூற்றத்தில் இருந்த நிலங்கள் தானமாகத் தரப்பட்டுளளன. மதுரையிலிருந்த சைவமடங்களில் சிறப்பு வாய்ந்த மடங்களில் ஒன்றாகத் ‘திருஞானசம்பந்தன்மடம்’ கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. புவனேசுவீரன் மடம், தெற்கில்மடம், மானப்பெரியான் மடம், என்ற பெயர்களில் பல சைவமடங்கள் மதுரையில் இருந்திருக்கின்றன, புவனேசுவீரன் மடத்தில் ஆவணித் திருநாட்களின் போது ஒவ்வொரு நாளிலும் நூறுபேர் வீதம் பத்துநாட்கள் ஆயிரம் அடியார்க்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. திருவாலவாயுடையார் கோயில் பதியிலார் (தேவரடியாள்) சிவனைமுழுதுடையாள் என்பவர் சைவமடம் ஒன்றினை ஏற்படுத்தியதைப் பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. போசளமன்னன் வீரசோமேசுவரனால் நின்றியங்கியடுவார் என்ற பிச்சாமடத்துச் சந்தானம் கேட்டுக் கொண்டபடி ‘கோசலைமடம்’ ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காகும் செலவினங்களுக்காக திருவேடகத்திலும் பறப்புநாட்டுக் இடைக்குடியிலும் நிலங்கள் தானமாக தரப்பட்டன. இம்மடத்திற்கு முப்பது பசுமாடுகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவற்றைக் கண்காணித்து பராமரிப்பதற்காக ஆண்டார்கள் வைராகிகள் என்றழைக்கப்பட்ட பணியாட்கள் பதினைந்து பேர்கள் நியமிக்கப்பட்டதைச் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது. இளையான்குடியிலுள்ள முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் கல்வெட்டு ஒன்று மதுரைக்கோயில் குறித்துப் பல புதிய செய்திகளைத் தருகின்றன. இம்மன்னனின் அதிகாரியாக விளங்கிய இளையான்குடியைச் சார்ந்த கங்கைகொண்ட சூரியதேவன் வாணாதிராயன் காலிங்கராசன் என்பவன் திருவாலவாயுடைய நாயனார் குறிப்பிட்ட திருநாட்களில் வைகையாற்றில் தீர்த்தம் ஆடியருள வைகையாற்றங்கரையில் ‘காலிங்கராயன்’ என்ற தனது பெயரில் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்துள்ளான் என்று இளையான்குடி பெருமாள்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவனே மதுரைக்கோயிலில் தனது பெயரால் சூரியதேவர் திருமேனியையும் ஈஸ்வரவுடையார் திருமேனியையும் செய்தளித்துள்ளான். இவரது மனைவியின் பெயரால் திருவுடை நாச்சியார் திருமேனியை செய்தளித்துள்ளான் என்று கல்வெட்டு கூறுகிறது. சோழமன்னன் மூன்றாம் குலோத்துங்கசோழனின் கல்வெட்டுகள் கி.பி. 1202-03 அளவில் மதுரையை வென்று மதுரையில் வீராபிசேகமும் விஜயாபிசேகமும் செய்து கொண்டதைத் தெரிவிக்கின்றன. அவனது வெற்றிச் சிறப்புக்களைத் தொகுத்துக்கூறும் மெய்க்கீர்த்திப் பாடல் கல்வெட்டுகள் மதுரைக்கோயிலில் அவன் செய்த திருப்பணிகளையும் எடுத்து கூறுகின்றன. இது மதுரைகோயில் குறித்து தெரிவிக்கும் பழங்காலக் கல்வெட்டுச் சான்றாகும். மதுரையில் குலோத்துங்க சோழன் திருவாலவாயுடையார் கோயிலைச் சுற்றித் தன்பெயரால் திருவீதியை அமைத்தான். சிறப்பு வழிபாடுகள் செய்து அதற்காகத் திருநாட்களையும் குறித்தான். முப்புரங்களையும் நெற்றிக்கண்ணால் எரித்த சொக்கர் திருவீதிவுலா வருவதற்கு ஏற்பாடு செய்தான். தன்னைப் பேரரசன் என்றும் கருதாமல் அத்திருவுலாவைத் வீதியில் நின்று கண்டு மகிழ்ந்தான். திருவாலவாயுடையார் கோயிலைப் பொன்மலை என்றும் சொல்லும்படியாக பொன்வேய்ந்தான் என்று பின்வருமாறு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அவனது கல்வெட்டு தெரிவிக்கிறது. ‘அறந்தரு திருவாலவாயில் அமர்ந்தவர்க்குத் தன்பேரால் சிறந்தபெருந் திருவிதியும் திருநாளும் கண்டருளிப் பொருப்புநெடுஞ் சிலையால் முப்புரமெரிந்த சொக்கருக்குத் திருப்பவனி கண்டருளித் திருவீதியில் சேவித்துத் தென்மதுரைத் திருவாலவாய் பொன்மலையெனப் பொன்வேய்ந்து’ ஆனால் இச்செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் மீனாட்சியம்மன் கோயிலில் காணமுடியவில்லை. நாயக்கர்காலக் கல்வெட்டுகளில் இக்கோயில் சொக்கநாதசுவாமிகோயில் என்று குறிப்பிடப்படுகிறது. அங்கயற்கண்ணி அம்மைக்கும் மீனாட்சியம்மன் என்ற பெயர் இக்காலத்திலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது. நாயக்கர் காலத்தில் மதுரைகோயில் பெருவளர்ச்சிகண்டது. விசயநகர வேந்தர்களோடு இணைந்து மதுரைக்கோயிலை மிகப்பெரிய அளவில் நாயக்க மன்னர்கள் விரிவுபடுத்தினர் பல கோபுரங்களையும் மண்டபங்களையும் உருவாக்கி தானங்கள் பல அளித்துள்ளனர். கிருஷ்ண தேவராயரின் தர்மமாக அவரது அதிகாரியாக விளங்கிய சாளுவநரசநாயக்கர் என்பவன் மதுரையில் புதுமண்டபத்திற்குக் கிழக்கே எழுகடல் என்று அழைக்கப்படும் குளத்தினை கி.பி. 1516-ல் தோற்றுவித்தான். இதற்குச் ‘சப்தசாகரம்’ என்று பெயரும் இட்டான் என்று கல்வெட்டு தெரிவிக்கின்றது. மதுரைக்கோயிலில் சுவாமி சந்நிதியிலுள்ள கம்பத்தடி மண்டபத்தினை அடுத்துள்ள வீரபத்திரர் காளி ஊர்த்துவதாண்டவர் ஆகியோர் சிற்பங்கள் அடங்கிய பெருமண்டபத்தினை கி.பி. 1583ல் வீரப்பநாயக்கன் எடுப்பித்துள்ளான். இதனை அம்மண்டபத்து தூண் ஒன்றிலுள்ள தமிழ், தெலுங்கு மொழிகளில் அமைந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கம்பத்தடி மண்டபத்திற்குக் கிழக்கே அமைந்த கோபுரத்தினை அச்சுததேவராயர்க்குப் புண்ணியமாக விசுவப்பநாயக்கர், ஈசுரப்பநாயக்கர் போன்றோர்கள் சேர்ந்து எடுப்பித்து உள்ளனர்.கோயில் வழிபாட்டிற்கும் கோயில் பணியாளர்களுக்கும் நாயக்கர் காலத்தில் மானியமாக பலவூர்கள் தானமாகத் தரப்பட்டிருக்கின்றன. விட்டலதேவ மகாராசர்க்குப் புண்ணியமாகத் தென்களவழிநாட்டுக் கணக்கன்குடியைச் சார்ந்த பாடி ஏந்தல் என்ற ஊர் தானமாகத் தரப்பட்டுள்ளது.இதன் வருவாயிலிருந்து கோயிலுக்கு மலர்மாலைகள் வழங்கப்பட்டன. திருமலைநாயக்கருக்குப் புண்ணியமாக மார்கழித்திருநாள் கொண்டாட சில வரிகள் கோயிலுக்கு கொடுக்கப்பட்டன. நாயக்கர்காலத்தில் கோயிலில், ஸ்ரீபாதம்தாங்கிகளுக்கு ஊதியமாக பல ஊர்களின் வரிகள் பலமுறை தானமாக அளிக்கப்பட்டன. உத்திரமேரூர் மகிபாலகுலகாலச் சேரியைச் சார்ந்த நரசய்யர் என்பவரால் கிருஷ்ணதேவராயர் உபயமாக புனர்பூசநட்சத்திரத் தினத்தன்று திருவாலவாயுடையார் திருவீதியுலா எழுந்தருளுவதற்கு ஐநூறுபொன் தானமாகத் தரப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் வாழ்ந்த வெற்றிலை பயிரிடுவோர்க்கு விதித்த வரிகள் பற்றியும் அவர்கள் கடமை பற்றியும் தெரிவிக்கின்றது ஒரு கல்வெட்டு. மதுரையில் கி.பி. 1547-ல் ஞானகூத்தர் என்பவரின் தலைமையில் இயங்கிய மடத்திற்காக நிலம் விடப்பட்டுள்ளது. மதுரைக்கோயிலில் கி.பி.1710ல் விசயரங்க சொக்கநாதநாயக்கர் காலத்தில் தன்னுயிரைப்போக்கிக் கொண்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. மதுரைக் கோயிலுக்கு உரிமையுடைய கோயில் நிலங்களிலிருந்து வழக்கத்திற்கு மாறாக அதிகவரிகளை வாங்கி அதிகாரிகள் சிலர் கோயில் குடிகளைத் துன்புறுத்திய செயலைக் கண்டித்து இது நடைபெற்றிருக்கிறது. மதுரைக்கோயிலில் பணியாளர் ஒருவர் கிழக்கு கோபுரத்தின் மீதேறி கீழே விழுந்து உயிர்துறந்தான் என்று நாயக்கர் காலக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கி.பி. 1842ல் பொறிக்கப்பட்ட கிழக்கு ராஜகோபுரக் கல்வெட்டு ஒன்று நித்திய கட்டளைக்கும் கோயிலில் பழமையான சாத்திரங்களை (சட்டம்) சொல்லித் தருவதற்கும் ஆங்கிலம் பயில்விப்பதற்கும் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டதைத் தெரிவிக்கிறது. பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியாரால் வழங்கப்பட்ட ஒருலட்சம் பக்கோடா பணத்திலிருந்து வரும் வட்டியை |
---|---|
பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவாப்புடையார் கோயில், ஆதிசொக்கநாதர் கோயில், காஞ்சனமாலை கோயில், தென்திருவாலவாய்க் கோயில், காலபைரவர் கோயில், செல்லத்தம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில் |
செல்லும் வழி | மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ளது. |
கோவில் திறக்கும் நேரம் | காலை 5.00 மணி முதல் 12.30 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் | பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் |
---|---|
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | மதுரை |
அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
தங்கும் வசதி | மதுரை நகர விடுதிகள் |
ஒளிப்படம் எடுத்தவர் | |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | இந்து சமய அறநிலையத்துறை |
வழிபாட்டுத் தலம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 May 2017 |
பார்வைகள் | 91 |
பிடித்தவை | 0 |