Back
வழிபாட்டுத் தலம்
திருமயிலை கபாலீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருமயிலை கபாலீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருமயிலை, கபாலீசு்சுவரம்
ஊர் மயிலாப்பூர்
வட்டம் மயிலாப்பூர்
மாவட்டம் சென்னை
உட்பிரிவு 1
மூலவர் பெயர் கபாலீசுவரர்
தாயார் / அம்மன் பெயர் கற்பகாம்பாள்
தலமரம் புன்னை
திருக்குளம் / ஆறு கபாலி தீர்த்தம்
வழிபாடு ஆறுகால பூசை
திருவிழாக்கள் இத்திருக்கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா மிக்க சிறப்புடையது. இவ்விழாவில் அறுபத்துமூவர் திருவிழா கண்கொள்ளாக் காட்சியாகும். பிரதோஷம், கிருத்திகை, ஆடிப்பூரம், ஆவணிமூலம், நவராத்திரி, சஷ்டி, திருமுறை விழா முதலியனவும் மார்கழி (தனுர்) மாத வழிபாடுகளும் இக்கோயிலில் சிறப்புடையவை.
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, பாண்டிய சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
கல்வெட்டு / செப்பேடு பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும். கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது. Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன. இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது. ("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது. இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை. அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. 11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது. பல்லவ மன்னன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது. மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் தேவகோட்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விநாயகர் காட்சி தருகின்றனர். அறுபத்துமூவருடைய உற்சவ மேனிகளும் அடுத்துள்ள மூலத்திருமேனிகளும் கண்ணுக்குப் பெரு விருந்தாகும். விமானத்தின் மேலே எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் சுதையில் செய்யப்பட்டுள்ளது. புன்னைவனநாதர் சந்நிதி - சிவலிங்கத் திருமேனி உள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூசித்ததால் மயில் உருவமும் சிலா ரூபத்திலுள்ளது. அழகான விமானத்துடன் அமைந்துள்ள சனிபகவான் சந்நிதியை வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழுது சுந்தரேஸ்வரர் ஜகதீஸ்வரர் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். அடுத்து நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள். சிங்காரவேலர் சந்நிதி சிறப்பானது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார மூவர்பாடல் பெற்ற தலம். காபாலிக சைவ சமயத்தின் மடமாக திகழ்ந்த தலம்.
சுருக்கம்
திருமயிலை என்றழைக்கப்படும் மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை மண்டலத் திருத்தலங்களுள் முதன்மையானது. தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில் கம்பீரமாகக் காட்சி தருவது அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். ‘திருமயிலைக் கபாலீச்சரம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் இத்தலம் அம்பாள் மயில்வடிவிலிருந்து வழிபட்டமையால் ‘மயிலாப்பூர்’ எனப்பெயர் பெற்றது. மயிலை என்றவுடன் நினைவுக்கு வருவதே இத்திருக்கோயில்தான்.இத்திருக்கோயில் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த பழைய கோயில் கடற்கரையில் இருந்தது. அது வெள்ளையர்களால் இடிக்கப்பட்டது. ‘H. D. லோவ்’ என்பவர் எழுதியுள்ள சென்னை சரித்திர நூலில் கி.பி. 1672ல் துருக்கியரோடு நடந்த போரின் போது பிரெஞ்சு சேனைகள் தற்போதுள்ள இக்கோயில் பிராகாரத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகக் குறித்துள்ளார். கி.பி. 1798ல் வெளியிடப்பட்டுள்ள நகரப் படத்தில் இக்கோயில் திருக்குளம் காட்டப்பட்டுள்ளது. கடற்கரையில் கோயில் இருந்த இடத்தில் அதை இடித்து வெள்ளையர்கள் கட்டிய வழிபாட்டு இடமே இப்போதுள்ள “சாந்தோம் கதீட்ரல் மாதாகோயில்” உள்ள இடமாகும். தேவாரத்தில் இத்தலம் ‘மயிலாப்பு’ என்று குறிக்கப்படுகிறது. (ஒற்றியூர்-திருத்தாண்-6) அருணகிரிநாதரும் “கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே” என்று பாடுகிறார். பெரியபுராணத்தில் இத்தலம் குறிப்பிடப்படுகிறது. திதிருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. வாயிலார் நாயனார் அவதரித்த தலம். தெய்வப்புலவர் திருவள்ளுவர் மயிலையில் பிறந்ததாக வரலாறு. திருஞானசம்பந்தர், எலும்பைப் பெண்ணாக்கிய (பூம்பாவை) அற்புதத்தை நிகழ்த்திய அருமையுடைய தலம். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் இத்தலத்தை பாடியுள்ளார்.
திருமயிலை கபாலீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயிலுக்கு முன்பு அழகான, பரந்த திருக்குளம் - தெப்பக்குளம் சுற்றிலும் நாற்புறமும், நன்கமைக்கப்பட்டுள்ள படிகளுடனும் ; நடுவில் நீராழி மண்டபத்துடனும் காட்சி தருகின்றது.கோயிலை நோக்கிச் செல்லும் நம்மை வரவேற்கும் ராஜகோபுரம் மிக்க அழகுடையது ; மேற்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்தால் நேர் எதிரே சுவாமி - அ/மி.கபாலீஸ்வரர் சந்நிதி - மேற்கு நோக்கியுள்ளது. எடுப்பான சிவலிங்கத் திருமேனி.சுவரில் தலப்பதிகமான ‘மட்டிட்ட புன்னை’ என்னும் பதிகம் கல்லில் பொறிக்கப்பட்டுப் பதிக்கப்பட்டுள்ளது. சுவாமி சந்நிதியுள் நுழைந்து வலமாக வரும்போது நடராசப் பெருமான் திருமேனி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உருத்திராக்கப் பந்தலில் பெருமான் காட்சி தருகின்றார். உலகெலாம் மலர்சிலம்படியைத் தொழுது நகர்ந்து வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் முருகப் பெருமானைத் தரிசித்து வலம் வரும்போது, சோமாஸ்கந்தர், பிட்சாடனர் முதலான உற்சவத் திருமேனிகளைத் தொழுது வணங்கலாம்.கோஷ்ட மூர்த்தங்களாகத் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, விநாயகர் காட்சி தருகின்றனர். அறுபத்துமூவருடைய உற்சவ மேனிகளும் அடுத்துள்ள மூலத்திருமேனிகளும் கண்ணுக்குப் பெரு விருந்தாகும். காலநிலைக்கேற்ப பல்வேறு சுவாமிகளின் வண்ணப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. வலமாக வந்து கபாலீச்சரக் கண்மணிையைக் கண்ணாரத் தொழுது வெளியே வந்து வலப்பால் சென்றால் அம்பாள் சந்நிதியைக் காணலாம். அ/மி. கற்பகாம்பாளின் அருள்வெளி - உள்ளே நுழையும் போதே தெய்வீக மணம். நேரே நின்று, நின்ற கோலத்தில் காட்சி தரும் கற்பகவல்லியைத் தரிசிக்கலாம். உள்ளே வலம் வரும் போது சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பாளின் வண்ணப் படங்களையும் கண்டு கை தொழலாம். வெளியே வந்து வலப்புறம் திரும்பி வெளிப் பிராகாரத்தில் வரும் நமக்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள பூம்பாவை சந்நிதி முதல் தரிசனம் தருகின்றது. விமானத்தின் மேலே எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதம் சுதையில் செய்யப்பட்டுள்ளது. கண்டு தொழுது வலம் வரும்போது அலுவலக அறையையொட்டி புன்னைமரம் - தலமரம் காட்சி தருகிறது. மயிலாய் அம்பிகை பூசித்த வரலாறு உள்ளது. புன்னைவனநாதர் சந்நிதி - சிவலிங்கத் திருமேனி உள்ளது. அம்பாள் மயில் வடிவில் பூசித்ததால் மயில் உருவமும் சிலா ரூபத்திலுள்ளது. பக்கத்தில் உள்ள கூண்டில் இரு மயில்கள் தேவஸ்தானப் பராமரிப்பில் வளர்கின்றன. அழகான விமானத்துடன் அமைந்துள்ள சனிபகவான் சந்நிதியை வலமாக வந்து நவக்கிரகங்களைத் தொழுது சுந்தரேஸ்வரர் ஜகதீஸ்வரர் சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். அடுத்து நர்த்தன விநாயகர், அண்ணாமலையார் சந்நிதிகள். சிங்காரவேலர் சந்நிதி சிறப்பானது. சிறிய நந்தவனம் உள்ளது. தண்டாயுதபாணி சந்நிதியும், வாயிலார் நாயனார் சந்நிதியும் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளன. தேவஸ்தானத்தில் நூலகம் உள்ளது. பதினாறுகால் (அலங்கார) மண்டபமும், நான்கு கால் (சுவாமி எழுந்தருளும்) மண்டபமும் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சாந்தோம் தேவாலயம்
செல்லும் வழி சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை
திருமயிலை கபாலீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மயிலாப்பூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாப்பூர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி மயிலாப்பூர், சென்னை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Sep 2017
பார்வைகள் 219
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்