வரலாற்றுச் சின்னம்
செவல்பட்டி குடைவரை
தொல்லியல் சின்னத்தின் பெயர் செவல்பட்டி குடைவரை
அமைவிடம் செவல்பட்டி மலைக்குன்று
ஊர் செவல்பட்டி
வட்டம் வெம்பக்கோட்டை
மாவட்டம் விருதுநகர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
இக்குடைவரையின் முகப்பில் இரண்டு தூண்களும் அவற்றிற்கு நேராகப் பக்கவாட்டில் இரு அரைத்தூண்களும் அமைந்துள்ளன. இத்தூண்களின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் சதுரமாகவும் நடுப்பகுதி எட்டுப் பட்டைகளுடனும் காணப்படுகின்றது. நடுவில் உள்ள தூண்களில் சதுரங்களின் தென்புறம் தவிர மற்ற பக்கங்களில் தாமரை மலரின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. சில பகுதியில் அன்னம், யாளி, சிங்கம், நந்தி, யானை ஆகிய உருவங்கள் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளன. வலப்புற முழுத் தூணின் மேற்சதுரத்தில் மேற்கு முகத்தில் நாகத்தினை கையில் பிடித்திருக்கும் பூதகண உருவம் அமைந்துள்ளது. அரைத்தூண்களின் பக்கங்களில் பதக்கங்கள் எவையும் இல்லை. வட்ட அமைப்பு ஒன்றை மேற்கு அரைத்தூணின் மேற்சதுரத்தில் மட்டும் வடித்துள்ளனர். முகப்பை அடுத்து முகமண்டபமும் அதனை அடுத்து பின் சுவரில் வடக்கு நோக்கிய கருவறையும் காணப்படுகின்றன. கருவறையில் வழிபடும் உருவம் ஏதும் இல்லை . கருவறையின் வாயிலில் இருபுறங்களிலும் வாயிற்காவலர்களின் புடைப்புச் சிற்பங்கள் திரிபங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட சதுர முகமண்டபத்தில் அரைத்தூணை அடுத்துள்ள கிழக்குச் சுவரில் கோட்ட அமைப்பினுள் தாண்டவ மூர்த்தியாக சிவபெருமான் ஆடல் (நடராசர்) உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட பகுதிகள், அழகிய கோட்டங்களாக வகுக்கப்பட்டு அவற்றில் சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தென்கிழக்கு மூலையில் மட்டும் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. இரண்டாம், மூன்றாம் அங்கணங்களுக்கு எதிரே அமைந்துள்ள கோட்டங்களில் முறையே திருமால், விநாயகர் ஆகியோரின் சிற்ப உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் முன்புறம் நான்கு படிகள் உள்ளன. கடைசிப் படி அரைவட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் முகப்பு வாயிலை யொட்டி இருபுறமும் நான்கு அரைத்தூண்கள் அமைந்துள்ளன. இத்தூண்களின் இடைப்பட்ட பகுதியே கோட்டங்களாக அமைக்கப்பட்டு அவற்றுள் வாயிற்காவலர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத் தரையிலிருந்து சற்று உயரத்தில் வாயிற்காவலர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். அழகிய மகுடம், முப்புரி நூல், மீசையுடன் கூடிய முகம், இடையில் ஆடை, காதில் குண்டலம் ஆகியவற்றுடன் காணப்படும் வாயிற்காவலர்கள் இரு கைகளுடன் காணப்படுகின்றனர். தென்புற வாயிற்காவலர் வலக்கரத்தை இடுப்புக்குக் கீழே ஊன்றியவாறும் இடக்கரத்தில் பரசுவை ஏந்தியவாறும் பொழிவுடன் நேர்கொண்ட பார்வையாய் நிற்கின்றார். வடக்குப் பகுதி வாயிற்காவலர் கதையின் மீது வலது கையைத் தாங்கியவாறும் இடக்கரம் வலது தோளின் அருகே கையைப் பிடித்தவாறும் காணப்படுகின்றார். பின்புறச்சுவரில் காணப்படும் திருமாலின் உருவம் சமபங்க நிலையில் பின் இரு கைகளில் சங்கு சக்கரம் ஆகியவற்றை ஏந்தியவாறு உள்ளது. இவர் தலையில் கிரீடமகுடமும் காதுகளில் மகர குண்டலங்களும் மார்பில் அணிகலன்களுடனும் மடிப்புடன் கூடிய ஆடை அமைப்புடனும் காணப்படுகின்றார். முன் இடக்கை ஊரு முத்திரை காட்டியவாறும் முன் வலக்கை இடுப்பின் அருகில் குழிந்த நிலையில் வைத்தவாறும் விளங்கும் இவர் மிக்க கலை நுணுக்கத்துடன் காணப்படுகின்றார். மண்டபத்தின் தென்புறச் சுவரில் ஆடவல்லானின் உருவம் நான்கு கைகளுடன் காணப்படுகிறது. பின் வலக்கையில் ஓலைச்சுவடி உள்ளது. இதனை உடுக்கை என்பார் திரு.சி. சிவராமமூர்த்தி, பின் இடக்கையில் தீயும் முன்வலக்கை சற்றே நீண்டு தொங்கியவாறும் முன் இடக்கை காக்கும் நிலையிலும் காணப்படுகின்றது. மேற்புறமாகச் சற்று பின்புறம் தொங்கியவாறு அமைந்துள்ள சடைமுடி மிகவும் நேர்த்தியான அமைப்பில் காணப்படுகிறது. செவிகளில் பனையோலைக் குண்டலங்கள் காணப்படுகின்றன. இச்சிற்பம் தனித்தன்மை வாய்ந்ததெனக் கருதப்படுகிறது. சிவபெருமானின் "அர்த்தஸ்வஸ்திகக்" கரணத்தில் காட்சித்தரும் ஆடல் தோற்றம் இங்கு கண்கொள்ளாக் காட்சியாகும். முக மண்டபத்தின் மற்றுமொரு கோட்டத்தில் குழவியொன்று அமர்ந்தது போன்ற அழகுடன் விநாயகரின் சிற்பம் காணப்படுகிறது. இரண்டு கைகளை உடைய விநாயகர், இடத்தொடையில் ஊன்றிய இடக்கையில் முறிந்த தந்தத்தைப் பிடித்தவாறும் வலக்கையில் மோதகமும் கொண்டு அமைந்துள்ளார். வலம்புரி விநாயகர் உருவமாகக் கரண்ட மகுடத்துடன் கூடிய கம்பீரமான தோற்றமாக இது விளங்குகிறது. மேலைச் சாளுக்கியப் பாணியைப் பெரிதும் இச்சிற்பம் ஒத்துள்ளது. முப்புரி நூலும் உதரபந்தமும் கங்கணங்களும் கொண்டு விளங்கும் இவரது ஆடையின் முடிச்சுகள் பாதங்களுக்கு இடையில் அழகுடன் காட்டப்பட்டுள்ளது. குடைவரையின் வெளியே சிதைந்த சிற்பப்பகுதியொன்று காணப்படுகின்றது. தலையும் மற்ற பகுதியும் உடைப்பட்ட நிலையில் இத்தெய்வத் திருமேனிக் காணப்படுகிறது. பெருமாள், தாய்ப் பாறையிலேயே அமைக்கப்பட்ட நந்தி போன்ற உருவங்கள் இங்கு அமைந்துள்ளன. இதன் அருகில் உள்ள கல்வெட்டு ஒன்றும் சிதைந்து காணப்படுகின்றது. எனினும் இக்குடைவரைக் கோயில் பாண்டியர் களால் எட்டாம் நூற்றாண்டில் குடைந்தெடுக்கப்பட்டக் குடைவரை என்பதனை இதன் சிற்ப வடிவங்களைக் கொண்டு அறிய முடிகிறது.
பாதுகாக்கும்நிறுவனம் மத்தியத் தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவள்ளி உடனுறை பூவனாதர் கோயில்
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொற்கள்
சுருக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் வட்டத்தில் உள்ள ஊர். சிவகாசியில் இருந்து தெற்காக திருவேங்கடம் செல்லும் வழியில் செவிலிப்பட்டி அல்லது செவல் பட்டி என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரின் அருகில் வைப்பாறு ஓடுகிறது. இவ்வூரை செவலப்பட்டி என்றும் கூறுவர். இராசபாளையத்திலிருந்து திருவேங்கடம், செல்லும் வழியில் 44 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரிலிருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் உள்ள அருணகிரி மலையின் மேல் வடக்கு நோக்கிய நிலையில் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் பிற்காலத்தில் கட்டப்பட்ட அருணகிரிநாதரின் கோயில் ஒன்றும் வழிபாட்டில் உள்ளது. குடைவரையைச் சென்றடையும் பாதையில் படிகள் சரிவர அமைக்கப்படவில்லை. மலைப்பாறை மேலிருந்து கீழ்ப்புறம் உள்ளடங்கி அமைந்த பகுதியில் குடைவரைக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. குடைவரையின் முகப்பு நடுவில் இரண்டு முழுத்தூண்களையும் ஓரத்தில் இரண்டு அரைத்தூண்களையும் பெற்று மூன்று அங்கணங்களைத் திறப்புகளாகவும் நடு அங்கணத்தின் கீழே படிகளுடனும் அமைந்துள்ளது. படிகளின் மீதேறிச் சென்றவுடன் நம்மை வரவேற்பது நடுக்கோட்டத்திலிருக்கும் விஷ்ணு. விஷ்ணுவிற்கு இடதுபுறம் பிள்ளையார், வலதுபுறம் ஆடல்நாயகன். முகப்புத் தூண்களில் அமைந்துள்ள தரங்கப் போதிகைகள் உத்திரம் தாங்க, அதற்குமேல் வாஜனம். வலபியோ, அதில் பூதவரியோ இல்லை. இவைதவிர, இரு கைகள் மட்டும் கொண்ட கோட்டப் பிள்ளையார், ஆடல்நாயகன் மற்றும் விஷ்ணு சிற்பங்களின் அமைப்பு சிறப்பிற்குரியது.
குறிப்புதவிகள்
செவல்பட்டி குடைவரை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

  • TVA_MON_00104/TVA_MON_00104_வி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் மத்தியத் தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 103
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்