Back
வழிபாட்டுத் தலம்
மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில்
வேறு பெயர்கள் மீனாட்சி அம்மன் கோயில், அரியமாணிக்கவல்லி அம்மன்கோயில்
ஊர் மேலத்திருமாணிக்கம்
வட்டம் பேரையூர்
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் மீனாட்சி
வழிபாடு ஒருகால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பாண்டியர்
கல்வெட்டு / செப்பேடு கோயில் கருவறையைச் சுற்றியுள்ள அதிட்டானப் பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள் மிகவும் சேதமடைந்துள்ளன. மேலும் கோயில் புனரமைப்பின் போது மாறி மாறி வைக்கப்பட்டுள்ளன. எனவே இக்கல்வெட்டுகளை தொடர்ச்சியான கல்வெட்டுகளாக வாசித்திட இயலவில்லை. துண்டுக் கல்வெட்டுகளாக சில செய்திகளைத் தருகின்றன. தேவதான நிலங்கள், அவற்றின் வரிகள் பற்றிக் கூறுகின்றன. நந்தன் கொண்டானான மந்தன சக்ரவர்த்திகள், நந்தபிரான் பட்டன், சாதபிரான் பட்டன், சத்தமரரான பட்டன் போன்ற பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இக்கல்வெட்டு நொந்தா விளக்கெரிக்க கொடுக்கப்பட்ட கொடையை குறிப்பிடுகிறது எனலாம். விளக்கு கொடைக்காக நிலம் விற்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகளும், விற்றுக் கொடுத்தோர் பெயரும் குறிப்பிடப்படுகின்றன. இக்கோயில் இறைவன் மணிக்கயமுடைய இறைவனுக்கு நிலம் விற்றுத் தரப்பட்டதைச் சொல்லும் ஆவண அமைப்புக் கல்வெட்டாக இது காணப்படுகின்றது. மதுரைக்கு அருகிலுள்ள திருப்பூவணம் என்னும் ஊர்ப் பெயரைத் தாங்கிய திருப்பூவணவன் தேவன் என்னும் அதிகாரி குறிப்பிடப்படுகிறான். இங்குள்ள இறைவன் தென்முட்ட நாட்டுத் திருமணிக்கயமுடைய பரமசுவாமிகள் என்று குறிப்பிடப்படுகிறார். ஆராதிரயன், திருப்பூவணவன், தோள்ளுடையான், சராகாயன் திருப்பூவணமுடையன், மாணாபரணன் சாத்தா பிரான், சீராளன், இராமனான குலசேகர தேவன் ஆகிய பெயர்கள் கையொப்பமிட்ட பெயர்களாக காட்டப்பட்டுள்ளன. மற்றொரு கல்வெட்டு தென்முட்ட நாட்டு மணிக்கயமுடைய பரமசுவாமிகள் கோயிலுக்குக் கருநிலக்குடி நாட்டுப் பிரமதேயம் சோழ பாண்டியச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. ஆத்திரேயன் தேவன் பெரிய தோளுடையானேன், திருப்பூவணவன் ஆகிய பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. சிறு துண்டுக் கல்வெட்டுகளாக சில கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. சிவன் கோயில் நிர்வாகத்தினர் பற்றியும் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலங்கள், அவற்றிற்குரிய வரிகள் பற்றியும் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திரமம் என்ற காசு, நிலமளக்கும் 18 அடிகோல் ஆகியவையும் இடம் பெறுகின்றன. கோயிலுக்கு வழங்கப்பட்ட நில தானத்தைக் குறிக்கும் கல்வெட்டு பல துண்டுகளாக இருப்பதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. இங்குள்ள மற்றுமொரு விக்கிரமபாண்டியனின் கல்வெட்டாக இருக்கலாம். கோமாறபன்மன் என்று அரசன் குறிப்பிடப்படுகிறான். சுந்தரபாண்டிய தேவன் அறங்காத்தான், தேவனம்பி சிவகலியாண நம்பி, ஹரிஹரன் பட்டன், அம்பலப் பெருமாள் ஆகிய ஆட்கள் பெயர்கள் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன் சோழனை எறிஞ்சவன் என அடைமொழியில் சுட்டப்படுகிறான். முட்ட நாட்டு திருமணிக்கயத்து திருமூலத்தானத்து பெருமானடிகளுக்கு அருங்குளத்தினைச் சேர்ந்த பொதுமவனக்கனாயின அத்தாணி எட்டி என்பவன் விளக்கு எரிக்க 40 வெள்ளாடுகளும் 10 செம்மறியாடுகளும் கொடுத்து நாள் தோறும் உழக்கு நெய் வழங்க ஏற்பாடு செய்தான். மற்றொரு கல்வெட்டின் பிற்பகுதி நாச்சியார் கோயிலில் முன் இடிந்து போன தெய்வங்களை நவ பிரதிட்டை செய்ததைக் குறிக்கிறது. முற்பகுதி தெய்வங்களை நவ பிரதிட்டை செய்தவர்களின் பெருமையைக் கூறுகிறது. புராணச் செய்திகளும் உள்ளன. முத்திரைக் கணக்கராக விளங்கிய பொம்மதேவனின் நித்திய சேவையைக் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. முத்திரைக் கணக்கர் என்பவர் இன்றைய பத்திரப் பதிவாளர் என்னும் அதிகாரி ஆவார். நிலஞ் சார்ந்த ஆவணங்களை கணக்கெடுத்து ஆவணப்படுத்தும் பணியை இவர் செய்திருக்கலாம். திருமணிக்கயமுடைய நாயனார் கோயிலில் திருவிளக்கு (சந்தியா தீபம்) எரிப்பதற்காக ஆறு பசுக்கள் அளிக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இதனை நாட்டாயதராம நல்லூர் தேவர் தொண்டைமானார் அகம்படியர் பல்லவரையன் அளித்துள்ளான். சிவன் கோயிலுக்கு இறையிலியாக நிலங்கள் அளிக்கப்பட்டு அவற்றிற்குரிய வரி விகிதங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த ஆவணத்தில் வீரசிங்கதேவன், தொண்டைமான், போயன், மீனவதரையன், தனஞ்செய ராயன், வாணவத்தரய்யன் ஆகியோர் கையொப்பமிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கோயிலுக்கு இறையிலியாக கொடுத்த நிலங்களின் விபரம் இடம் பெறுகிறது. புண்ணியனான புராண விடங்க மாராயன், அம்பலவன் சீவன், புகழிவேந்தன் ஆகியோர் இதில் தொடர்புடையவர்களாக வருகின்றனர். திருமணிக்கயமுடைய நாயனார்க்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது இக்கல்வெட்டு. மேலும் கருஞ்செய், புன்செய் முதலிய நிலங்களுக்குரிய வரிகளும் கோயில் பண்டாரத்தில் செலுத்த வேண்டிய அளவும் குறிப்பிடப்படுகிறது. பிற்காலப் பாண்டியரின் மெய்க்கீர்த்திப் பகுதிகள் இக்கல்வெட்டுகளில் வருகின்றன. கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகின்றன. சீயன் திருவரங்கப் பெருமாள், சாந்தனான தென்னவன் மாராயன் ஆகியோர் இக்கல்வெட்டுகளில் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்படுகின்றனர். துண்டுக் கல்வெட்டுகளாக காணப்படுகின்ற இக்கல்வெட்டுகளின் முழுமையான வரலாற்றுச் செய்தியை அறியக்கூடவில்லை. திருமணிக்கயமுடைய நாயனார் கோயிலில் பணி செய்யும் பல மாஹேஸ்வரர்களின் பெயர்கள் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. கோயில் பணியாளர்களுக்கு உரிய பங்குகள் குறிப்பிடப்படுகின்றன. பலர் இவ்வாவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். திருமாணிக்க பட்டன், திருமணிக்கய வாச்சியமாராயன், சீரிபட்டன் தேவன், வயிரமான், வழுதிமான், திருநீலகண்டன் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலப் பாண்டியரின் மெய்க்கீர்த்திப் பகுதி காணப்படுகிறது. கிருட்டின தேவனான அகம்படித் தட்டார் இவ்வூர் மண்டபத்தில் இருக்கும் போது இருநூறு பழங்காசிற்கு நிலம் ஒன்றை விற்றுக் கொடுத்த ஆவணமாக இக்கல்வெட்டு உள்ளது. தாமோதர பட்டன், கிரிட்டின தேவனான அகம்படி தட்டான் ஆகிய பெயர்கள் இத்துண்டு கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குளம் மற்றும் குளப் பகுதிகளை விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. வீரபாண்டியச் சதுர்வேதிமங்கலம், நிலவரிகள், சாட்சிகள், பெயர்கள் ஆகியவையும் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. புலவன் புண்ணியனான புராண விடங்கமுடையான், இரட்டை நாகனான புகலி ஆகியோருக்கான நில எல்லைகள் கூறப்படுகின்றன. ஞானபட்டன், அம்பலப் பெருமாள், சோழ குலாந்தக ஆசாரியன், கேசவ பட்டன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முதற் திருச்சுற்று வடபுற மதிலின் உட்புறம் உள்ள இக்கல்வெட்டுகள் யாவும் துண்டுக் கல்வெட்டுகளாகும். இக்கல்வெட்டுகளின் மூலம் முழுமையான செய்திகளை அறிய முடியவில்லை. நிலக்கொடை தொடர்பான ஆவணம், அரசனது திருமுகம், கையொப்பம் இட்டவர்கள், கோயில் நிர்வாகத்தினர் பற்றி இத்துண்டுக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. நிலக்கொடை மற்றும் அதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. கையொப்பமிட்ட அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. விளக்கு எரிப்பதற்காக ஆறு பசுக்கள் கொடையளிக்கப்பட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது. இக்கல்வெட்டுகள் யாவும் துண்டுக் கல்வெட்டுகளாகவே உள்ளன. விக்கிரமபாண்டியராயன், பாண்டியநம்பி, செயபாண்டிய பட்டன், அழகப்பிரான் ஆகியோர் கையொப்பமிட்டதாக கல்வெட்டில் காணப்படுகின்றது. இக்கல்வெட்டு முழுமை பெறாத துண்டுக் கல்வெட்டுகளாகவே கிடைக்கின்றன. நிலக்கொடை ஆவணங்கள், கையொப்பம் இட்டவர்களின் பெயர்கள், நில எல்லைகள், அளவுகோல் முதலியன குறிப்பிடப்படுகின்றன. முடிவழங்கு பாண்டியராயன், ஸ்ரீதர நம்பி, பெருங்காவிதி சுந்தரபாண்டியன், அரி சேகரப்பட்டன், அமுதன் ஆகிய பெயர்கள் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பத்துப் பழங்காசுகளுக்காக தென்னை முதலிய மரங்கள் உள்ள நிலங்களைப் புலவன் புண்ணியன் என்பவன் அம்பலவன் திருமணிக்கயமுடையான் போன்றோர்க்கு விலைக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்படுகிறது. கோயிலில் திங்கள் தோறும் செய்யப்படும் செலவுகளுக்காக இந்நிலக் கொடை வழங்கப்பட்டிருக்கலாம். திருநாளின்போது இறைவன் எழுந்தருளுவதற்கும், திருவமுது செய்வதற்கும், திருநந்தவனத்திற்கும் பாண்டியன் குலசேகரனின் பெயரால் தானம் அளித்தது தொடர்பான கல்வெட்டுகள், கோயில் நிர்வாகம், வரிகள் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன. கண்காணி செய்வார்கள் என்று கோயில் நிர்வாகத்தினர் குறிப்பிடப்படுகின்றனர். கோயில் நிர்வாகத்தினர், பலதரப்பட்ட அரச அலுவலர்கள் ஆகியோரது பெயர்கள் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருநாளில் இறைவன் எழுந்தருளுவதற்குக் கொடை அளித்ததையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பெரியநாயன், உத்தம பாண்டிய விழுப்பரையன், வயிராத ராயன், செங்குடி நாட்டுப் புலவரையன், குலசேகர சக்கரவர்த்தி, முடிவழங்கு பாண்டியராயன், பாண்டிய மாராயன், சுந்தரபாண்டிய நம்பி, அழகிய பிராந்நம்பி, கோதண்டராம நம்பி,குலசேகர நம்பி, அழகப்பிரான் பட்டன், நரசிங்கபன்மன், வலங்கை வாழவந்த தேவன், சேரமாந்தோழன், விழுப்பரையன், வாணவதரையன், சேனை பட்டன், சீனத்தரையன், கட்டளை விழுப்பரையன், கேசவன் வில்லகங்கன், இரணசிங்கதேவன், கொன்றை சோமுட்டன், மனுகுல நாரண விழுப்பரையன், கல்லாதரையன், பொன்னம்பல காடமன் பாண்டியன் ஆகிய பெயர்கள் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. குலசேகர பாண்டியன் பெயரால் வைகாசி திருநாளில் அவன் பிறந்த நட்சத்திரத்தில் கோயிலில் வழிபாடு செய்ய இறையிலியாக நிலக்கொடை அளித்ததை இத்துண்டுக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வெள்ளெரிச்சில் என்ற ஊர் குலசேகர நல்லூர் என்ற பெயரில் கோயிலுக்குத் தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் யாவும் துண்டுக் கல்வெட்டுகளாகவே கிடைத்துள்ளன. திருமணிக்கயமுடையார்க்குக் குலசேகரநல்லூரைத் தேவதானமாக அளித்ததை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சதய நாளில் கோயில் வழிபாடு நடத்தப் பெற்றிருக்க வேண்டும். அழகப்பிரான் என்பவனுக்குக் காரணாண்மை ஜன்மமாக நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டதை இவை தெரிவிக்கின்றன. வெள்ளெறிச்சிலான குலசேகரநல்லூரை அழகப்பிரான் பட்டனுக்கு காராண்மையாக விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. குலசேகர நல்லூரின் எல்லைகளும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. நிலவரி விகிதம் கோடை, குறுவை போகங்களுக்கு ஏற்றாற்போல் வாங்க வேண்டும் என்பதும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. அரசன் குலசேகரன் பிறந்த நாளில் கோயிலில் திருநாள் கொண்டாடி இறைவன் எழுந்தருள் வெள்ளெரிச்சிலான குலசேகரநல்லூர் தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பணத்திற்கு நில விற்பனை செய்யப்பட்டதையும் இத்துண்டுக் கல்வெட்டுகள் கூறுகின்றன. நாற்பத்தெண்ணாயிர பட்டன், யேசுர பட்டன், மாடாபத்தியன் மானேந்திய கையன் ஆகிய பெயர்கள் குறிக்கப்படுகின்றன. முதலாம் இராசேந்திரனின் மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி மட்டும் இங்கு இடம் பெற்றுள்ளது. பிரமதேய மகாசபை முப்பத்தெட்டு பழங்காசிற்காக நிலமளித்த செய்தியும், தானமளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளும் குறிப்பிடப்படுகின்றன. வரிசை நாட்டு ஊர் கோயிலுக்கு நிலக்கொடை, அதன் எல்லைகள் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. ஆயுதராமநல்லூர் என்ற ஊராரால் நிலக்கொடை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. 16 நிலமளக்கும் கோல் குறிக்கப்படுகிறது. திருவிராமீசுவரமுடையான், சுந்தரத் தோளுடையான் ஆகிய பெயர்கள் குறிக்கப்படுகின்றன. ஆயுதராமநல்லூர் என்னும் ஊரவர்கள் எழுதிக்கொடுத்த ஒப்புதலாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது. சங்கரப்ப நாயக்கர், சீவலப்ப நாயக்கர், பொம்மன் நாயக்கர் ஆகியோரது உருவச் சிலைகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தூண்களில் உள்ள உருவச் சிலைகளின் அடியில் உள்ள கல்வெட்டுகளில் இப்பெயர்கள் காணப்படுவதால் சிற்பங்களை அடையாளங்காணுதலென்பது இயலுகிறது. இக்கோயில் அம்மன் சன்னதியில் உள்ள மகாமண்டபத் தூண் ஒன்றினை வடமுட்ட நாட்டு ஆற்றூரான ஆயுதவீம நல்லூர் செய்வித்தது என்று இக்கல்வெட்டு கூறுகிறது. கன்னிச் செட்டி நாயக்கரின் நித்திய சேவையையும் அவர் வைத்த தூண் ஒன்றையும் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்திப் பகுதியை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பாண்டியரின் வெற்றிகளைக் குறிப்பதோடு முட்ட நாட்டுக் கொள்ளிக்குடி கோயில் குறித்தும் குறிப்பிடுகின்றன. ஆறு துண்டுக் கல்வெட்டுகளாக காணப்படுகின்றன. ஊரவையின் முடிவுகளும் திருமாணிக்கம் பகுதியில் இருந்த குளம் ஒன்றினை தேவதானமாக வழங்கியதும் இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. மோடனேரி, வீரபாண்டியன் குளம் முதலிய குளங்களும் குறிப்பிடப்படுகின்றன. முட்டநாட்டுத் திருமணிக்கயத்து மூலத்தானத்துப் பெருமானடிகள் கோயிலில் விளக்கு எரிப்பதற்காக முட்டநாட்டு நக்கன் என்பவன் தன் மகனைச் சார்த்தி 25 ஆடுகள் அளித்ததை கல்வெட்டு கூறுகிறது. தேவதான நிலங்களின் எல்லைகள், கையொப்பமிட்ட அதிகாரிகளின் பெயர்கள், பாண்டியன் பெயரால் அமைந்த அளவுகோல்கள் இப்பகுதியில் அமைந்த பிரமதேயம் பற்றிய குறிப்பு முதலியவை இடம் பெறுகின்றன. முனையதரையன், தேவனழகனான வானவன் விழுப்பரையன், ஆதிச்ச தேவன் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. சில துண்டுக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. ஸ்ரீபராந்தக நல்லூர் என்னும் ஊர்ப் பெயர் குறிப்பிடப்படுகிறது. குறிச்சி உடையான், முனையதரையன், பல்லவரையன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். இக்கல்வெட்டு கோயில் முன்புள்ள நுழைவாயில் மண்டபத்தினை இளையபெருமாள் பிள்ளை குமாரர் முத்துச்சாமியாபிள்ளை கட்டியதைத் தெரிவிக்கிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி கருவறையில் இலிங்க வடிவத்தில் இறைவன் காட்சியளிக்கிறார். கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் மேற்கே அண்ணாமலையார், வடக்கே நான்முகன் உள்ளனர். அர்த்தமண்டப புறச்சுவர் கோட்டப்பகுதியில் வடக்கே துர்க்கையும், தெற்கே கணபதியும் நின்றநிலையில் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் கன்னிமார் எழுவர் சிற்பங்கள் உள்ளன. திருச்சுற்றில் கணபதி மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருளும் சிற்பங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் தனி சந்நிதி பெற்று உள்ளன. அம்மன் தனி கருவறை விமானத்தின் கீழ் நின்ற நிலையில் உள்ளார். மண்டபத் தூண்களில் இக்கோயிலுக்கு கொடையளித்த அரசர்கள் தன் துணைவியருடன் நிற்கும் தூண் சிற்பங்கள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 800 ஆண்டுகள் பழமையானது. கல்வெட்டுகள் அதிகம் இடம்பெற்றுள்ள கோயில்.
சுருக்கம்
மதுரை மாவட்டம் மேலத் திருமாணிக்கம் என்ற கிராமம் சதுரகிரி மலையின் வடக்குப்பக்க அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகம விதிகளின்படி சேர மன்னர்களால் கட்டப்பட்ட சிவத்தலமாகும். இங்குள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இக் கோவில் அமைப்பு சிறியதாக இருந்தாலும் மூன்று திருச்சுற்றுகளுடன் கூடியதாக சிறப்புற்று இருந்து வந்துள்ளது. பாண்டிய மன்னார்களால் இக்கோயில் பராமரிப்பு செய்து பேணி பாதுகாப்பு பெற்று வந்துள்ளது. காலப்போக்கில் சற்று சிதைவடைந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறையினால் புனரமைப்பு செய்யப்பட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தின் துணைக்கோயிலாகவே செயல்பட்டு வருகிறது, நித்திய அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஒரு சித்தர் சமாதி நிலை அடைந்த வரலாற்றுடன் ஆதிமூர்த்தி ஐயர் என்ற சித்தர் சமாதியும் உள்ளது, இக்கோயிலின் வெளிப்புறத்தில் இதன் துணைக்கோயிலாக அரியமாணிக்கவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை மேலத்திருமாணிக்க கிராமத்தின் கிராம தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்
மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு கோயில் இராஜகோபுரம் அற்று உள்ளது. எனினும் முகப்பு வரவேற்பு மண்டபம் உள்ளது. இதனையடுத்து பரந்த வெளி மதிற்சுவருடன் காணப்படுகிறது. பலிபீடம், கொடிமரம், நந்திமண்டபம் ஆகியவை நேராக காணக்கிடைக்கின்றன. தொடர்ந்து மகாமண்டபத்தில் தூண்களுடன் சிற்பங்கள் காணப்படுகின்றன. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை சதுர வடிவில் காணப்படுகின்றது. கருவறை விமானம் சுதைச் சிற்பங்களுடன் கூடியதாக காட்சியளிக்கிறது. தாங்குதளம் முதல் கூரை வரை கல் கட்டிடமாக இக்கருவறை காட்சியளிக்கிறது. திருச்சுற்றில் இறை சிற்பங்கள் அமைந்துள்ளன. அம்மன் சந்நிதி தெற்கு நோக்கி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வீருஜக்கம்மாள் கோயில், ஸ்ரீஅங்குத்தாய் கோயில், ஸ்ரீநல்லுத்தாய் காளித்தாய் கோயில்
செல்லும் வழி மதுரையிலிருந்து உசிலம்பட்டி வழியாக மேலத்திருமாணிக்கம் செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரரேசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் மேலத்திருமாணிக்கம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி உசிலம்பட்டி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 321
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்