வழிபாட்டுத் தலம்
அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கோயில்பட்டி சிவன் கோயில் |
| ஊர் | வி.கோவில்பட்டி |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் |
| தலமரம் | வில்வம் |
| வழிபாடு | இருகால பூஜை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜசோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | திருச்சுற்று மாளிகையின் நீண்ட சுவர்ப்பகுதிகளில் கல்வெட்டு காணப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் சோழர் காலத்தியவை. இக்கொயிலுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளைப் பற்றி இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. |
| சுவரோவியங்கள் | சுவர்ப் பகுதியில் அனுமன் ஓவியமும், அர்த்தமண்டபத்தின் முகப்பின் இருபுறமும் பாண்டி வீரனும், மீனாட்சியும் ஓவியமாக வரையப்பட்டுள்ளனர். இவ்வோவியங்கள் காலத்தால் பிந்தியவை. |
| சிற்பங்கள் | கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் தென்முகக்கடவுள், கணபதி, இலிங்கோத்பவர், துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. தூண்களின மாலாஸ்தானம் எனப்படும் மாலைத் தொங்கல் பகுதிகளில் வெகு கலை நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணப்பர், புருஷாமிருகம், பெருமாள், முனிவர்கள், திருவிளக்குகள், ஆடல் மகளிர் ஆகிய சிறிய வடிவ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கூரைப்பகுதியில் காணப்படும் நாசிக்கூடுகளில் ஆடல்வல்லான், கஜசம்ஹாரமூர்த்தி, பிட்சாடனர், கணபதி, ஆடல் மகள், முருகன், நரசிம்மர், வீணாதரர் ஆகிய திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. மேலும் கொடுங்கைப் பகுதியின் கீழே வரிசையாக பூதகண வரிசைகள் காட்டப்பட்டுள்ளன. பூதகணங்கள் ஆடல் பாடலோடு, இசைக்கருவிகளை முழக்கியும், ஆனந்தத்தில் களித்துள்ளன. தேவகோட்டங்களின் மேல் பகுதியில் காட்டப்பட்டுள்ள விமானம் அமைப்பில் இருபுறமும் விமானந்தாங்கிகள் அமர்ந்த நிலையில் உள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி. |
|
சுருக்கம்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில் முற்காலச் சோழர்களின் கற்றளியாக விளங்குகிறது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனின் காலத்திய கல்வெட்டைக் கொண்டுள்ளது. எழில்வாய்ந்த தூண்களையும், சிற்பங்களையும் கொண்டுள்ளது.
|
|
அருள்மிகு ஸ்ரீமருதோதய ஈஸ்வரமுடையார் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் சோழர்காலக் கற்றளி. இங்கு அமைந்துள்ள தூண்களில் உள்ள மாலைத்தொங்கல் பகுதி புடைப்புச் சிற்பங்கள் எழில் வாய்ந்தவை. மேலும் நாசிகைகளில் அமைந்துள்ள கூடுமுகங்களில் காட்டப்பட்டுள்ள இறைத் திருவுருவங்கள் சிற்றுருவங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் முகப்பு மண்டபத்தைக் கொண்டதாக விளங்குகின்றது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் மகாமண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றது. தூண்களின் சதுரப்பகுதிகளில் தாமரைப் பதக்கங்கள், இறையுருவங்கள் அமைந்துள்ளன. இத்தூண்கள் முற்காலச் சோழர்களின் கலைப்படைப்பாக விளங்குகின்றது. தூண்களின் மேற்பகுதி உறுப்புகளான பலகை, பத்மம் ஆகியன எழிலார்ந்தவை. திருச்சுற்று மாளிகையில் தூண்கள் வரிசையாகக் காட்டப்பட்டுள்ளன. மாளிகையின் சுவர்ப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தாங்குதளத்தைத் தொடர்ந்து அமைந்துள்ள சுவர்ப்பகுதியில் காணப்படும் கும்பப்பஞ்சரம் நுணுக்கமான கலை வேலைப்பாடுடையவை. இக்கோயிலின் கருவறை சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். வாயிலின் இருபுறமும் துவாரபாலகராய் பாண்டி வீரனும் மீனாட்சியும் ஓவியமாய் நிற்கின்றனர். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | விக்கிரமங்கலம் சமணக் கல்வெட்டு, கருப்பண்ணசாமி கோயில் |
| செல்லும் வழி | விக்கிரமங்கலம் கோயில்பட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.30 மணி முதல் 12.30 மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 01 Jul 2017 |
| பார்வைகள் | 35 |
| பிடித்தவை | 0 |