சிற்பம்
திரிபுராந்தகர்
திரிபுராந்தகர்
சிற்பத்தின் பெயர் | திரிபுராந்தகர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
மூவெயில் எறிந்த முக்கண்ணரின் திருக்கோலமாகிய திரிபுராந்தகர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்களின் தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று கோட்டைகளை அழிப்பதற்கு சிவனார் பூண்ட திருக்கோலமே திரிபுராந்தகர். 64 சிவ வடிவங்களுள் ஒன்றான திரிபுராந்தகர் வடிவம் இறைவனின் எட்டு வீரச் செயல்களுள் ஒன்றான முப்புரமெரித்த லீலையை சொல்லும் கோலமாகும். தஞ்சை பெரிய கோயிலின் கருவறை விமானத்தில் வரிசையாக திரிபுராந்தகர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. முப்புரங்களை எரித்த சிவனாரின் பேராற்றலைப் போல சோழர்கள் மூன்று நிலங்களையும் வென்று அடக்கியவர்கள். குறிப்பாக முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் சோழப் பேரரசு சேரர், பாண்டியர், ஈழவர் உள்ளிட்ட வடபுல மன்னர்களையும் வென்றடக்கி, கடற்கடந்தும் பரந்து கிடந்த பேரரசாக அமைந்திருந்தது. சோழர்களின் இவ்வெற்றியைக் குறிக்கவே திரிபுராந்தகர் சிற்பம் பெரிய கோயிலில் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன என்பது நோக்கத்தக்கது. திரிபுராந்தகர் வலது காலை ஊன்றி, இடது காலை தளர்வாக வைத்து வைஷ்ணவ நிலையில் வில்லினை தோளில் சார்த்தி நின்றுள்ளார். ஜடாமகுடராய் விளங்கும் மூவெயில் எரித்த பிரான் நெற்றியில் கண் கொண்டு போருக்கு புறப்படுபவராய் நிற்கிறார். சிவனார் கொண்ட நான்கு கைகளில், பின் கைகளில் சூலப்படையையும், (சக்திப் படையாகவும் இருக்கலாம்), கமண்டலத்தையும் கொண்டுள்ளார். முன்னிரு கைகளில் வில்லினையும், அம்பையும் தாங்கியுள்ளார். முத்து அல்லது மணிகளாலான நெற்றிப்பட்டை, நீள் காதுகளில் வலதில் மகர குண்டலம், இடதில பத்ர குண்டலம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம், தோள்களில் வாகுமாலை, கைகளில் கேயூரம், முன்வளைகள் ஆகியன அணி செய்கின்றன. இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை உடுத்தியுள்ளார். இடைக்கட்டின் முடிச்சு முன் நீண்டு தொங்குகிறது. கால்களில் வீரக்கழல்கள் விளங்குகின்றன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
திரிபுராந்தகர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |