சிற்பம்

ஆடல்வல்லான்

ஆடல்வல்லான்
சிற்பத்தின் பெயர் ஆடல்வல்லான்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
ஆனந்தத் தாண்டவம் ஆடும் சிவபெருமானின் திருக்கோலம் நடராஜர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் ஆடலாகவும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் ஆனந்த தாண்டவம் போற்றப்படுகிறது. ஆனந்த தாண்டவம் ஆடும் சிவபெருமானின் கோலம் நடராஜர் என்று அறியப்பெறுகிறது. இந்நடனத்தினை சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடினார். தில்லையின் ஆடல்வல்லான் சோழர்களின் மனங்கவர்ந்தவர். சோழர்களின் முதன்மைத் தெய்வமாகவும் போற்றப்படுபவர். குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்,  பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும்  இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்  மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே - இப்பாடலின் வரிகளால் ஆடல்வல்லானின் இயல்பை நமக்கு படம் பிடிக்கிறார் திருநாவுக்கரசர். சிவன் கோயில்களில் இத்தகு வடிவத்தில் கூத்தரசர் திகழ்கிறார். இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது. தஞ்சை பெரிய கோயிலில் காட்டப்பட்டுள்ள ஆனந்த தாண்டவ ஆடல் வல்லானின் சிற்பத்தில் இறைவன் விரிசடையராய், நெற்றிப் பட்டை அணிந்து, நெற்றியில் கண் விளங்க, நெற்றிப்பட்டை அழகு செய்ய, காதுகளில் பத்ரகுண்டலமும், வியாழ குண்டலமும் அணி செய்ய விளங்குகிறார். பின்னிரு கைகளில உடுக்கையும், தீயகலும் கொண்ட ஆடல்வல்லார் வலது முன் கையில் அபய முத்திரை காட்டுகிறார். இடது முன் கை சிதைந்துள்ளது. அரையாடையின் இடைக்கட்டு முடிச்சு இடது புறம் ஆடலுக்கேற்றவாறு பறக்கிறது. இடது காலை கீழே குப்புற விழுந்துள்ள முயலகன் மீது ஊன்றி, வலது காலை குஞ்சித பாதமாக உயர்த்தியுள்ளார். மார்பில் முப்புரி நூல், வயிற்றில உதரபந்தம், கைகளில் மூன்று முன்வளைகள், இலைக் கருக்குடன் கூடிய தோள்வளைகள், கால்களில் அரியகம், பாதங்களில் சதங்கை ஆகியன அணி செய்கின்றன. சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்த ஆடல்வல்லான் சிற்பம் பெரிய கோயிலில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மேலே இருவர் பக்கத்திற்கொருவராக பறந்த நிலையில் வீணையை இசைக்கின்றனர். இவர்கள் முதலாம் இராஜராஜனும், இராஜேந்திரனுமாய் உவமிக்கப்பட்டிருக்கலாம். கீழே இடது புறம் காரைக்கால் அறவன் ஆடும் போது அடியில் இருந்து அம்மையார் தாளம் தட்டுகிறார். வலது புறம் நான்கு கைகளுடன் நந்தி குடமுழவினை இசைக்கிறார். ஒரு கையால் வியப்பு முத்திரை காட்டுகிறார். கீழே மூன்று கணங்கள் இசைக்கருவிகளை தலைவினை ஆடலுக்கேற்றவாறு இசைக்கின்றன.
குறிப்புதவிகள்
ஆடல்வல்லான்
சிற்பம்

ஆடல்வல்லான்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்