வரலாற்றுச் சின்னம்
பிரான்மலை குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | பிரான்மலை குடைவரை |
|---|---|
| அமைவிடம் | கொடுங்குன்றநாதர் கோயில் |
| ஊர் | பிரான்மலை |
| வட்டம் | சிங்கம்புணரி |
| மாவட்டம் | சிவகங்கை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
குடைவரையின் முன்பு தூண்கள் ஏதுமின்றி காட்சியளிக்கின்றன. இக்குடைவரை கருவறை, இடைகழி, அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றைப் பெற்று விளங்குகிறது கருவறையின் வெளியே இருபக்கங்களிலும் வாயிற்காவலர் சிலைகள் பெண் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். செவ்வக வடிவக் கருவறையின் உள்ளே உமையொடு கூடிய சிவன் காட்சி தருகின்றார். அர்த்த பிரயங்காசனத்தில் அழகுடன் இருவரும் அமர்ந்துள்ள காட்சி பாங்குடன் அமைந்துள்ளது. இருவரும் முறையே சடை மகுடமும் கரண்ட மகுடமும் அணிந்துள்ளனர். சிவன் ஒரு கையைத் தொடைமீது இருத்தி வலக்கையை மழுவை ஏந்தியவாறு காட்சி தருகின்றார். உமை அன்னையின் ஒரு கையில் தாமரை மலர் இருக்க பிறிதொருகை தொடை மீது இருத்தப்பட்டுள்ளது. திருமலைக் குடைவரையில் உள்ள உமையுடன் கூடிய சிவனது புடைப்புச் சிற்பத்தை ஒத்த நிலையில் பிரான்மலை சிற்பமும் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில் உள்ள பெண் வாயிற்காவலர்கள் இருவர் கோட்டத்தில் காட்சியளித்தவாறு நின்ற நிலையில் மலர்களைக் கைகளில் ஏந்திய நிலையிலும் காட்சி தருகின்றனர். சிற்பங்களின் மீது சுதைப் பூச்சுகள் காணப்படுகின்றன. கருவறைக்கு வெளியே உள்ள தெய்வ சபையில் தேவர்களின் சுதை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை வழிபாட்டில் உள்ளது. இங்கு பாரி வள்ளலின் செப்புத் திருமேனியும் காணப்படுகிறது. இக்குடைவரையும் பாண்டியர்களின் 8-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சார்ந்ததாக கருதலாம்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | அரளிப்பாறை முருகன் கோயில், அரளிப்பட்டி குடைவரை |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
சிங்கம்புணரியிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் பிரான்மலை அமைந்துள்ளது. முல்லைக்குத் தேர் கொடுத்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி வள்ளல் ஆண்ட பகுதியான பறம்பு நாடே இன்று பிரான் மலை எனப்படுகிறது. தேவாரப் பாக்களில் இவ்வூர், திருக்கொடுங்குன்றம் எனக் குறிக்கப்படுகிறது. இவ்வூரின் மலைமீதுள்ள கோயில் ஞானசம்பந்தரால் பாடப்பெற்றது. இறைவன் கொடுங்குன்றீசுவரர் என்றும் இறைவி அமிர்தநாயகி என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பல அரிய செய்திகளைக் கொண்டுள்ளன. வணிகர்களைக் குறிக்கும் கல்வெட்டொன்று, பிரான் மலை பெருவழி ஒன்றில் அமைந்திருந்ததைக் குறிப்பிடுகிறது. பல வணிகக் குழுக்களையும் வாணிகப் பொருள் களையும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட வரிகளைப் பற்றியும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பிரான்மலையின் அடிவாரப்பகுதியில் கிழக்கு நோக்கிய நிலையில் சிறிய குடைவரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாண்டியர் காலத்தின் மிகவும் சிறிய குடைவரைகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 154 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |