சிற்பம்
வாயிற்காவலர்கள்
சிற்பத்தின் பெயர் வாயிற்காவலர்கள்
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில்
ஊர் திருக்கோழம்பம்
வட்டம் திருவிடைமருதூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் திருக்கோழம்பம் கோகிலேசுவரர் கோயில் கருவறை நுழைவாயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன்மாதேவியார்
விளக்கம்
திருக்கோழம்பநாதர் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் இச்சிற்பங்களில் காட்டப்பட்டுள்ள வாயிற்காவலர்கள் உள்ளனர். இறைவனின் இடதுபுற வாயிற்காவலர் இடது காலை அர்த்தபதாகத்தில் ஊன்றி, வலது காலை சுவஸ்திகத்தில் பூதகணம் ஒன்றின் தலையின் மீது ஊன்றியுள்ளார். வலது கை தண்டத்தில் இருத்தி, இடது கையில் நாகம் ஒன்றினைப் பிடித்தபடி உள்ளார். தோள்களின் இருபுறமும் சடைக்கற்றை குழல்கள் பரந்துள்ளன. சடைபாரம் தாங்கிய இவருக்கு முகம் சற்று சிதைந்துள்ளது. கடைவாயின் இருபுறமும் வெளி நீட்டியுள்ள கோரைப் பற்களுடன் உருட்டி விழியராய் காட்சியளிக்கிறார். வலதுபுறம் நிற்பவர் முதலாமவரின் நிற்கும் கோலத்தை எதிர் மாற்றியுள்ளார். இடது கையை ஊன்றியுள்ள தண்டத்தில் சுற்றியுள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். வலது கை எச்சரிக்கை முத்திரை காட்டுகிறது. நாகத்தினை குண்டலமாக அணிந்துள்ளார் போலும். மார்பில் பஞ்சவடி காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் சரப்பளி, கைகளில் கங்கணம், கேயூரம் காட்சியளிக்கின்றன. முதலாமவரை விட சற்று அமைதி தவழும் முகம். நெற்றிப்பட்டை விளங்க, முகப்புடன் கூடிய புரிசடை மகுடம், அரையாடை, கால்களில் சதங்கை அணிந்தவராய் நிற்கிறார்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருக்கோழம்பம் என்னும் தலத்தில் அமைந்துள்ள இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் தென்கரைத்தலங்களில் 35-ஆவது திருத்தலமாகும். அப்பரும், திருஞானசம்பந்தரும் இத்தலத்தைப் பாடிப் பரவியுள்ளனர். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த திருக்கோழம்பநாதர் கோயில் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட கலைக்கோயிலாகும். இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. சோழர் கால கருவறை வாயிற்காவலர்களின் உருவங்கள் ஒன்றிலிருந்து மற்றொரு வேறுபட்ட வடிவமாய் காட்சியளிப்பது சிறப்பு, ஆடையணிகள், பாவனை, முத்திரை, கோலம், நிலை ஆகிய படிம அமைப்பு நிலையானது இடதுபுற வாயிற் காவலருக்கும், வலதுபுற வாயிற்காவலருக்கும் தனித்தன்மையாகவே அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
குறிப்புதவிகள்
வாயிற்காவலர்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்