
ஆண்டிப்பட்டி
அகழாய்விடத்தின் பெயர் | ஆண்டிப்பட்டி |
---|---|
ஊர் | ஆண்டிப்பட்டி |
வட்டம் | செங்கம் |
மாவட்டம் | திருவண்ணாமலை |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 2004-2005 |
அகழாய்வு தொல்பொருட்கள் | சுடுமண் உருவங்கள், தாய்த் தெய்வ உருவங்கள், மனித உருவத்தின் கை, கால் உடற்பகுதிகள், சுடுமண்ணாலான விலங்கு மற்றும் பறவைகள் - யானைகள், பசு மாடு, கிளி, காளைமாடு, தக்களிகள், சுடுமண் காதணிகள், சதுரங்கக் காய்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் புகைப்பான், கூரை ஓடுகள், கெண்டிகள், மூடிகள், தாங்கிகள், வடிதட்டு, காசு வார்ப்படத் தட்டு, வளையல்கள், சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு நிறப் பானையோடுகள், ரௌலட்டட் மற்றும் அரிட்டைன் வகை பானையோடுகள், மணிகள், தங்கப் பொருட்கள், புதிய கற்கால ஆயுதங்கள், மான் கொம்புகள், மண்டையோடு மற்றும் எலும்புகள், இரும்புப் பொருட்கள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி, டிசம்பர் 2004 முதல் ஏப்ரல் 2005 வரை நடத்தப்பட்டது. செங்கம் அருகே அமைந்துள்ள ஆண்டிப்பட்டி வழியாகச் செல்லும் செங்கம் கணவாய் சங்ககாலத் தமிழகத்தின் மேற்குப் பகுதியினை கிழக்குப் பகுதியுடன் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் 1968-ஆம் ஆண்டு ஒரு புதையலில் 143 ஈயக்காசுகள் கிடைத்தன. ஆண்டிப்பட்டி ஒரு கிராமம் ஆகும். இக்கிராமத்தில் கல்லோடை என அழைக்கப்படும் பகுதியிலும், இந்திரா நகர் குடியிருப்பு என்ற பகுதியிலும் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன. நத்தமேடு-சாம்பல்காடு என்ற பகுதிகளில் சங்ககாலப் பானை ஓடுகள் கிடைக்கின்றன. ஆண்டிப்பட்டியிலிருந்து மண்ணாண்டிப்பட்டி செல்லும் வழியில் தனிநபர் சிலரின் நிலத்தில் அகழாய்வுக் குழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. ஆண்டிப்பட்டி அகழாய்வில் மொத்தம் 12 அகழாய்வுக் குழிகள் அனைத்தும் கன்னி மண் வரை அகழப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகழாய்வில் இரண்டு பாள நிலைகள் கிடைத்தன. முதலாம் கால கட்டம் கி.பி.100 முதல் கி.பி.600 வரை எனக் கொள்ளலாம். இரண்டாம் கால கட்டம் கி.பி.600 முதல் கி.பி.120 வரை ஆகும். இங்கு 16 பானைக் குறியீடுகள் கிடைத்துள்ளன. “அத்த“, “கு மா“ , “...ங்கன் நதில“ போன்ற தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் கிடைத்துள்ளன. ஆண்டிப்பட்டி அகழாய்வில் மொத்தம் 194 சுடுமண் தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சிறப்பான தாய்த் தெய்வ உருவங்கள் மூன்று குறிப்பிடத்தக்கவைகளாகும். மேலும் சுடுமண்ணாலான சுடுமண்ணாலான விலங்கு மற்றும் பறவைகள் - யானைகள், பசு மாடு, கிளி, காளைமாடு, தக்களிகள், சுடுமண் காதணிகள், சதுரங்கக் காய்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் புகைப்பான், கூரை ஓடுகள், கெண்டிகள், மூடிகள், தாங்கிகள், வடிதட்டு, காசு வார்ப்படத் தட்டு, வளையல்கள் ஆகியவையும், சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு நிறப் பானையோடுகள், ரௌலட்டட் மற்றும் அரிட்டைன் வகை பானையோடுகள், மணிகள், தங்கப் பொருட்கள், புதிய கற்கால ஆயுதங்கள், மான் கொம்புகள், மண்டையோடு மற்றும் எலும்புகள், இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இவ்வகழாய்வில் கிடைத்த 126 இரும்பாலான தொல்பொருட்களில் இரும்புக் கழிவுகள், உலைக்களம், உளி ஆகியன குறிப்பிடத்தக்கன. ஆண்டிப்பட்டியில் புதிய கற்கால கற்கருவிகள் இரண்டு உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. மேலும் இங்கு கிடைத்துள்ள மான்கொம்புகள், ஆண்டிப்பட்டியைச் சுற்றிலும் அரணாக அமைந்துள்ள காடுகளில் மான்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் காட்டுகிறது. இங்கு மொத்தம் 190 மணிகள் கிடைத்துள்ளன. கார்னீலியன், பெரில், பளிங்கு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஆண்டிப்பட்டி அகழாய்வில் மொத்தம் 655 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை அடிப்படைச் சான்றுகளாகக் கொண்டு இப்பகுதியில் பெருங்கற்காலம் முதல் கி.பி.12-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகின்றது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பண்டையத் தமிழக வரலாற்றை, குறிப்பாக சங்க கால வரலாற்றை அறியும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அகழாய்வு நடத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி அகழாய்வின் மூலம் இப்பகுதியில் பெருங்கற்காலம் முதல் கி.பி.12-ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. இங்கு கிடைத்துள்ள தொல்பொருட்களில் குறிப்பிடத்தக்கவைகள் இரும்புப் பொருட்கள் மற்றும் சுடுமண் பொருட்கள் ஆகும். பல தொழிற் கூடங்கள் இப்பகுதியில் இருந்தமைக்கு இரும்புக் கழிவுகள் கிடைப்பதைக் கூறலாம். ஆண்டிப்பட்டியில் மணிகளை உருவாக்கும் தொழில் வினைஞர்களும் இருந்திருக்கின்றனர். ஆண்டிப்பட்டிக்கு வெகு அருகாமையில் தற்போதுள்ள மணிக்கல் என்ற ஊர் அக்காலத்தில் இம்மணிகளை விற்பனை செய்த வணிகர்கள் வாழ்ந்த ஊரே எனக்கருதலாம். மக்கள் வாழ்ந்த வீடுகளின் கட்டிடப் பகுதிகளோ, தூண்கள் நிறுத்தியமைக்கான தோண்டு குழிகளோ கிடைக்கவில்லை. ஆனால் கூரை ஓடுகள் கிடைத்துள்ளன. எலும்புகளும், மான் கொம்புகளும் கிடைத்துள்ளதால் அவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்தமைக்கான அறிகுறியாக அவற்றைக் கொள்ளலாம். ஆண்டிப்பட்டி ஒரு சிறந்த தொழிற் நகரமாக சங்க காலத்தில் விளங்கியிருக்கிறது என்பதனை அகழாய்வு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Nov 2017 |
பார்வைகள் | 25 |
பிடித்தவை | 0 |