அகழாய்வு
செஞ்சி
செஞ்சி
அகழாய்விடத்தின் பெயர் | செஞ்சி |
---|---|
ஊர் | செஞ்சி |
வட்டம் | செஞ்சி |
மாவட்டம் | விழுப்புரம் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1973-74 |
அகழாய்வு தொல்பொருட்கள் | கட்டிடப்பகுதிகள், அரசுப் பணியாளர் குடியிருப்புகள், கிணறு, கொலு மண்டபம் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
விளக்கம்
செஞ்சிக்கோட்டை மற்றும் அதனுள் அமைந்துள்ள அணைத்து தொன்மையானக் கோயில்கள், மசூதி முதலியவற்றை இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை பாதுகாத்துவருகிறது. அவ்வப்போது அத்துறையினரால் மேற்கொள்ளப்படும் செப்பனிடும் பணிகள் (Conservation works) அகழ்வாய்வுகளுக்கும் அடிப்படையாக அமைகிறது. 1973-74-ம் ஆண்டில் இங்குள்ள அரண்மனைப்பகுதி என்று சொல்லப்படும் மண்மேட்டில் இத்துறையின் தெற்குவட்டம் K.V. சௌந்திரராஜன் தலைமையில் அகழாய்வு மேற்கொண்டு 12.5 மீ. X 10 மீ. அளவுள்ள ஒரு பெருவறையின் எச்சங்களைக் கண்டுபிடித்தது. வரிசையாகத் தூண்களைக் கொண்ட இப்பெருவறை 2.4 மீ. அளவில் மூன்று விரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. 5.8 மீ. பக்கங்களை உடைய சதுர வடிவ அறை ஒன்றும் கட்டடத்தின் மையத்தில் காணப்பட்டது. சுற்றிலும் தாழ்வாரத்துடன் காணப்பட்ட அவ்வறை மன்னரின் கொலுவறையாக இருக்கக்கூடும் என்று கருதப்பட்டது. 1991-92-ஆம் ஆண்டில் அதே அரண்மனைப் பகுதியில் செப்பனிடும் பணியினை K.T. நரசிம்மன் தலைமையில் மேற்கொண்டபோது கொலுவறையின் மையத்தில் சிம்மாசனம் வைப்பதற்கு கருங்கற்களால் கட்டப்பட்ட அழகான மேடை வெளிப்பட்டது. 8 மீ. பக்கங்களைக் கொண்ட சதுர வடிவிலான இம்மேடை கோயிலின் அதிட்டானத்தைப் போன்றே உபானம், பத்மம், முப்பட்டை குமுதம் போன்ற சிற்பக் கூறுகளைக் கொண்டு விளங்குகிறது. இம்மேடையின் கருங்கல் வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1993-94 ஆண்டில் கல்யாண மண்டபத்தின் முன்புள்ள மண்மேடு அத்துறையின் சென்னை வட்டத்தினர் B. நரசிம்மய்யா தலைமையில் அகழாய்வு மேற்கொண்டனர். 70 மீ. நீளமும், 60 மீ. அகலமும் கொண்ட இம்மண்மேடு யானைக்குளம் வரை பரவியிருந்தது. இம்மண்மேட்டை அகழாய்வு செய்ததில் இருகால கட்டத்தைச் சேர்ந்த கட்டடப்பகுதிகள் வெளிப்பட்டன. முதலாவது கால கட்டத்தைச் சேர்ந்த பொ.ஆ.16,17-ஆம் நூற்றாண்டு) 12.85 மீ., 4.75 மீ. அளவுடைய பெருவறைக் காணப்பட்டது. நீண்ட வரிசையில் மூன்று தூண்களை உடைய இவ்வறையைச் சுற்றி 1மீ. பருமனுடைய சுற்றுச்சுவர் பகுதி 28 மீ. நீளத்தில் கிழக்கு மேற்காக நீண்டிருந்தது. இவ்வறைக்கு மேற்கே 3.95 மீ. நீளம், 3.75 மீ. அகலம் மற்றும் 5 மீ. ஆழமுடைய கிணறு படிக்கட்டுக்களுடன் காணப்பட்டது. இப்பெருவறைக்கும், சுற்றுச்சுவருக்கும் இடையில் உள்ள தோண்டு குழியில் பெரிய கொள்கலன் (Storage Jar) கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வறையும் சுவர் பகுதியும் துண்டு கற்களால் கட்டப்பட்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்காலக் கட்டத்தில் மூன்று கட்டடங்களை உடைய கட்டட வளாகம் 49 மீ. நீளம், சுற்றுச்சுவரின் வடக்குப் பகுதியில் வெளிப்பட்டது. முதற்கட்டடப்பகுதி (STR-1) 10 X 10 மீ. அளவுடையது. நான்கு அறைகளைக் கொண்ட இக்கட்டடத்தின் தரைப்பகுதி சுண்ணாம்பு காரையால் பாவப்பட்டிருக்கிறது. இக்கட்டட வளாகத்தின் தெற்குப்பகுதியில் 10 X 7 மீ. அளவுடைய சுண்ணாம்பு தரை காணப்பட்டது. இதற்கு மேற்கில் மூன்று அறைகள் முறையே 8 x 2.80 மீ. 62.45 மீ. 2.90 x 4.25 மீ. அளவுகளில் காணப்பட்டன. இவ்வறைகளின் தென்மேற்கில் 2.85x 2.55 மீ. அளவுள்ள நீர்த்தொட்டி கண்டறியப்பட்டது. 40 செ.மீ. ஆழமுடைய இத்தொட்டியின் உட்புறம் சுண்ணாம்பு பூச்சு காணப்பட்டது. இத்தொட்டியிலிருந்து நீரை யானைக் குளத்தில் வெளியேற்ற கால்வாயும் இங்கு கட்டப்பட்டுள்ளது. இத்தரைப்பகுதியைச் சுற்றிலும் வடிகால்வாய் வசதி உள்ளது. மூன்றாவது கட்டடம் கட்டட வளாகத்தின் மேற்கில் தனித்துக் காணப்பட்டது. பல அறைகள் மற்றும் தாழ்வாரம் கொண்டதாக விளங்கும் இக்கட்டடத்தின் முழு அமைப்பினை அறிய அகழாய்வு தொடர வேண்டியுள்ளது. அரசரின் பணியாட்களுக்கு (Royal Servants) கட்டப்பட்ட குடியிருப்புகளாக விளங்கும் இக்கட்டடங்கள் யாவும் துண்டுக்கற்கள் மற்றும் கட்டடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மண் பூச்சு கொண்ட இக்கட்டடங்கள் ஒரு குறுகிய காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இவ்வகழாய்வில் செம்பினாலான முத்திரையும், நவாபு காசுகளும், உடைந்த இரும்பு குறுவாள், கதவு வளையங்கள், ஆணிகள் போன்ற பொருட்களும் கிடைத்தன.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாகத்தி ருவண்ணாமலை செல்லும் சாலையில் 150 கி.மீ. தொலைவில் இந்நகரம்அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட செஞ்சியின் கிழக்கே சங்கராபரணி ஆறு உள்ளது. சிங்கபுரம் என்றழைக்கப்பட்ட செஞ்சி தொன்மைச் சிறப்புகள் பல உடையது. பெருங்கற்காலப் பண்பாட்டின் சின்னங்கள் இங்கு உள்ளன. செஞ்சியைச் சுற்றி தொண்டூர், பெரும்பொகை, நெகனூர்பட்டி போன்ற மலைகளில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. செஞ்சிக்கு அருகிலுள்ள திருநாதர்குன்று என்ற இடத்தில் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சமணமுனிவரான சந்திரநந்தியைக் குறிப்பிடும் தமிழ்பிராமி கல்வெட்டு உள்ளது. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செஞ்சியர்கோன் என்னும் சிற்றரசனால் இவ்வூரில் உள்ள இராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி ஆகிய மூன்று மலைகளை இணைத்து மலைக்கோட்டை கட்டும் பணி தொடங்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப்பின் செஞ்சி நாயக்கர் ஆட்சி செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. செஞ்சி நாயக்கர்கள் காலத்தில் செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 5 கி.மீ. சுற்றளவில் பெருங்கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டை தமிழகத்திலேயே சிறந்து விளங்கும் மலைக்கோட்டையாகும். அமைவிடம், அமைப்பு போன்ற காரணங்களினால் முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டை படையெடுப்புகள் பலவற்றிற்கு ஆளானது. கி.பி. 1677ல் இக்கோட்டை மராத்திய மன்னர் சத்திரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. இவர் காலத்தில் கோட்டை, அரண் போன்றவை வலிமைப்படுத்தப்பட்டது. கி.பி. 1698-இல் முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பின் தளபதி ஜூல்பிர்கான் என்பவரால் இக்கோட்டை கைப்பற்றப்பட்ட பின் ஆற்காடு நவாபு ஆட்சி இங்கு தொடங்கப்பட்டது. அப்பொழுது நவாபுகளின் கீழ் ஆட்சி புரிந்த தேஜ்சிங் எனப்படும், தேசிங்குராஜன் இளவயதிலும் தனது வீரமிக்க போரினால் நவாபின் படைகளை விரட்டியடித்தான். எனினும் போரிலே அவன் கொல்லப்பட்டான். ஆங்கிலேயர் இக்கோட்டையைக் கைப்பற்றும் வரை இது நவாபு ஆதிக்கத்திலிருந்தது. இக்கோட்டையில் ஏழுநிலை மாட கல்யாண மண்டபம், வெங்கட்ரமணர்கோயில், தர்பார் அரங்கு, களஞ்சியங்கள், உடற்பயிற்சிக்கூடம், யானைக்குளம், அரசகுடும்பத்தினர் குடியிருப்புகள், சதாத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி ஆகியன உள்ளன. இங்கு அடிக்கடி ஏற்பட்ட படையெடுப்புகளினால் கோட்டையில் உள்ள கட்டடங்கள் போன்றவை அழிக்கப்பட்டு மண்மேடுகளாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக இராஜகிரியில் உள்ள கல்யாண மண்டபத்தைச் சுற்றிலும் இத்தகைய மண்மேடு பரந்த அளவில் காணப்படுகின்றது. இந்த மண்மேடு இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையால் அகழாய்வு செய்யப்பட்டு வரலாற்றுச் சான்றுகள் வெளிக்கொணரப்பட்டன.
|
|
குறிப்புதவிகள்
தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
|
அகழாய்வு
செஞ்சி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 36 |
பிடித்தவை | 0 |