Back
அகழாய்வு
இரணியன் குடியிருப்பு
அகழாய்விடத்தின் பெயர் இரணியன் குடியிருப்பு
ஊர் இராஜாக்கள் மங்கலம்
வட்டம் நாங்குநேரி
மாவட்டம் திருநெல்வேலி
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 2009-2010
அகழாய்வு தொல்பொருட்கள் தேவி, திசைக்காவலர், அக்னி, விஷ்ணு, திருமகள், பூதேவி, நரசிம்மர், அணங்குகள், புதன், செவ்வாய், யாளி, முருகன், வராகி, இந்திரன், கௌமாரி, வைஷ்ணவி முதலிய முற்காலப் பாண்டியர் கற்சிற்பங்கள், கோயிலின் அடித்தளம்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
விளக்கம்
இராஜாக்கள்மங்கலம் என்னும் கிராமம் திருநெல்வேலி - நாகர்கோயில் பிரதான சாலையில் அமைந்துள்ள தளபதி சமுத்திரம் என்னும் ஊரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரிலுள்ள இரணியன் குடியிருப்பு என்ற பகுதி தொல்லியல் சிறப்புடையதாகும். இங்கு முற்கால பாண்டியர் காலத்தைச் சார்ந்த பல சிலைகள் காணப்படுகின்றன. இவை உருவில் பெரியவை. அழகில் சிறந்தவை. இவற்றுள் சில மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இராஜாக்கள்மங்கலம் அகழாய்வு செய்யும் இடத்திலுள்ள முட்புதரைச் சுத்தம் செய்தபோது அங்கு உதிரிச் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தன. இச்சிற்பங்கள் சுத்தம் செய்யப்பட்டு எண்ணிடப்பட்டன. இங்குள்ள சிற்பங்களில் உடைந்த நிலையிலுள்ளவை, முற்றுப்பெறாதவை என்று பலவகைப்பட்டன காணப்படுகின்றன. அகழாய்வு செய்யும் இடத்தில் மொத்தம் 23 சிற்பங்களும், ஆற்றில் 2 சிற்பங்களும் ஆக மொத்தம் 25 சிற்பங்கள் இங்குள்ளன. அகழாய்வுக்குழிகள் EKP என்றும் குறிக்கப்படுகின்றன. முதல் குழி சாலையிலிருந்து 15 மீ தூரத்தில் வடக்கு தெற்காக 5 x 4 மீட்டர் இடைவெளியில் 4 x - 4 மீட்டர் அளவில், அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. மேல் பகுதி மண் அகற்றப்பட்வுடன் 50 செ.மீ. ஆழத்தில் சிவப்பு மண், செங்கல் துண்டுகள் வெளிப்படுத்தப்பட்டன. இவை கட்டட இடிபாடுகளின் குவியலாக இருக்கக்கூடும். உருண்டை, நீண்ட உருண்டை வடிவக்கற்கள் பெரிய அளவில் பரப்பப்பட்டுள்ளன. பாவபப்பட்ட அடித்தளம் காணப்படுகிறது. பெரும்பாலான வரலாற்றுக் காலகட்டங்களின் அடித்தளம் மணல் (ம) கல் உருண்டைகள் அல்லது செம்பராங்கற்களைக் கொண்டு அமைப்பது வழக்கம் இதைப்போன்றே இங்கும் அடித்தளப்பகுதி அமைந்துள்ளது. கட்டடப்பகுதி மண்கலந்த கருங்கற்கள் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டுள்ளன. முதலில் செங்கல் கட்டடப்பகுதி, அதன்கீழ் ஆற்று மணல், அதன் கீழ் உருண்டைய கருங்கற்கள் (Stone boulders) என்ற அமைப்பில் உள்ளன. கருங்கல் பலகை பகுதி 23 செ.மீ. ஆழத்தில் காணப்படுகிறது. இக்கல்லைத் தொடர்ந்து கருங்கல் உருண்டைகளும் மணலும் கலந்து அடித்தளமாகக் காணப்படுகின்றன. இக்கருங்கல்லின் மேல் பகுதியில் + போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. மூன்று குறியீடுகள் ஒன்றையடுத்து ஒன்றுள்ளன, இது ஒரு அளவுகோலினைக் குறிக்கலாம். சுதையால் ஆன தாமரை மலரின் மொட்டு ஒன்றும், யாளியின் முகப்பகுதி ஒன்றும் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுதையால் ஆன உருவங்களின் துண்டுகள் கிடைக்கின்றன. இவ்வகழாய்வில் கிடைத்த முழுமையான செங்கற்களின் அளவுகள்; முதல் வகை 40 x 20 x 10 செ.மீ. இரண்டாம் வகை 30 x 15 x 8 செ.மீ. கருங்கல் அதிட்டானம் மேற்கிலிருந்து வடக்கு திசையில் செவ்வகமான அமைப்புடன் காணப்படுகிறது. ஆனால் கிழக்குப் பகுதியில் அதன் தொடர்ச்சி கிடைக்கவில்லை. சதுர அமைப்புடைய கருங்கல் அடித்தளம் கிழக்குப்பகுதியில் இரண்டு பகுதிகளிலும் வாயில் போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இருபுறமும் 12.64 மீட்டர் நீளத்தில் வளைந்து பின்னர் கிழக்கு நோக்கிச் செல்கின்றன. அடித்தளப்பகுதி கிழக்கில் 10 மீ. நீளம், வடக்கில் 6 மீ. நீளமும் காணப்படுகிறது. இவ்வடித்தளக்கற்கள் நீண்டு அகலமாக உள்ளன. அத்தளத்தின் அருகில் செங்கல் பாவப்பட்டுள்ளது. இது அடித்தள அமைப்பிற்கு உதவியாக அமைந்துள்ளது. இச்செங்கல் வரிசை 40 செ.மீ. ஆழத்திற்கு தொடர்ந்து காணப்படுகிறது. அடித்தளம் எல் 'L' வடிவில் உள்ளது. இது கோயிலின் அடித்தளத்தில் காணப்படும் பட்டியைப் போன்று தொடர்ந்து காணப்படுகிறது. இவ்வடித்தளத்தின் கீழ்ப்பகுதியில் 20 செ.மீ. ஆழத்தில் செங்கல் வரிகள் இரண்டு பாவப்பட்டுள்ளன. இது கருங்கல்லில் இருந்தபோது அதற்குத் துணையாக அல்லது தாங்கு சுவரைப் போன்று செங்கற்கள் பாவப்பட்ட தளம் ஒன்று கருங்கல் அடித்தளத்தின் அருகில் காணப்படுகிறது. இது சதுரம் (ம) செவ்வக செங்கற்களைக் கொண்டு பாவப்பட்டுள்ளது, இப்பகுதி அடித்தளத்தைத் தொடர்ந்து செல்கின்றது. அடித்தளத்தின் மேல் பகுதியில் செங்கல் கட்டடத்தின் அமைப்பு இருந்ததற்கான சுண்ணாம்புப் படிவம் காணப்படுகிறது. பொதுவாக கோயில் கட்டுமானத்தில் கருவறையைத் தொடர்ந்து கட்டத்தில் பிதுக்கமும் (Projection) அதனைத் தொடர்ந்து உட்புறம் எடுத்துக்கட்டுதல் போன்ற அமைப்புடன் கட்டப்படுவது போன்று இங்கும் காணப்படுகிறது. சுண்ணாம்புச் சாந்து கல்லின் மேல் பகுதியில் பாவப்பட்டுள்ளது. கருங்கல்லால் ஆன சுவர் 60 செ.மீ. ஆழத்தில் கிடைத்துள்ளது. அடித்தளம் தொடர்ந்து தெற்குப்பகுதியிலிருந்து வடக்குப்பகுதி நோக்கிச் சென்று பின்னர் 1.48 மீட்டர் நீளத்தில் மீண்டும் கிழக்கில் திரும்பிச் செல்கிறது. இது கட்டடத்தின் நுழைவு வாயில் போன்ற அமைப்பாக இருத்தல் கூடும். கல் பிரபை ஒன்று கிடைத்துள்ளது. இதில் நெருப்பு ஜுவாலைகள் காட்டப்பட்டுள்ளன. தலைப்பகுதி மட்டும் உள்ளது. ஆனால் உருவம் சரியாகத் தெரியவில்லை. வடக்குப்பகுதியில் உள்ள அடித்தளம் தெற்கு நோக்கிச் செல்கிறது. இது கல்பீடத்தின் உட்பகுதியில் மணல் மற்றும் கரடுமுரடான கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அடித்தளமாகும். இங்கு கிடைத்துள்ள 6 அடி உயரமுடைய அம்மன் சிலை ஸ்ரீதேவியாக இருக்கக்கூடும். சிலைகள் பலவற்றுள் அவற்றின் பெயர்கள் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சிலைகள் உள்ள இவ்விடத்தில் இரணிய மகாராஜாவின் அரண்மனை இருந்ததாகக் கூறுகின்றனர். இராசாக்கள்மங்கலம் ஊர் நம்பி ஆற்றின் வடகரையிலும் அகழாய்வு செய்யும் இடத்திலிருந்து 3 மீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊரின் வடக்குப்பகுதியில் ஒரு மண்மேடு காணப்படுகின்றது. இதன்கிழக்குப் பகுதியில் சிவன் கோயில் ஒன்று காணப்படுகின்றது. இக்கோயிலின் அருகில் வரலாற்றுச் சிறப்புமிக்கக் காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. கோயில் விதானம் வரை கருங்கல்லில் கட்டப்பட்டுள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பழமை மாறாது உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், போன்ற அமைப்பும், உபபீடம், அதிட்டானம், கால், போதிகை போன்ற அமைப்புகளும் காணப்படுகின்றன. இதன் அமைப்பினைக் கொண்டு பார்க்கும்போது பிற்காலப்பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இக்கோயிலின் மேற்குத்திசையில் விஷ்ணு கோயில் ஒன்றும் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இதுவும் கல்லால் கட்டப்பட்டது. இவ்வூரின் அருகில் உள்ள தளபதி சமுத்திரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டில் “நாட்டாற்றுப்போக்கில் இராசாக்கள் மங்கலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகின்றது. இக்கல்லில் மேல் பகுதியில் சக்கரமும். அதன் கீழ்ப்பகுதியில் சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன. மண்மேட்டில் வரலாற்றுக்கால மட்கலன்களும், சந்தனக்கல் போன்றவை காணப்படுகின்றது.
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், இரணியன் குடியிருப்புப் பகுதி என்று அழைக்கப்படும் இராஜாக்கள்மங்கலம் என்னுமிடத்தில் 2009-10-இல் அகழாய்வு மேற்கொண்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் மார்க்கத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் நான்குநேரி மற்றும் ஆனைக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரணியன் குடியிருப்பு மற்றும் மயிலாபுதூர் என்ற ஊர் உள்ளது. இரணியன் குடியிருப்பின் கிழக்குப்பக்கம் துலுக்கர்பட்டி என்ற ஊரும், மேற்கே இராஜாக்கள்மங்கலம் என்ற இடமும், வடக்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் பிறக்கும் பச்சை மலை ஆற்றின் கிளையாறு ஆன நம்பியாறும் எல்லைகளாக உள்ளன. தெற்கே மைலாபுதூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இராஜாக்கள்மங்கலம் (இரணியன் குடியிருப்பு) நடத்தப்பட்ட அகழாய்வில் கோயில் ஒன்றின் அடித்தளப்பகுதி கிடைத்துள்ளது. ஆனால் இங்கு அதிக அளவில் முற்றுப்பெற்ற மற்றும் முற்றுப்பெறாத கற்சிற்பங்கள் கிடைத்துள்ளன. மேலும் சிலவற்றில் கிரந்த எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும்போது இங்கு முற்காலப் பாண்டியர் காலத்தில் (கி. பி. 8-ஆம் நூற்றாண்டில்) மிகப்பெரிய அளவிலான கோயிலோ அல்லது கோயிலில் வழிபாட்டிற்கான சிற்பக் கூடமோ இருந்திருக்கக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது. கழுகுமலை வெட்டுவான் கோயிலும் இதே காலக்கட்டத்தைச் சார்ந்ததாகும். முற்காலப் பாண்டியர் சிற்பக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இவை உள்ளன.
இரணியன் குடியிருப்பு
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 22
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு