அகழாய்வு
குடியம்
அகழாய்விடத்தின் பெயர் குடியம்
ஊர் கூனிப்பாளையம்
வட்டம் பொன்னேரி
மாவட்டம் திருவள்ளூர்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1962-63, 1963-64
அகழாய்வு தொல்பொருட்கள் கற்கருவிகள், கைக்கோடரிகள், வெட்டும் கருவிகள், சுரண்டிகள், கிழிப்பான்கள், கோடரி, வெட்டுக்கத்தி
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் இந்தியத் தொல்லியல் துறை
விளக்கம்
குடியம் பகுதியில் பழங்கற்காலக் கருவிகள் பெருமளவில் கிடைத்துள்ளமையால் இங்கு நிலவிய பழங்கற்கால நாகரீகத்தின் தன்மையை அறிய இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின், வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுப்பிரிவினர் K.D. பானர்ஜி என்பவரின் தலைமையில் 1962-63 மற்றும் 1963-64-ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை மேற்கொண்டனர். இப்பகுதி, பழங்கற்கால மனிதன் வாழ்வதற்கு ஏற்ற மிகச்சிறப்பான சூழ்நிலைகளைக் கொண்டு விளங்கியது. ஆறு, மலை, காடு ஆகியன இணைந்து காணப்பட்டமையால் கற்கால மனிதன் இங்குள்ள குகைகளில் தங்கி வேட்டையாடித் தன் வாழ்நாளைக் கழித்துள்ளான் என்ற கருதுகோளின் அடிப்படையில் குகையிலும் அதனைச் சுற்றிய பகுதியிலும் மொத்தம் 3 குழிகள் தோண்டப்பட்டன. அகழாய்வுக்குழி – 1: குகையில் நடந்த அகழாய்வில் பழங்கற்காலத்தைச் சார்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோடரி, வெட்டுக்கத்தி (choppers) போன்றவை இவற்றுள் அடங்கும். பல அளவுகளை உடைய கைக்கோடரிகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை யாவும் பிந்திய அச்சூலியன் (Post - Acheulian) தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனவும் இவையே பின்பு நுண்ணிய கற்கருவிகளின் தொழிற்கூடத்திற்கு வழிவகுத்தன எனவும் K.D. பானர்ஜி கருத்து தெரிவித்தார். அகழாய்வுக்குழி – 2: இரண்டாவது அகழாய்வுக் குழி குடியம் ஊருக்கு அருகே போடப்பட்டது. இக்குழியில் இரண்டு மண்ணடுக்குகள் காணப்பட்டன. மேலடுக்கில் கூழாங்கற்கள் (Pebbles) பெரிதும் சிறிதுமாக காணப்பட்டன. இருபக்க முனைக்கருவிகள் (Blades) செதுக்குக் கருவிகள் (Scrapper), கோடரி போன்ற கற்கருவிகளும் இக்குழியில் கிடைத்தன. இவை சரளைக்கற்களோடு கலந்து இருந்ததால் மஞ்சள் பூச்சோடு காணப்பட்டன. மூன்றாவது அகழாய்வுக் குழி: கிருஷ்ணாபுரம் என்னும் ஊருக்கு அருகில் போடப்பட்ட இக்குழியில் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கூர்முனைக்கருவிகள் (points) செதுக்குக் கருவிகள், சீவல்கள் (Flakes) தட்டுவடிவக்கருவிகள் (discoids) வெட்டுக்கத்தி, கைக்கோடரிகள் போன்றவை கிடைத்தன. இவை யாவும் பளிங்குக்கல் வகையிலிருந்து மிக நுட்பமான முறையில் திறம்பட்ட கருவிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பிந்திய அச்சூலியன் வகைக்கருவிகள் இக்குழியின் மேல், கீழ்மட்டங்களில் கிடைத்தன.
குறிச்சொல்
சுருக்கம்
இந்தியாவின் மிகச் சிறப்பான பழங்கற்கால வாழ்விடமாகும். இது ஒரு குகையுடன் கூடிய இடமாகும். இந்தக் குகையில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கானத் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. இது போன்ற பழங்கற்காலக் குகைகள், இந்தியாவில் வெகு அரிதாகவே உள்ளன. இது சென்னைக்கு வட மேற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளது. இது பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் குகை 1962-63, 1963-64 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டது. இங்கு பழங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன. பழங்கற்கால மனிதர்கள் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கையாக அமைந்துள்ள குகைகளைப் பயன்படுத்தினர் என்பதற்கு இந்த இடம் ஒரு சிறப்பான சான்றாகும். இங்கு பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கிடைக்கின்றன. அச்சூலியன் காலத்திற்குப் பிந்தைய (இடைப் பழங்கற்காலம்) காலக் கருவிகள் நுண்கருவி தொழிற்கூடமாக மாறுவதற்கான தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் 16 பாறை மறைவிடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் கற்காலச் சான்றுகள் காணப்படுகின்றன. குடியம் குகை பூண்டிக்கு மேற்குப்புறம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அல்லிக்குழி மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகப்பெரிய அளவிலான குகை “மனச்சம்மன்“ குகை எனப்படும். இது சுமார் 100 அடி உயரமுடையதாகும். இக்குகை சுமார் 100 பேர் தங்கக் கூடிய அளவு பரப்பளவினை உடையதாக காணப்படுகின்றது. இப்போதும் இப்பகுதி கிராம மக்கள் பௌர்ணமி நாளில் இங்குள்ள மனச்சம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு 1962-63 மற்றும் 1963-64-இல் அகழாய்வு செய்யப்பட்டது. இதில் தொல்பழங்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தில் படிப்படியாக வளர்ச்சி பெற்றதைத் தெளிவாக அறியமுடிகிறது. கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வெட்டிகள், சுரண்டிகள் ஆகியவை இங்கு கிடைத்துள்ளன.
குறிப்புதவிகள்
குடியம்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 29
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு