அகழாய்வு
ஆதிச்சநல்லூர்
அகழாய்விடத்தின் பெயர் ஆதிச்சநல்லூர்
ஊர் ஆதிச்சநல்லூர்
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
மாவட்டம் தூத்துக்குடி
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் கி.பி. 1876 மற்றும் கி.பி. 2004
அகழாய்வு தொல்பொருட்கள் முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், பானையோட்டில் உள்ள புடைப்பு உருவங்கள், தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் இந்தியத் தொல்லியல் துறை
விளக்கம்

          இங்கு மூன்று அடுக்குகளில் தாழிகள் மண்ணில் புதைக்கப்பட்டுக் காணப்படுகின்றன. ஆனால் இந்த இடத்துடன் தொடர்புடைய வாழ்விடம் எங்கு இருந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு பல்லயிரக்கணக்கான தாழிகள் காணப்படுகின்றன. இவை சிவப்பு நிறத்தில் உள்ளன. சில தாழிகள் கருப்பு-சிவப்பு நிறத்திலும் உள்ளன. இங்கு கிடைத்த தாழி ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருந்ததாகக் கருதப்பட்டு, அது குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளன. தற்போது அவை பிராமி எழுத்துக்கள் அல்ல என்று கருதப்படுகின்றது.

          மனித எலும்புக்கூடுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லா தாழிகளிலும் மனித எலும்புகள் அதிக அளவில் காணப்படவில்லை. எனவே இறந்தவர்களின் உடல் சில சடங்குகளுக்கு உட்படுத்தப்பட்டு, பிறகு எல்லா எலும்புகளுமோ அல்லது சில எலும்புகள் மட்டுமோ எடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. இங்கு கருப்பு-சிவப்பு, சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒரு பானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் (applique) காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன.

          வெப்ப உமிழ் காலக்கணிப்பு (Thermoluniscence dating) வழியாக இந்த இடம் பொ.ஆமு 1500 லிருந்து பொ.ஆ 500 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று கருதப்படுகின்றது. அதாவது இன்றிலிருந்து 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் மத்தியத் தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் மத்தியத் தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          ஆதிச்சநல்லூர் ஓர் இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்ககாலத் (பெருங்கற்காலம்) தொல்லியல் இடமாகும். இரும்புக்கால மக்கள் இறந்தவர்களைத் தாழிகளில் வைத்துப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தில் இறந்தவர்களைப் புதைத்த தாழிகள் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன.

          தமிழகத்தில் உள்ள பெருங்கற்கால இடங்களில் மிகப்பெரிய இடம் இதுவாகும். இது சுமார் 116 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இது திருநெல்வெலியிலிருந்து 24 கிமீ தொலைவில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு நடந்த அகழாய்வுகளில் பல அரிய இரும்புக்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த இடத்தில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். பின்னர் அலெக்ஸாண்டர் ரீ அகழாய்வுகள் செய்து பல தொல்பொருட்களைக் கண்டுபிடித்தார். இவை சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

          2004ல் இந்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரி சத்தியமூர்த்தி அவர்கள் அகழாய்வுகள் நடத்தி உள்ளார். இந்த அகழாய்வில் 150க்கும் மேற்பட்ட தாழிகள் அகழாய்வு செய்யப்பட்டன.  இந்த இடம் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஈமக்காடாகப் பயன்படுத்தப்பட்டது.

குறிப்புதவிகள்
ஆதிச்சநல்லூர்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 Jul 2017
பார்வைகள் 209
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு