அகழாய்வு
உறையூர்
அகழாய்விடத்தின் பெயர் உறையூர்
ஊர் உறையூர்
வட்டம் திருச்சி
மாவட்டம் திருச்சி
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 1964-65 முதல் 1969 ஆம் ஆண்டு வரை
அகழாய்வு தொல்பொருட்கள் கறுப்பு சிவப்பு மட்கலன்கள், கறுப்பு மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், வழவழப்பான பழுப்பு மட்கலன்கள், காவிக் கலவை பூசப்பட்ட மட்கலன்கள், சிவப்பு மட்கலன்கள், ரெளலட்டட் மட்கலன்கள், தமிழ் எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள்-மூலன்பேடுஅந்தணன், கெநாகனஅன், பூனாகன், அரைசகாளன்குவி, கூட்டல் குறியீடு, அலைவரி, சூரியன் அல்லது நட்சத்திரம், அம்பு, இலை, பாய், சுவஸ்திகம், பறவை வடிவம் போன்ற கீறல் குறியீடுகள், சுடுமண் பொம்மைகள், சதுரங்கக்காய்கள், சுடுமண்ணாலான காதணிகள், புகைப்பிடிக்கப் பயன்படும் குழல்கள் (Smokingpipes) நூல் நூற்கும் கருவிகள் (Spindle whorl) மணி வகைகள், வளையல்கள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான வளையல்கள்
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகம்
விளக்கம்
உறையூரின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் 4 வருடங்களில் மொத்தம் 11 குழிகள் அகழ்வு செய்யப்பட்டன. இப்பதினோரு குறிகளில் உறையூர் 1 (URY-1 - URY-2) உறையூர்-2 ஆகிய குழிகளில் மட்டுமே முதற்பண்பாட்டுக் காலத்தின் எச்சங்கள் கிடைத்தன. உறையூர்-3, உறையூர்-8 (URY-3 - URY-8) மற்றும் சில குழிகளில் தொடர்ச்சியாக இரண்டு பண்பாட்டுக் காலங்களின் மண்ணடுக்குகள் காணப்பட்டன. முதற்பண்பாட்டுக் காலத்தில் கறுப்பு சிவப்பு மட்கலன்கள், கறுப்பு மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள், வழவழப்பான பழுப்பு மட்கலன்கள், காவிக் கலவை பூசப்பட்ட மட்கலன்கள், சிவப்பு மட்கலன்கள், ரெளலட்டட் மட்கலன்கள் போன்றவை கிடைத்தன. இவற்றில் பழுப்பு நிற மட்கல ஓடுகளிலும் ரௌலட்டட் மட்கல ஓடுகளிலும் கீறல் குறியீடுகள் காணப்படவில்லை . கறுப்பு சிவப்பு மட்கலன்கள், காவிக்கலவை பூசப்பட்ட மட்கலன்கள் ஆகியவற்றின் பயன்பாடு முதற்பண்பாட்டின் பிற்பகுதியில் குறைந்தே காணப்பட்டன. பெருங்கற்கால பண்பாட்டு மட்கலன்களான இவை, வரலாற்றின் தொடக்க காலத்தில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டு பின்னர் வழக்கொழிந்துவிட்டன. கண்ணாடி, சுடுமண் அரிய கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பல்வேறு வகை மணிகள் முதற்பண்பாட்டின் மண்ணடுக்குளில் கிடைத்தன. மற்றும் வளையல்கள், இரும்பு, செம்புப் பொருட்கள், சங்கினாலான பொருட்கள், எலும்பினாலான பொருட்கள் போன்றவைகளும் கிடைத்தன. இடைக்கால நாகரிகத்தைக் கொண்ட இரண்டாவது பண்பாடு மட்பாண்டங்களின் அடிப்படையில் பண்பாட்டுக்காலம் (2அ) பண்பாட்டுக்காலம் (2ஆ) என இருவகையாகப் பிரிக்கப்பட்டது. இரண்டாவது பண்பாட்டின் முதற்பகுதியில் (2அ) கறுப்பு சிவப்பு மட்கலன்கள், கறுப்பு மட்கலன்கள், மெருகூட்டப்பட்ட சிவப்பு மட்கலன்கள், சாதாரண சிவப்பு மட்கலன்கள், செலடன் மட்கல ஓடுகள் போன்றவை கிடைத்தன. இரண்டாவது பண்பாடு இங்கு மிகுந்த அளவில் காணப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் மட்டுமே தொடர்ச்சியான பண்பாட்டு எச்சங்கள் கிடைத்துள்ளன. பிறபகுதிகளில் இக்காலகட்டத்தைச் சார்ந்த எவ்விதமான சான்றுகளும் கிடைக்கவில்லை. தொல்பொருட்களும் குறைந்த அளவே கிடைத்தன. இக்கால கட்டத்தில் சிவப்பு மட்கலன்கள் எந்தவித அலங்காரமுமின்றி பயன்படுத்தப்பட்டன. இக்கால கட்டத்தில் கொள்கலன்கள் (Storage Jar) தானியங்களையோ அல்லது நீரினையோ சேமிக்க பயன்படுத்தப்பட்டன. உறையூர் அகழாய்வில், உறையூர் - 1 குழியில் 21 குச்சி நடுகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் அமைப்பு கருடப்பறவையின் பின்பகுதி போன்று காணப்பட்டது. இக்குழிகள் சமயசடங்குகளுக்காக வெட்டப்பட்டிருக்க வேண்டும். இக்குழிகள் வட்டவடிவம், சதுரம் அல்லது செவ்வக வடிவங்களைக் கொண்டிருந்தன. இக்குழிகளில் ஒன்றில் சில எலும்புத்துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. உறையூர் -4 என்று பெயரிடப்பட்ட குழியில் சாயத் தொட்டி ஒன்றின் சிதைந்த பகுதி காணப்பட்டது. இத்தொட்டிமுதற்பண்பாட்டைச்சார்ந்தது. இது சதுரமான ஒரு பகுதியையும் செவ்வக வடிவிலான மற்றொரு பகுதியையும் கொண்டு விளங்கியது. 7 வரிசையிலான செங்கற்களால் கட்டப்பட்ட செவ்வக வடிவ இத்தொட்டி 14319" அளவினைக் கொண்டிருந்தது. இதனருகில் இணைந்திருந்த சதுரமான தொட்டியின் அடிப்பகுதியில் தரை காணப்பட்டது. இத்தொட்டியின் செங்கற்களின் அளவு 17x0x3" ஆகும். இவற்றிலிருந்து உறையூர் முற்காலத்திலேயே நெசவுத் தொழிலில் புகழ் பெற்று விளங்கியமை புலப்படுகிறது. உறையூர் அகழாய்வில் தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகள் 20 பானை ஓடுகளில் காணப்பட்டன. பெரும்பாலான பானை ஒடுகளின் மேற்பகுதியிலும், கழுத்துப்பகுதியிலும், அடிப்பகுதியிலும் இப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இவை யாவும் கறுப்பு சிவப்பு மட்கல ஓடுகளிலும், காவிக்கலவை பூசப்பட்ட மட்கல ஓடுகளிலும் மட்டுமே காணப்படுகின்றன. கூர்மையாக ஆணி கொண்டு பானை சுடப்பட்ட பின்பு இவை கீறப்பட்டுள்ளன. இப்பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள் யாவும் முழுமையான சொற்களாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் மூலன்பேடுஅந்தணன், கெநாகனஅன், பூனாகன், அரைசகாளன்குவி போன்ற சொற்கள் முழுமையானதாக தெரிகிறது. இவை யாவும் கி.மு. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. எழுத்துக்களைத் தவிர பல கீறல் குறியீடுகளும் உறையூரில் கிடைத்த மட்பாண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றுள் குறிப்பிடத்தக்கவை கூட்டல் குறியீடு, அலைவரி, சூரியன் அல்லது நட்சத்திரம், அம்பு, இலை, பாய், சுவஸ்திகம், பறவை வடிவம் போன்ற வடிவங்களைக்கொண்டிருந்தன. உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் இவ்வகழாய்வில் கிடைத்தன. மனிதஉருவங்கள் இவற்றுள் பெரும்பாலானவை. இவற்றைத் தவிர விளையாடப் பயன்படும் சதுரங்கக்காய்கள், சுடுமண்ணாலான காதணிகள், புகைப்பிடிக்கப் பயன்படும் குழல்கள் (Smokingpipes) நூல் நூற்கும் கருவிகள் (Spindle whorl) மணி வகைகள், வளையல்கள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான வளையல்கள் போன்றவைகளும் கிடைத்துள்ளன. உறையூரில் வாழ்ந்த மக்கள் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இதனைத் தவிர நெசவுத் தொழிலும் மட்பாண்டங்கள் வனைதல், மணி வகைகளைச் செய்தல் போன்ற தொழில்களும் இவ்வூரில் சிறப்பாக நடைபெற்றது. இங்கு மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழவில்லை என்பது அகழாய்வின் மூலம் தெரிய வருகிறது. அடிக்கடித் தங்களின் குடியிருப்புப் பகுதிகளை மாற்றிக் கொண்டுள்ளனர். இம்மாற்றம்கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் நடந்திருக்க வேண்டும். சில அகழாய்வுக் குழிகளில் வெள்ளம் ஏற்பட்டு குடியிருப்புகள் அழிந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. குடியிருப்பு மாற்றத்திற்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
ஒளிப்படம்எடுத்தவர் சென்னைப் பல்கலைக்கழகம்
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் சென்னைப் பல்கலைக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியாக இன்று விளங்கும் உறையூர் சங்ககாலச் சோழர்களின் தலைநகரமாகப் புகழ் பெற்று விளங்கியது. காவேரி ஆற்றின் மேற்குக் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. உறையூர் பல்வேறு பெயர்களால் வழங்கப்பட்டது. பெரிப்ளஸ் ஆப் எரித்ரியன் ஸீ, என்னும் நூலிலும் தாலமியின் நூலிலும் 'ஒர்துறரேகிசோமதி' (Orthura Regi Somati) என்றும் அர்கறு என்றும் இவ்வூர் வழங்கப்பட்டன. சங்கஇலக்கியங்களில் கோழியூர் , கோழிமாநகர், வாரணம் என்றும் தேவாரத்தில் திருமுக்கிச்சுரம் என்றும் உறையூர் குறிப்பிடப்பட்டுள்ளது. குக்குடபுரி , வில்வவனம் என்பது பிறபெயர்களாகும். சாளுக்கியர்களின் கல்வெட்டுகளில் இவ்வுர் 'உறகபுரம்' என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் வாழ்கின்ற (உறைகின்ற) ஊர் உறையூர்' என இவ்வூர் பெயர் ஏற்பட்டிருக்கலாம். சங்க இலக்கியங்களான அகநானூறுகுறுந்தொகைஆகியவற்றில்உறையூரின்பெருமைசித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் பேரியாறு (காவேரி) ஆற்றின்கரையில் அமைந்திருந்ததாகவும், இதன் கிழக்கே நெடும்பெருங்குன்றம் (திருச்சிராப்பள்ளிமலை) என்ற மலை அமைந்திருந்ததையும் அகநானூறு குறிப்பிடுகிறது. இந்நகரம் ஆற்றுத் துறையாகவும் விளங்கியதை குறுந்தொகை குறிப்பிடுகிறது. நற்றினை, பட்டினப்பாலை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களிலும் உறையூர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்நகரம் மிகப்பெரிய அளவுடையதாகவும் அரண்களுடன் இருந்ததையும் கரிகாலச் சோழனின் தலைநகரமாக விளங்கியதையும் பட்டினப்பாலை எடுத்துரைக்கிறது. இந்நகரில் பங்குனித் திருநாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நகரில், இருந்த சபை சிறந்த நீதியை வழங்கியது. பன்னெடுங்காலமாக புகழ்பெற்ற உறையூர் பகுதியில் களஆய்வுகள் மேற்கொண்ட பொழுது பண்டைக்கால கறுப்பு சிவப்பு மட்கலஓடுகள், ரௌலட்டட் மட்பாண்ட ஓடுகள், சங்கினாலான மணிகள் போன்றவை கிடைத்தன. உறையூர் பகுதி திருச்சியில் சிறிது மேடானப் பகுதியில் காணப்படுகிறது. இன்றைய உறையூரில் நெருக்கமான வீடுகள் காணப்படுவதால் பெரும் பரப்பு அகழாய்வை மேற்கொள்வது கடினமாகவே சிறிய அளவில் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. களஆய்வின் அடிப்படையிலும் சங்ககாலச் சோழர்களின் தலைநகரை முழுமையாக அறியவும் காவேரிப் படுகையில் அமைந்திருந்த சிறந்த நகரமானஉறையூரில் 1964-65 முதல் 1969 ஆம் ஆண்டு வரை 4 பருவங்களில் அகழாய்வுகளைச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையினர் பேராசிரியர் T.V. மகாலிங்கம் தலைமையில் மேற்கொண்டனர்.
குறிப்புதவிகள்
உறையூர்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 39
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு