வரலாற்றுச் சின்னம்
நாமக்கல் அரங்கநாதர் குடைவரை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | நாமக்கல் அரங்கநாதர் குடைவரை |
|---|---|
| அமைவிடம் | அரங்கநாதர் குடைவரை |
| ஊர் | நாமக்கல் |
| வட்டம் | நாமக்கல் |
| மாவட்டம் | நாமக்கல் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
மேற்கு நோக்கியுள்ள குடைவரைக் கோயில் அரங்கநாதனுக்கென அமைக்கப்பட்டது. இது ஏறக்குறைய மலையின் பாதி உயரத்தில் அமைந்துள்ளதால் இதனை சென்றடையக் குடைவரையின் இரு பக்கங்களிலும் படிகள் சீராக அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது மரப்படிகளும் அமைத்து உள்ளே செல்ல வழி செய்துள்ளனர். எனவே தாய்ப் பாறையிலேயே குடையப்பட்ட படிகள் மறைக்கப்பட்டுள்ளன. மலைப் பாறையில் குடைந்தெடுக்கப்பட்ட குடைவரைக் கோயிலின் முன்பாக இதனை யொட்டியவாறு மகாமண்டபம், முகமண்டபம், மடப்பள்ளி போன்ற புதிய கட்டிடங்களும் பிற்காலத்தில் சேர்த்தமைக்கப்பட்டுள்ளன. உள்மண்டபத்திலிருந்து பக்கவாட்டில் செதுக்கப்பட்ட படிகளைக் கடந்து மண்டபத்தன் முகப்பினை அடையலாம். முகப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பெரிய தூண்களும் பக்கவாட்டுச் சுவரையொட்டி இரு அரைத்தூண்களும் அமைந்துள்ளன. இத்தூண்களையொட்டி பாதுகாப்பிற்கென பிற்காலத்தில் அமைக்கப்பட்ட கதவுகள் இக்குடைவரையின் இயற்கையழகினை மறைத்து நிற்கின்றன. இங்குள்ள கருவறையின் அமைப்பு நீண்ட அர்த்தமண்டபப் பகுதி, அடுத்து கருவறை போன்றவற்றைக் கொண்டுள்ளது. தூண்கள் மேலும் கீழும் சதுரமாகவும் நடுவே ஆறு பட்டைகளுடனும் காணப்படுகின்றன. பக்கவாட்டில் உள்ள தூண்கள் முழு உயரத்திற்கும் சதுரமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் தாமரையின் முழு வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை முழுவதுமாக அடைத்துக் கொண்டு மிகப் - பெரிய அளவில் அரவனையில் மீது பள்ளிக் கொண்ட பெருமாள், "அனந்தசாயி” என்னும் பெயருடன் காணப்படுகிறார். "யோக சயன விஷ்ணு" என அழைக்கப்படும், திருமால் ஐந்து தலை கொண்ட கடுகாடன் எனும் அரவத்தின் மீது பள்ளி கொண்டுள்ள காட மனதைக் கொள்ளைக் கொள்கின்றது. இரு கரங்களுடன் திருமால் சயனித்திருக்க சுற்றிலும் தேவதைகள் சூழ்ந்திருக்க இக்குடைவரைக் கோயில் "மானசாரம்" என்ற ஆகம நூலில் குறிப்பிட்டுள்ள கட்டிட விதிப்படி அமைந்துள்ள "சயனகிருகம்" போன்றுள்ளது எனலாம். இக்குடைவரைக்கோயில், கல்வெட்டுகளில் "சயன கிரகம்" என்றும் அதியேந்திர விஷ்ணு கிரஹம்" என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு திருமாலின் திருவடிகளின் அருகே மது, கைடபர் என்ற இரு அரக்கர்களின் உருவங்கள், அருகே சந்நிதன், மறு பக்கம் பின்புறச் சுவற்றில் திருமாலின் தொப்புள் கொடியினின்றும் மலர்ந்த தாமரை மலரில் அமர்ந்துள்ள நான் முகன், தும்புருவர், நாரதர் ஆகியோரது உருவங்களும் காணப்படுகின்றான். கீழே மார்கண்டேயர், கருடன் போன்றோர் சிற்பங்களும் உள்ளன. அனைத்துச் சிற்பங்களும் சேர்ந்து அரங்கனின் பரமபதத்தினை நம் கண்முன் காண்பது போன்ற தோற்றத்தினை அளிக்கின்றன. அர்த்தமண்டபத்தின் இடது சுவரில் மிகவும் அழகியப் புடைப்புச் சிற்ப வடிவில் வாமன அவதாரப் புராணக்கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு கரம் குடையை ஏந்தியும் மறு கரம் கையேந்தியும் மகாபலிச் சக்கரவர்த்தியின் எதிரில் சிறிய உருவ வாமனராகத் திருமாலும் அருகில் அத்திருமாலின் விஸ்வரூப உலகளந்த சிற்பமும் திருவிக்கிரமனுமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அருகில் கருடன், ஜாம்பவான், கந்தர்வர்கள் முதலானோரின் சிற்பங்களும் உள்ளன. சிவனும் திருமாலும் சேர்ந்தமைந்த உருவமான சங்கர நாராயணன் (ஹரிஹரன்) உருவம் அர்த்த மண்டபத்தின் மறு பக்கத்திலுள்ள சுவற்றில் சிற்பமாகக் காணப்படுகிறது. வலது பாதி சிவபிரானும் இடது பாதி திருமாலுமாக மிக அழகான முறையில் இச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ஏழு உருவங்கள் ஏழு நதிகள் என்பர். ஆயின் அவர்களில் ஐவர் ஆண்கள் என்பதால் அவ்வாறு கூறுதல் சரியன்று. கருடன், நந்தி இருவர் தவிர இருபுறமும் திருமகள், பார்வதி ஆகியோர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. மேலே பறக்கும் உருவம் போல் சூரியனும், சந்திரனும் மேகத்தினிடையே காணப்படுகின்றனர். இதனை அடுத்த சுவற்றில் பால் நரசிம்மரின் உருவம் சங்கு சக்கரத்துடனும் கிரீட மகுடத்துடனும் காணப்படுகின்றது. நரசிம்மனின் இக்குழந்தை உருவம் கண்கொள்ளாக் காட்சியாகும். இங்குள்ள தூணின் போதிகையிலும் உத்திரத்திலும் நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிரந்த எழுத்துக்களில் வடமொழியில் அமைந்துள்ள இக்கல்வெட்டுக்களில் ஒன்று அதிய அரசனான குணசீலனால் அதியநாத விஷ்ணு கிரஹம்" எனும் திருமாலுக்கான இக்குடைவரை அமைக்கப்பட்டது எனக் கூறுகிறது. மற்றொன்று சற்றே சிதைந்த நிலையில் உள்ளது. இதில் அதியேந்திர விஷ்ணு கிரஹம்" என்றும் "அதியபுலம்" என்றும் கூறப்பட்டுள்ளன. மூன்றாவது அரைகுறையாக உள்ள கல்வெட்டு "சேரமான்" என்பவனைப் பற்றிக் கூறுகிறது. இது குணசீலனின் மற்றொருப் பெயராக இருக்கலாம். கருவறையின் நேராக உத்திரத்தில் உள்ள நான்காவது கல்வெட்டு இக்குடைவரையை "சயக்கிரகம்" (சயனக்கிரகம்) என்று கூறுவதுடன் அதிலுள்ள சிற்பங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி விவரமாகக் குறிப்பிட்டுள்ளது. அவை மார்கண்டேயன், கருடன், வருணன், பிரம்மா, ஈசன், தட்சன், சசி, சூரியன், தும்புரன், நாரதன், குரு, பிருகு, சாரங்கன், கௌபோதகன், சக்கரம், நன்கட (காட்கன்) பாஞ்சஜன்யன் (சங்கு) மது, கைடபர் என்பனவாகும். கருவறையிலுள்ள சிற்பங்களைப் பட்டியலிட்டு கூறும் கல்வெட்டு இது ஒன்றேயாகும். இக்குடைவரையின் அருகில் சுனையொன்று உள்ளது. இங்கு கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி - வட்டெழுத்து வளர்ச்சி நிலை கல்வெட்டுக்கள் சிதைந்து காணப்படுகின்றன வடமொழி கல்வெட்டொன்றும் கிரந்த எழுத்தில் சிதைந்து காணப்படுகிறது. சுனையின் நேர் மேலே "புலிக்காட்டி" என்று குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று வட்டெழுத்துத் தோன்றிய கால (5 - 6 நூற்றாண்டு) கட்டத்தைச் சார்ந்தது. இவற்றின் மூலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டளவிலேயே இம்மலை சிறப்புப் பெற்று இருந்தது விளங்கும். இக்கல்வெட்டுகளைத் தவிர அரசனின் விருதுப் பெயர்கள் இக்குடைவரைத் தூண்களில் வெட்டப்பட்டுள்ளன. குணசீலன் தன்னை மதனவிலாசன், உதாரச்சித்தன், விமல சரீரன், கானரதேவன், நயபரன், பரக்கிருதிப்பிரியா, நரவாகனன், உத்பலகாருனீகன், மனோமாயன், ஸ்ரீவரன், சிளம் பெரிதன், (திதிபூதன்) என்ற விருதுப் பெயர்களில் அழைத்துக் கொள்கின்றான்.
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | நாமக்கல் நரசிங்கப்பெருமாள் குடைவரை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் |
| ஒளிப்படம்எடுத்தவர் | சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| குறிச்சொற்கள் |
|
|
சுருக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் வட்டத்தில் அமைந்துள்ள நாமக்கல் ஊரின் மையப் பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள மலைக் குன்றில் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன. ஒன்று கிழக்கு நோக்கியும் மற்றொன்று மேற்கு நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டுமே திருமாலின் உருவமான அரங்கநாதர், நரசிம்மர் ஆகிய இருவருக்கும் தனித்தனியே குடைந்தமைக்கப்பட்டவையாகும். கல்வெட்டுகளில் இவ்வூர் "ஆரைக்கல்" என்றும் குறிக்கப்பட்டுள்ளன. மேற்கு நோக்கியுள்ள அரங்கநாதர் குடைவரைக் கோயில் அரங்கநாதனுக்கென அமைக்கப்பட்டது. இது ஏறக்குறைய மலையின் பாதி உயரத்தில் அமைந்துள்ளதால் இதனை சென்றடையக் குடைவரையின் இரு பக்கங்களிலும் படிகள் சீராக அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது மரப்படிகளும் அமைத்து உள்ளே செல்ல வழி செய்துள்ளனர். எனவே தாய்ப் பாறையிலேயே குடையப்பட்ட படிகள் மறைக்கப்பட்டுள்ளன. மலைப் பாறையில் குடைந்தெடுக்கப்பட்ட குடைவரைக் கோயிலின் முன்பாக இதனை யொட்டியவாறு மகாமண்டபம், முகமண்டபம், மடப்பள்ளி போன்ற புதிய கட்டிடங்களும் பிற்காலத்தில் சேர்த்தமைக்கப்பட்டுள்ளன.
|
|
|
குறிப்புதவிகள்
தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
|
|
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | மத்தியத் தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 356 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 2 |