சிற்பம்

பிட்சாடனர்

பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் பிட்சாடனர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த சிவபெருமானின் பிட்சாடனர் திருக்கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தாருகாவனத்தின் முனிவர்களின் அஞ்ஞான ஆணவ மலத்தை அழிக்க சிவனார் பிட்சாடனர் கோலத்தில் செல்ல, அங்குள்ள முனிப்பெண்டிர் பிச்சையேற்கும் பெருமானின் எழில் கோலங்கண்டு மயங்குகின்ற காட்சி. ஓங்கி உயர்ந்த உருவமாய் விரிந்த ஜடாபாரத்துடன் கால்களில் செருப்பு அணிந்து நடக்கின்ற நிலையில் காட்டப்பட்டுள்ள பிட்சாடனர் உடலை பக்கவாட்டிலும் முகத்தை நேராக வைத்தும் திரும்பிய நிலையில் நடக்கின்றார். இடது கால் ஊன்றிய நிலையிலும் வலது கால் பின்புறமாக வளைத்து தூக்கி நடக்கின்ற பாணியிலும் காட்டப்பட்டுள்ளது. இடையணி காட்டப்பட்டுள்ளது. இடைக்கட்டின் முடிச்சு இடது கால் வழியே தொங்குகின்றது. பிச்சை ஏற்கும் பெருமானுக்கு இரண்டு கைகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன. இடது கையை சுட்டுக் கையாகவும், வலது கை தண்டத்தை தோளில் சாய்த்தபடியும் அமைந்துள்ளது. கைகளில் முன்வளைகள் அணியப்பட்டுள்ளன. காதுகளில் பெரிய வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. முப்புரிநூல் இடது மார்பிலிருந்து இடது தொடையின் வழியே உடலின் பின்புறம் செல்கிறது. பலி தேர்ந்தவரின் முன்னால் காலடியில் முனிப்பத்தினி ஒருவள் அரை முழந்தாளிட்டு வணங்கிய நிலையில் உள்ளாள். (உணவை இடுவதாகவும் இருக்கலாம்). அப்பெண்ணுக்குப் பின்னால் மற்றொரு கழுத்து வரையிலான உருவம் காட்டப்பட்டுள்ளது. அப்பெண் இடது கையை உயர்த்தி போற்றி முத்திரை காட்டுகிறாள். அவளுக்கு மேலே முனிவர் ஒருவர் நீண்டதாடியுடன் ஜடாமகுடம் அணிந்து, இடது கையை மேலே உயர்த்தியும், வலது கையால் கடக முத்திரை காட்டியும் உள்ளார். பிட்சாடனர் சிற்பம் காட்டப்பட்டுள்ள பீடத்தை யானை ஒன்று தாங்குகின்றது. பிட்சாடனர் கோட்டத்திற்கு மேலே அமைந்துள்ள சிறு பகுப்புக் கோட்டத்தில் இறைவனின் ஆடல் சிற்பம் அமைந்துள்ளது. இக்கரணத்தில் இறைவன் எட்டுத் திருக்கைகளுடன் திகழ்கிறார். ஜடாமகுடம் தரித்துள்ளார். மார்பில் முப்புரிநூல் உடலின் பின்புறம் செல்கிறது. கைகளில் தோள்வளைகளும், முன்வளைகளும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள இறைவன் ஆடல்வல்லான் கருடாசனத்தில் அமர்ந்தவாறு இடது காலை பின்பக்கமாக வளைத்து உயர்த்தியுள்ளார். இடையின் ஆடை முன்னே தொங்குகிறது. வலது முன் கை மார்பின் குறுக்காக செல்கிறது. இடது முன் கை மேல் நோக்கி தலைக்கு மேலே சென்று வளைந்துள்ளது. மற்ற கைகளில் வியப்பு முத்திரை, கடக முத்திரை, உடுக்கை, நாகம், ஆகியன தெரிகின்றன. உடலை முன்பக்கமாக பக்கவாட்டில் நகர்த்தி ஆடும் நடமாக இது அமைந்துள்ளது.
குறிப்புதவிகள்
பிட்சாடனர்
சிற்பம்

பிட்சாடனர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்