சிற்பம்

பிட்சாடனர்

பிட்சாடனர்
சிற்பத்தின் பெயர் பிட்சாடனர்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த சிவபெருமானின் பிட்சாடனர் திருக்கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
உலகியல் நெறிமுறைகளான பிரவிருத்தி மார்க்கத்தினைப் பின்பற்றாமலிருந்ததைச் சிவபெருமான் பிட்சாடனர் வடிவில் ரிஷிகளுக்கு உணர்த்திய சிற்ப வடிவாகும். இப்புராணப் பின்னணியை லிங்க புராணம் விளக்குகின்றது. பிட்சாடனர் சிற்பம் சோழர்காலத்தில் புகழ்பெற்ற சிற்பமாகும். தஞ்சைப் பெரிய கோயிலில் கற்சிற்பமாகவும், உலோகச் சிற்பமாகவும், அதற்குரிய அணிகலன்களைப் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டுக்களில் குறிப்புகள் இருக்கின்றன. கல்வெட்டு இவரைப் “பிச்சதேவர்” என்று குறிப்பிடுகிறது. சோழர்காலச் சிவாலயங்களில் தேவகோட்டங்களில் இடம்பெற்றதுடன் உற்சவமூர்த்தியாகவும் போற்றப்பட்டார். சோழர் கோயில்களில் திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, மேலப்பெரும்பள்ளம் ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனியராக விளங்குகிறார். திருவாலீஸ்வரம் கோயிலில் அமைந்துள்ள பிட்சாடனர் சிற்பம் ஆடையுடன் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். ஜடாபாரம் தலையணியாய் கொண்டு, நெற்றியில் முக்கண் விளங்க, முன்னிரு கைகளால் சிறு கோல் கொண்டு உடுக்கையை அடித்தபடி, வலது பின் கையில் உள்ள கபாலத்தில் முனிபத்தினி இடும் பிச்சையை ஏற்றவாறும், இடது பின் கையில் நீண்ட தண்டத்துடன் கூடிய மயிற்பீலிகையை பிடித்து தோளுக்கு பின்னால் சாத்தியவாறும் உள்ளார். அவரின் வலதுபக்கம் முனிபத்தினி கையில் உணவுப் பாத்திரத்துடன் நிற்கிறாள். பிச்சதேவரின் காலின் இருபுறமும் மானும், பாத்திரத்தை தலையில் தாங்கியுள்ள கணமும் உள்ளன. காலில் செருப்பு அணிந்துள்ள பிச்சமூர்த்தி வைஷ்ணவ நிலையில் காட்டப்பட்டுள்ளார். முகப்புடன் கூடிய அரைப்பட்டிகை இடைக்கட்டு முடிச்சுடன் உள்ளது. தொடை வரையிலான அரையாடை காணப்படுகிறது. கைகளில் தோள் வளை, கடகவளை, முன்வளைகள் அணிந்துள்ளார். கழுத்தணிகளும் காணப்படுகின்றன. மார்பில் முப்புரி நூல் அணிந்துள்ளார். தாருகாவனத்து முனிவர்களின் ஆணவ மலத்தை அழிக்க வந்த பிட்சாடனர் படிம் முற்காலச் சோழர் கலைப்பாணியில் சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்புதவிகள்
பிட்சாடனர்
சிற்பம்

பிட்சாடனர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்