Back
சிற்பம்

சண்டேச அனுக்கிரக மூர்த்தி

சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பத்தின் பெயர் சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
சண்டேசருக்கு அருள்பாலிக்கும் சிவனார் சண்டேச அனுக்கிரகர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சண்டேசுவரர் சிவபெருமானால் மகனாக ஏற்றுகொள்ளப்பட்டுச் சண்டீசப்பதம் அளிக்கப்பட்ட பெருமைக்குரியவர். கிருதயுகத்தில் "பிரசண்டர்' எனவும், திரேதாயுகத்தில் "விக்ராந்த சண்டிகேசுவரர்' என்றும், துவாபரயுகத்தில் "விஷ சண்டிகேசுவரர்' என்றும், கலியுகத்தில் "வீரசண்டிகேசுவரர்' என்றும் நான்கு யுகங்களிலும் நான்கு விதமாக அழைக்கப்படுபவர். மண்ணையாற்றின் தென்கரையில் சேய்ஞலூர் என்னும் சிற்றூரில் எச்சதத்தன்-பவித்திரையின் புதல்வராகப் பிறந்தவர் விசாரசருமர். மண்ணையாற்றங் கரையில் பசுக்கள் மேய்ப்பதை விடுத்து, மணலால் சிவலிங்கம் அமைத்து, பசுக்கள் சொரிந்த பாலை லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார் விசாரசருமர். இதையறிந்த அவரின் தந்தை, அவரை கோலால் அடித்தார். ஆனால் அவர் தொடர்ந்து சிவபூஜையில் ஈடுபட்டார். இதனால் கோபம் அதிகமாகி, அபிஷேகப் பால் குடத்தை எட்டி உதைத்து சிவலிங்கத்தை சிதைத்தார் அவர் தந்தை. சிவ பக்தியால், கீழே கிடந்த கோலை எடுத்தார். அது மழுவாக மாறியது. அதைக் கொண்டு தந்தையின் இரு கால்களையும் வெட்டினார் விசாரசருமர். அப்போது இறைவன் காட்சி தந்து, ""இனி நாமே உமக்கு தந்தையாவோம்.'' என்று கூறி, தம் திருத்தொண்டர்களுக்கு அவரைத் தலைவராக்கி, தன் சிரசின் மீதிருந்த கொன்றை மாலையை அவருக்குச் சூட்டி "சண்டேசுரபரம்' தந்தருளினார். சிவனருளால், விசாரசருமர் "சண்டேசுவரர்' ஆனார். கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சண்டேச அனுக்கிரக மூர்த்தி சிற்பத்திற்கு இச்சிற்பம் முன்னோடியானது எனலாம். நான்கு திருக்கைகளுடன் விளங்கும் சண்டேச அனுக்கிரக மூர்த்தி முன் இருகையால் தன் காலடியில் இரு கைகளைக் கூப்பி பணிவுடன் வணங்கிய நிலையில் கருடாசனத்தில் அமர்ந்துள்ள சண்டேசரின் தலையில் கொன்றை மாலையை சூடிய படியும், பின்னிரு கைகளில் மானையும், மழுவையும் கொண்டுள்ளார். இடது காலை தொங்கவிட்டு, வலது காலை மடக்கி வீராசனத்தில் பக்கவாட்டில் திரும்பிய நிலையில் அமர்ந்துள்ளார். அவரின் அருகில் உமையன்னை வலது காலை குத்துகாலாய் வைத்து, இடது காலை தொங்கவிட்டு காலடியின் கீழ் கால்களை மடக்கி அமர்ந்துள்ள நந்தியின் மீது வைத்துள்ளார். இடபம் நாக்கை வெளியே நீட்டியவாறு தலையைத் திருப்பி இக்காட்சியைக் காண்கிறது. தேவி தன் இரு கைகளில் வலது கையில் மலரைப் பிடித்தபடியும், இடது கையை நந்தியின் தலை மீது ஊன்றியபடியும் அமர்ந்துள்ளார். இறைவன் ஜடாமகுடராய், காதுகளில் பத்ரகுண்டலமும், வியாழ குண்டலமும் அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளி, சவடி, மார்பில் முப்புரி நூல், கைகளில் கொடி கருக்கு அணி செய்த தோள்வளைகள், முன்வளைகள், கால்களில் அரியகம் ஆகியன அணிந்து நெற்றியில் கண்ணோடு முக்கண்ணராய் விளங்குகிறார். அரைப்பட்டிகை இடையில் அணி செய்ய அரையாடை அணிந்துள்ள தேவனின் இடைக்கட்டு முடிச்சு இடதுபுறம் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. தேவி கரண்ட மகுடராய், காதுகளில் மகரக் குழைகள் அணி செய்ய, மார்பில் சன்னவீரம் அணிந்து கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள்வளைகள், இரு முன் வளைகள், கால்களில் சதங்கை, கணுக்கால் வரை நீண்ட ஆடை ஆகியன கொண்டு விளங்குகிறார். இறைவனின் காலடியில் பணிவே வடிவாய் இருகரங்கூப்பி வணங்கிய நிலையில் அரை முழந்தாளில் அமர்ந்திருக்கும் சண்டேசர் காதுகளில் பனையோலைச் சுருள் அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை தெரிகின்றது. கைகளில் தோள்வளை, கடகவளை, முன்வளைகள் உள்ளன. அரையாடை அணிந்துள்ள சண்டேசரின் முகம் சிறுவனைப் போல் காட்சியளிக்கிறது.
குறிப்புதவிகள்
சண்டேச அனுக்கிரக மூர்த்தி
சிற்பம்

சண்டேச அனுக்கிரக மூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்