சிற்பம்
இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் இலிங்கோத்பவர்
சிற்பத்தின்அமைவிடம் புள்ளமங்கை
ஊர் பசுபதி கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
அண்ணாமலையார் இலிங்கத்திலிருந்து பிளந்து நிற்கும் காட்சி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
விமானத்தின் சுவர்ப் பகுதியில் மேற்குப்புற தேவக் கோட்டத்தில் இலிங்கோத்பவர் சிற்பத் தொகுதி அமைந்துள்ளது. இலிங்கோத்பவர் சிற்பத் தொகுதி வேறொங்கும் காணவியலாத நிலையில் எழிலுடன் வடிக்கப்பட்டுள்ளது . லிங்கத்தின் நடுவே நிற்கும் அண்ணமலையாரின் இருபுறமும் நான்முகனும் திருமாலும் நின்றநிலையில் காட்சித் தருகின்றனர். முற்கால சோழர்களின் சிற்பக் கலைக்குச் சிற்பத் தொகுதி மிகச் சிறந்த சான்றாக விளங்குகிறது. இரு அரைத் தூண்களுக்கு நடுவே அமைந்த கோட்டத்தில் அடிபருத்தும், நுனி சிறுத்தும் உள்ளதுமான இலிங்கத்தின் நடுவே தீ வடிவிலான உட்குழிவில் அண்ணாமலையார் நின்ற நிலையில் உள்ளார். இலிங்கோத்பவரின் தலைமுதல் கணுக்கால் வரை இலிங்கத்தின் நடுவில் காட்டப்பட்டுள்ளது. இலிங்கோத்பவராக சிவன் சமபாதத்தில் நேராக நின்ற நிலையில் உள்ளார். முகம் சிதைந்துள்ளது. ஜடாமகுடராய், நெற்றிப்பட்டை கழுத்தணிகள். தோள்வரை நீண்ட காதுகளில் மகரகுண டலமும், பனைச் சுருளும் விளங்க, நான்கு திருக்கைகளில் மேற்கைகளில் மான்.மழுவேந்தியவராய், கீழ்க் கைகள் இடது கடிஹஸ்தமாகவும், வலது அபயஹஸ்தமாகவும் கொண்டவராய் தோள்வளை, கேயூரம், முன் வளைகள் கையணிகளாய் பெற்றவராய் உள்ளார். அரையாடை அணிந்து ஆடையின் முடிச்சுக்கள் இடையின் இருபுறமும் தெரிகின்றன. முகப்புடன் கூடிய இடைவார்ப் பட்டை அணிந்துள்ளார். நடுமார்பில் அமைந்த பிரம்மமுடிச்சுடன் கூடிய யக்ஞோபவீதம் இடமார்பின் வழிசென்று இடது தோளில் சரிந்துள்ளது. தீயின் வடிவாய் அடிமுடி காணவியலா அண்ணாமலையாய் நிற்கிறார். இலிங்கத்தின் மேற்புறம் நான்குமுகம் மற்றும் நான்கு திருக்கைகளுடன் பிரம்மன் கந்தர்வரைப் போன்று பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளார். மேலிருகைகளில் அக்கமாலையும், கெண்டியும் உள்ளன. கீழிருகைகளில் வலது இலிங்கோத்பவரை காட்டுவதுபோலவும் இடது விஸ்மய முத்திரை போன்றும் உள்ளது. முழுநீள ஆடை அணிகலன்களுடன் பிரம்மன் அண்ணலின் முடியினைக் காண முனைகிறார். இலிங்கத்தின் அடிப்பகுதியில் விஷ்ணு வராகராய் இரண்டு கைகளாலும் முகக் கொம்பினாலும் நிலத்தைத் தோண்ட முனைபவராய் காணப்படுகிறார். குப்புற படுத்த நிலையில் கேழலாய் அண்ணலின் அடி காணச் செல்பவராய் உள்ள விஷ்ணுவின் அரையாடை தெரிகிறது. ஆனால் அணிகலன்கள் தெரியவில்லை.
குறிப்புதவிகள்
இலிங்கோத்பவர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்