சிற்பம்

கணபதி
சிற்பத்தின் பெயர் | கணபதி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | புள்ளமங்கை |
ஊர் | பசுபதி கோயில் |
வட்டம் | பாபநாசம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | கணாதிபத்யம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன் |
விளக்கம்
அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் அமர்ந்த நிலையிலுள்ள கணபதி
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
புள்ளமங்கை கோயிலின் தென்புற அர்த்த மண்டப வெளிச் சுவர்க் கோட்டத்தில் கணபதி சிற்பம் அமைந்துள்ளது. அரைத்தூண்களுக்கிடையேயான இத்தேவகோட்டத்தின் மேற்பகுதியானது மகரத்தோரணத்தால் அணி செய்யப்பட்டுள்ளது. மகரத்தோரணமானது ஒன்றின் கீழ் ஒன்றாக இரண்டு தோரண வளைவுகளைப் பெற்றுள்ளது. மேல் வளைவானது யாளி வரிசை உடையதாகவும் நடுவில் அமைந்த முகப்பில் நடராசரும், கீழ்வளைவானது கணவரிசையைக் கொண்டு, நடு முகப்பில் சண்டேச அனுக்கிரஹமூர்த்தி இருக்கவும் அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டத்தில் மேலே இரு கந்தர்வர்கள் துதிபாட, முத்துத் தாமக் குடையின் கீழ் கணபதி பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சந்திரபிரபையுடன் தாமரைப் பீடத்தின் மேல் தனக்கேயுரிய லலிதாசனத்தில் அமர்ந்துள்ளார். கரண்டமகுடம் தரித்து, நெற்றியில் பூரிமம் விளங்க, அகன்ற நெற்றிப்பட்டையுடன் முறச்செவியராய், நீண்ட துதிக்கையில் அமிர்தகலசம் கொண்டுள்ளார். இடதுபுற தந்தம் வெளியே நீண்டு தெரிகிறது. நான்கு திருக்கைகளில் மேலிருகைகளில் மலர்த் தோகை போன்ற ஒன்றைப் பிடித்துள்ளார். கீழ்க்கைகளில் இடது கை தொடை மீது வைக்கப்பட்டுள்ளது. வலது அங்கையில் கனி ஒன்றை ஏந்தியுள்ளார். அது மாதுளை அல்லது மாங்கனியாய் இருக்கலாம். கணபதி இங்கு விவசாயக்கடவுள் போன்று காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாகபந்தக் கேயூரம், முன் வளைகள் கையணிகளாகவும். கழுத்தில் சரப்பளியும் அணிந்துள்ளார். மார்பில் முப்புரிநூல் துலங்க வயிற்றில் பட்டையான உதரபந்தம் உள்ளது. அரையாடையின் முடிச்சுகள் பின் பக்கம் இருபுறமும் தெரிகின்றன. கணங்களின் தலைவனுக்கு இருபுறமும் பக்கத்திற்கு நான்காக எட்டு கணங்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர். மேலே முதலாக அமர்ந்துள்ள கணம் கைகளை தாளமிட்டுக் கொண்டும். அதற்கு நேராக அமர்ந்துள்ள கணம் கணபதியின் எலியை தன்னருகே வைத்துக்கொண்டு அவரை நோக்கிப் போகுமாறு அதற்குச் சொல்வது போலும் உள்ளன. இரண்டாவது நிலையில் அமர்ந்துள்ள வலப்புற கணம் பதிக்கு சாமரம் வீசுகிறது. அதன் இடது கை மேல்நோக்கி வாழ்த்து முத்திரையை அபிநயிக்கிறது. அதற்கு நேராக உள்ள இடதுபுற கணம் இடக்கையில் வைத்துள்ள மலர்க் கூடையிலிருந்து மலர்களைத் தூவிக் கொண்டுள்ளது. மூன்றாவது நிலையில் இருபுறமும் இரண்டிரண்டு கணங்கள் அமர்ந்துள்ளன. அதில் ஒன்று வயதிலும் உருவமைப்பிலும் பெரியதாக ஆண் கணமாகவும், அதன் அருகே அமர்ந்துள்ள பெண் கணம் இளவயதாகவும், சிறிய உருவத்தினையும் பெற்று விளங்குகின்றன. இவை தம்பதியர்களாய் கணபதியை வணங்க வந்தவைகளாகக் காட்சியளிக்கின்றன. இருபுறமுள்ள இணை கணங்கள் நான்கும் கைகளில் பழங்களை ஏந்தியுள்ளன. வலப்புறம் உள்ள ஆண் கணம் பலாப்பழத்தை உரிப்பது போன்று உள்ளது. வரிசையாக அரைத் தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த கணங்கள் எட்டும், தங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட தலையலங்காரங்களையும், மற்ற அணிகளையும் கொண்டு விளங்குகின்றன. அரையாடை மட்டும் பொதுவாக உள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |