Back
சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின்அமைவிடம் புள்ளமங்கை
ஊர் பசுபதி கோயில்
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் பராந்தக சோழன்
விளக்கம்
அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் எருமைத் தலையின் மீது நின்ற நிலையிலுள்ள மகிஷாசுரமர்த்தினி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
புள்ளமங்கை கோயிலின் அர்த்தமண்டப வடக்கு வெளிச்சுவர்க் கோட்டத்தில் அரைத் தூண்களுக்கு நடுவில், பீடத்தின் மேலே இருபுறம் விரிந்த பெரிய கொம்புகளையும், விடைத்த காதுமடல்களையும் கொண்ட எருமைத் தலையின் மேல் திரிபங்க நிலையில் எழிலாக மகிஷமர்த்தினி நிற்கிறாள். இளமைத் தோற்றப் பொலிவுடன் வீர நங்கையாக நின்றிருக்கும் அன்னையின் எட்டுத் திருக்கைகளில் முறையே சக்கரம், சங்கு, வாள், கேடயம், வில், அம்பு போன்ற ஆயுதங்கள் விளங்க, வலது முன் கை அபய முத்திரையையும், இடது முன் கை ஊரு முத்திரையாக தொடையருகேயும் காட்டப்பட்டுள்ளன. முத்துக் குடையின் கீழ் அழகுற அமைக்கப்பட்ட அன்னை கரண்ட மகுடராய், நெற்றியில் கண்ணி மாலை சூட்டியுள்ளார். மார்பில் கச்சைக் காட்டப்பட்டுள்ளது. கழுத்தை ஒட்டிய முத்துமாலையும், கண்டியும், மார்புவரை நீண்ட முத்துவடமும், மணிமாலையும், கைகளில் தோள்மாலை, கேயூரம், முன்வளைகள், விரலணிகள் மற்றும் கால்களில் வீரக்கழல்களும், பாடகமும் விளங்க, அரையாடை அணிந்துள்ளார். ஆடையின் முடிச்சுகள் இருபுறமும் கணுக்கால் வரை நீண்டு தொங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், இடமார்பின் வழியே செல்லும் முப்புரி நூல் (யக்ஞோபவீதம்), இடையில் மேகலை அழகுற விளங்கும் அன்னையின் முகம் சாந்தபாவனையில் மூடிய விழிகளுடன், சற்றே மலர்ந்த உதடுகளோடு பொலிவு பெற்றுள்ளது. மகிஷமர்த்தினியின் இருபுறமும் அவள் வாகனங்களும், தலைப் பலிக் கொடுக்கும் வீரர்கள் உருவங்களும் காட்டப்பட்டுள்ளன. வலப்புறத்தின் மேலே சிம்மம் ஒன்று வாளைப் பிளந்த நிலையில் வால் சுருண்டு, பிடரி முடி முன்பக்கம் தொங்குமாறு நிற்கிறது. அதற்கு நேராக இடதுபுறம் கணம் ஒன்றும், சுருண்டு நீண்ட கொம்புகளையுடைய கலைமானும் உள்ளன. மானுக்கு கழுத்திலும் உடலிலும் அணிகள் காட்டப்பட்டுள்ளன. நிற்கும் அந்த கணம் அன்னைக்கு வாழ்த்தொலிக்கிறது. இந்த சிற்றுருவங்கள் இருபுறமும் அமைக்கப்பட்ட சிறுசிறு கற்பலகைத் தாங்கியின் மேல் அமைந்துள்ளன. இவை புடைப்புச் சிற்பங்களாகும். வாகனங்களின் கீழே அமைக்கப்பட்டுள்ள நவகண்ட வீரர்களில் வலப்புறமுள்ளவர் இடதுகையால் தன் முடியைப் பிடித்துக்கொண்டு, வலக்கையில் உள்ள வாளால் தலையை அறுத்துக் கொண்டிருக்கிறார். வலது முழங்காலை நிலத்தில் ஊன்றி, இடது காலை அர்த்த ஆசனத்தில் நிறுத்தி, அமர்நிலையில் உள்ள இவ்வீரரின் செயல் பிரமிக்க வைக்கிறது. தலைப்பலிக் கொடுக்கும் போது முகத்தில் சாந்தம் தவழ பொலிவுடன் விளங்குகிறார். அரையாடை அணிந்துள்ள இவ்வீரர் கழுத்தணிகளும், கைகளில் காப்புகளும், கால்களில் வீரக்கழல்களும் பெற்றுள்ளார். இடதுபுறம் அமைந்துள்ள நவகண்ட வீரர் தலைப்பலிக் கொடுக்கத் தயாராக தனது குறுவாளை உறையிலிருந்து உருவுகிறார். முன்னவரைப் போன்றே அரையாடையும், தோற்றப் பொலிவும் பெற்று விளங்குகிறார். நீள்காதுகளில் மகரகுண்டலம், கழுத்தில் முத்தாலான அணியும் கைகளில் வீரக்காப்புகளும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார். வீரரின் பின்புறம் நீண்டவாள் தெரிகிறது. அமர்வுநிலையும் வலப்புற வீரரைப் போன்றே அமைந்துள்ளது.அன்னை நின்றுள்ள தேவகோட்டத்தின் மேலே அமைக்கப்பட்டுள்ள மகரதோரணத்தின் மேல் முகப்பில் பெண் கணம் ஒன்றும், கீழே உள்ள முகப்பில் உமாமகேசுவரரும் உள்ளனர். பீடத்தின் மேல் அமர்ந்துள்ள உமாபதியின் இருபுறமும் வணங்கிய நிலையில் இருஉருவங்கள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
மகிஷாசுரமர்த்தினி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்