அகழாய்வு
சானூர்
சானூர்
அகழாய்விடத்தின் பெயர் | சானூர் |
---|---|
ஊர் | சானூர் |
வட்டம் | மதுராந்தம் |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1950, 1952 |
அகழாய்வு தொல்பொருட்கள் | கறுப்பு – சிவப்பு வகையைச் சேர்ந்த தட்டு, கிண்ணம் மற்றும் சிவப்புநிற மட்கலன்கள், இரும்பினாலான தாங்கி, அரிவாள், கத்தி, அம்பு முனை, ஈட்டி முனை, தூண்டில் ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்டன. உருண்டை வடிவகல், எலும்புகள் இரண்டு மண்டை ஓடுகள், இரும்பினாலான உளிகள் மூன்றும் கறுப்பு சிவப்பு மட்கலன்கள் சிவப்பு மட்கலன்கள், இரும்பினாலான ஈட்டிமுனை, அம்புமுனை, குறுவாள், குதிரையின் இலாடம், கத்தி, சுரண்டி, நீண்ட கத்தி, உளி, கிண்ணங்கள், குடுவைகள், பானைகள், கூம்பு வடிவ ஜாடிகள், தாங்கிகள், அரிய கல்மணிகள், சங்குப் பொருட்கள், சுடுமண்ணாலான மணிகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | மத்தியத் தொல்லியல் துறை |
விளக்கம்
முதலாவது ஈமச்சின்னம்: பெருங்கற்கால முதல் ஈமச்சின்னம் கல்திட்டை வகையைச் சார்ந்தது. இது 33 அடி விட்டமும் தரையிலிருந்து 4 அடி உயரமும் கொண்டது. முழுவதும் கற்குவியலால் மறைக்கப்பட்டு ஏழு பெரிய கற்களால் பெட்டி போன்று மண்ணுக்கடியில் அமைக்கப்பட்ட 9 அடி நீளமும் 51/2 அடி அகலமும் கொண்ட கல்லறை ஒன்று கிழக்கு மேற்காக அமைக்கப்பட்டுள்ளது. தரைமட்டத்திலிருந்துசுமார் 3 அடி ஆழத்திலேயே இப்பெட்டி இருந்தது. இக்குழியில் சுமார் 4 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட ஐந்து பேழைகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வைந்தும் மூடிகளுடனும் அடிப்பகுதி கால்களுடனும் வெவ்வேறு அளவுகளைப் பெற்றிருந்தன. இக்குழியின் மேல்மட்டத்தில் 50 மட்கலன்கள் கிடைத்தன. கிண்ணங்கள் நீண்ட கழுத்துடைய பானைகள், தாங்கிகள், மூடிகள் அகன்ற வாய் உடைய மட்பாண்டங்கள் ஆகியன இக்குழியில் மிகுதியாகக் கிடைத்தன. இரும்பினாலான குறுவாள், வாள் ஆகியவும் இங்கு கிடைத்தன. அகழாய்வுக்குழி – 2: இரண்டாவது ஈமச்சின்னமும் கல்திட்டை வகையைச் சார்ந்ததே. 45 அடி விட்டம் உடைய இந்த கல்வட்டம் களிமண், கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. இக்கல்லறையில் மூன்று பேழைகள் இருந்தன. இவைகளைச் சுற்றி 25 மட்பாண்டங்கள் ஈமப்பொருளாக வைக்கப்பட்டிருந்தன. மட்பாண்டங்களுள் மூன்று கால்களுடன் கூடிய ஜாடியும் கறுப்பு – சிவப்பு வகையைச் சேர்ந்த தட்டு, கிண்ணம் மற்றும் சிவப்புநிற மட்கலன்களும் குறிப்பிடத்தக்கவை. மேலும் இரும்பினாலான தாங்கி, அரிவாள், கத்தி, அம்பு முனை, ஈட்டி முனை, தூண்டில் ஆகியவை இங்கு கண்டெடுக்கப்பட்டன. உருண்டை வடிவகல், எலும்புகள் இரண்டு மண்டை ஓடுகள் பேழையின் உட்பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. எலும்புகள் பேழையின் உட்பகுதி, வெளிப்பகுதி, மூன்று கால்களை கொண்ட ஜாடியின் உள்ளும் காணப்பட்டன. பேழைகளுள் ஒன்றின் வெளி விளிம்பில் சங்கிலித் தொடர் போன்ற வேலைப்பாடு பேழையைச் சுற்றிலும் காணப்பட்டது. இரண்டாவது பேழையில் எலும்புக்கூடுகள் இல்லை. 5 அடி நீளமுள்ள இரும்பு ஈட்டி ஒன்றும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது பேழையில் 15 கால்கள் மூன்று வரிசைகளில் தாங்கிகளாக அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பேழைக்கு மூடி இல்லை. இதன் அடிப்பக்கம் இரண்டு துளைகள் காணப்பட்டன. அலங்காரக்கோடுகள் பேழையைச் சுற்றி இலாட வடிவில் காணப்பட்டன. ஈமச்சின்னம் – 3: மூன்றாவது ஈமச்சின்னமும் கல்திட்டைவகையைச் சார்ந்ததே 18 அடி விட்டமுடைய கல்வட்டத்தை மேற்பரப்பில் பெற்றிருந்த இக்கல்திட்டை 6 பெரிய கருங்கற் பலகைகளால் பெட்டி போன்று அமைக்கப்பட்டு அதன் மேல்மூடிக்கல் (Capstone) ஒன்றையும் பெற்றிருந்தது. இக்கல்லறையின் உள்ளே சிதைந்த நிலையில் பேழை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கிழக்கு மேற்காக வைக்கப்பட்டிருந்த இப்பேழையின் மீது மூடி ஒன்றும் காணப்பட்டது. பேழையின் அடியிலும் மூடியின் மேலும் முறையே மூன்று துளைகள் காணப்பட்டன. இந்த ஈமச்சின்னத்தில் 42 மட்கலன்கள் ஈமப்பொருள்களாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை கிண்ணங்கள், குடுவைகள், பானைகள், கூம்பு வடிவ ஜாடிகள், தாங்கிகள் போன்றவையாகும். இக்குழியில் 3 கால்களுடன் கூடிய ஜாடி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. ஈமச்சின்னம் – 4: கற்குவியல் வகையைச் சேர்ந்த இச்சின்னம் 23 அடி விட்டமுள்ள கல்வட்டத்தை மேற்பரப்பில் கொண்டிருந்தது. இக்குழியில் கால்களுடன் கூடிய பேழை ஒன்று காணப்பட்டது. இதனுள் எலும்புகள் எவையும் வைக்கப்படவில்லை . இரும்பினாலான உளிகள் மூன்றும் கறுப்பு சிவப்பு மட்கலன்கள் சிவப்பு மட்கலன்கள் ஆகியவையும் இங்கு கிடைத்தன. ஈமச்சின்னம் – 5: கற்குவியல் வகையைச் சார்ந்த இச்சின்னத்தின் மேற்பரப்பு மேடாக காணப்பட்டது. கல்வட்டத்தின் விட்டம் 50 அடியாகும். இந்த ஈமச்சின்னத்தை அகழ்ந்த பொழுது கற்பதுக்கையோ பேழையோ காணப்படவில்லை. மாறாக மனித மற்றும் விலங்கினத்தின் எலும்புகளும் மண்டைஓடுகளும் 70க்கும் மேற்பட்ட மட்கலன்களும் கிடைத்தன. மட்கலன்களில் ஜாடிகள், சிறிய பானைகள், தாங்கிகள், போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. இவற்றுடன் இரும்பினாலான ஈட்டிமுனை, அம்புமுனை, குறுவாள், குதிரையின் இலாடம், கத்தி, சுரண்டி, நீண்டகத்தி, உளி ஆகியனவும் சங்கினாலானப் பொருள்களும் கிடைத்தன. சானூர் அகழாய்வில் கிடைத்த மட்கலன்கள் யாவும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்டவை. நன்றாகச் சுடப்பட்டு பளபளப்பான மெருகூட்டப்பட்ட இம்மட்கலன்களில் சிறிய கிண்ணங்களே பெருமளவில் கிடைத்தன. இவற்றுடன் கூம்பு வடிவ மட்கலன்களும் மூடிகளும் கால்களுடன் கூடிய பாத்திரங்களும் இங்கு கிடைத்துள்ளன. சில மட்பாண்டங்களில் கீறல் குறியீடுகள் காணப்பட்டன. இங்கு வாழ்ந்த மக்கள் வேட்டையாடுதலை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர். மேலும் சுடுமண்ணாலான மணிகளையும், அரிய கல்மணிகளையும் சங்குப் பொருள்களையும் பயன்படுத்தி உள்ளனர். கருங்கல்லினாலான உலக்கை உரல் ஆகியவற்றை தானியங்களை இடிக்கப் பயன்படுத்தி உள்ளனர். விலங்கின எலும்புகள் இங்கு கிடைத்ததிலிருந்து சானூரில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளனர் என அறியமுடிகிறது. இவர்கள் குதிரையின் பயனையும் அறிந்திருந்தனர். இங்கு மக்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்துள்ளனர் என்பது இங்கு கிடைத்துள்ள அகழ்வுப் பொருள்களின் அடிப்படையில் தெரியவருகிறது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மத்தியத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | மத்தியத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் சென்னை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 72 கி.மீ. தொலைவில், சானூர் அமைந்துள்ளது. இவ்வூரின் 45 ஏக்கர் பரப்பளவில் இருமலைகளுக்கு இடையில் மேட்டுப்பகுதியில் பெருங்கற்படை ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள பெருங்கற்படை ஈமச்சின்னங்கள் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட அளவில் தமிழகத்திலேயே மிகப்பெரிய நிலப்பரப்பில் காணப்படுகிறது. சானூரின் மேற்கில் அடர்ந்த மரங்களும் சிறியகாடுகளும் வடகிழக்கில் பெரியஏரி ஒன்றும் உள்ளன. இப்பெருங்கற்படை ஈமச்சின்னங்களை 1950 மற்றும் 1952 ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறையின் சென்னைப்பிரிவனர் N.R. பானர்ஜி, K.V. சௌந்திரராஜன் ஆகியோர் தலைமையில் அகழாய்வுகளை மேற்கொண்டனர். இங்குக் கற்குவியல் (Cairm circle) கல்திட்டை (Dolmenoid cist) என்ற இரண்டு வகையான பெருங்கற்படை ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த ஈமச்சின்னங்களைச் சுற்றிப் பெரிய கருங்கற்களினால் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வட்டங்களின் விட்டம் 18 அடியிலிருந்து 50 அடிவரையில் வேறுபட்டு காணப்பட்டன. வெவ்வெறு பெருங்கற்படை ஈமச்சின்னங்களின் அமைப்பினையும் மற்றும் அவை என்னென்ன ஈமப்பொருள்களைக் கொண்டுள்ளன என்பதனையும் அறிய சானூரில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 300க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் 5 பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அகழாய்வு செய்யப்பட்டன. இவ்வைந்து ஈமச்சின்னங்களில் மூன்று கல்திட்டை வகையையும் இரண்டு கற்குவியல் வகையையும் சேர்ந்தவை.
|
அகழாய்வு
சானூர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 38 |
பிடித்தவை | 0 |