அகழாய்வு
சித்தன்னவாசல்
சித்தன்னவாசல்
அகழாய்விடத்தின் பெயர் | சித்தன்னவாசல் |
---|---|
ஊர் | சித்தன்னவாசல் |
வட்டம் | குளத்தூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1934-35, 1975-76 |
அகழாய்வு தொல்பொருட்கள் | கற்திட்டை, குத்துக்கல், நெடுங்கல், முதுமக்கள் தாழிகள் |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
விளக்கம்
சித்தன்னவாசல் அகழாய்வின் மூலம் இப்பகுதியில் பெருங்கற்காலப் பண்பாடு கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை நிலவியது எனலாம். சித்தன்னவாசல் பெருங்கற்காலச் சின்னங்கள் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிலங்குகிறது. இங்குள்ள கல்லறைகளில் தாழிகள் காணப்படுவது, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அரிதாகவே உள்ளது. முதுமக்கள் தாழிகளின் உள்ளே ஈமச்சின்னங்களாக சிறிய மட்கலன்கள் காணப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவை பொதுவாகத் தாழியினை சுற்றியே பிறபகுதிகளில் கிடைத்துள்ளன. வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்களும் சித்தன்னவாசலில் கிடைத்துள்ளன. சித்தன்னவாசல் அகழாய்வில் ஈமச்சின்னங்களின் உள்ளே மனித எலும்புகள் கிடைக்காமையும் சிறப்பானதாகும். கற்பதுக்கை வகையைச் சார்ந்த இச்சின்னம் செவ்வக வடிவில் பல அளவுகளுடன் கூடிய கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. இச்சின்னத்தின் தென்மேற்குப் பகுதியில் குத்துக்கல் (Menhir) ஒன்று நடப்பட்டிருந்தது. வடமேற்கில் சிறிய வழி போன்ற அமைப்பும் கருங்கற்பலகைகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. பெட்டி போன்று காணப்பட்ட இச்சின்னத்தின் அளவு 7.73 6.4 மீ. ஆகும். இதனை அகழ்ந்த பொழுது பலவகை மட்கலன்கள், கிண்ணங்கள், தாங்கிகள் போன்றவற்றுடன் எலும்புகளும் இரும்புப்பொருள்களும் கிடைத்தன. இச்சின்னம் சித்தன்னவாசல் குடைவரைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. கல்வட்ட வகையான இச்சின்னம் காலவெள்ளத்தால் அழிந்து காணப்பட்டது. கல்வட்டத்தின் விட்டம் 2.65 மீ. கற்குவியல்கள் சிதைந்துள்ளமையால் இவ்வட்டத்தின் நடுவில் கல்திட்டையின் மூடிக்கல் வெளியில் காணப்பட்டது. இக்கல் 1.4 மீ x 1.8 மீ. அளவினை உடையது. அகழாய்வின் மூலம் இக்கல்லினை நீக்கிய பின் நீள்சதுர வடிவில் புதைகுழி ஒன்று காணப்பட்டது. இதனுள் ஈமத்தாழியுடன் கறுப்பு சிவப்பு மட்கல மூடி ஒன்றும் காணப்பட்டது. இவை இரண்டும் சிதைந்தே காணப்பட்டன. முதுமக்கள் தாழியின் உள்ளே பெருங்கற்கால மட்கலன்கள் உடைந்த நிலையில் காணப்பட்டன. சித்தன்னவாசல் குடைவரைச் சாலையின் கிழக்குப்பகுதியில் மற்றொரு சின்னம் அமைந்துள்ளது. இது கல்லறை (cist) வகையைச் சார்ந்த ஈமச்சின்னமாகும். இதன் மேல் கற்குவியல்கள் பரவிக்கிடந்தன. இதனைச் சுற்றிலும் கல்வட்டங்கள் அமைந்திருந்தன. இவ்வட்டத்தின் விட்டம் 4.20 மீ. அகழாய்வின் மூலம் கல்லறைப் பகுதி ஆய்வு செய்யப்பட்டது. கல்லறையின் கிழக்குப் பகுதியில் சிறிய வழி ஒன்றும் கருங்கற் பலகைகளைக் கொண்டு பெட்டி போன்று அமைக்கப்பட்ட இக்கல்லறையின் கிழக்கில் இடுதுளை (Port hole) காணப்பட்டது. இரு அறைகளாகத் தடுக்கப்பட்ட இக்கல்லறையின் உள்அளவு 1.30 மீ X 1.36 மீ. ஆகும். இதில் இரண்டு முதுமக்கள் தாழிகளும் காணப்பட்டன. தாழி ஒன்றில் சிதைந்த நிலையில் கத்தி ஒன்று இருந்தது. முதுமக்கள் தாழிகள் இரண்டும் கறுப்பு சிவப்பு மட்கலத்தால் ஆன மூடியைப் பெற்றுத் திகழ்ந்தன. முதுமக்கள் தாழிகளுடன் இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த மட்கலன்கள் பல கிடைத்தன. இவ்வகழாய்வுக் குழியில் இரும்பினாலான நீண்ட கத்தியும், குறுவாள், அரிவாள் போன்றவைகளும் கிடைத்தன. மற்றொரு பெருங்கற்கால ஈமச்சின்னம் செங்குளம் பகுதியில் அமைந்திருந்தது. கல்வட்டங்களுடன் காணப்பட்ட இச்சின்னம் கல்லறை வகையாகும். கல்வட்டத்தின் விட்டம் 6.50 மீ. ஆகும். இக்கல்லறை வட்டத்தின் நடுவில் அமைந்திருந்தது. கல்லறை வடக்கு தெற்கு என இருபிரிவுகளாக ஒரு கற்பலகைக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது. தென்பகுதியில் இரண்டு இடுதுளைகள் கல்லின் மேலும் கீழுமாக காணப்பட்டன. கீழ் இடுதுளை அரைவட்ட வடிவமும் மேல் இடுதுளை வட்டவடிவமும் கொண்டிருந்தன. இக்கல்லறையின் உள்ளே கறுப்பு சிவப்பு, கறுப்பு, சிவப்பு மட்கல வகைகள் கிடைத்தன. இவற்றுடன் இரும்புப் பொருள்களும் காணப்பட்டன. இரும்புப் பொருள்களில் குறுவாள், அம்புமுனை, பெரியகத்தி, வளையம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். புதுக்கோட்டை அன்னவாசல் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. சித்தன்னவாசல் தொன்மையான நாகரீகத்தைக் கொண்டிருந்தது. இங்குள்ள மலையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் படுக்கைகள் காணப்படுகின்றன. இவற்றுள் 'ஏழடிப்பட்டம்' என்ற இடத்தில் உள்ள தமிழ்-பிராமி கல்வெட்டு புகழ்பெற்ற ஒன்றாகும். அக்காலத்தில் சித்தன்னவாசல் சிறுபோசில் எனக்கூறப்பட்டது என்பதை இக்கல்வெட்டின் மூலம் அறியலாம். ஏழடிப்பட்டத்திலுள்ள சமணப் படுக்கைகளைத் தவிர இங்கு 20-ற்கும் மேற்பட்ட சமணப் படுக்கைகள் மலையில் காணப்படுகின்றன. இவை யாவும் முற்காலத்தில் இங்கு சமணர்கள் பெருமளவில் வசித்திருந்ததை எடுத்தியம்புகின்றன. சித்தன்னவாசலின் மலையின் மேற்குஅடிவாரத்தில் பாண்டியர்கால குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. இவற்றின் சுவர்களிலும் கூரைப்பகுதியிலும் உள்ள ஓவியங்கள் தமிழக ஓவியக்கலைக்கு சிறந்த இக்குடைவரைக் கோயிலும் ஏழடிப்பட்டமும் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் பராமரிப்பில்உள்ளது. இம்மலையைச் சுற்றிலும் பெருங்கற்காலச் சின்னங்கள் பல உள்ளன. இவை கல்திட்டை, கற்குவியல் வகைகளைக் கொண்டிலங்குகின்றன. இப்பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் இராஜு என்பவர் 1934-35 ஆம் ஆண்டில் அகழாய்வுகளை மேற்கொண்டார். இதனை அடுத்து 1975-76-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் வரலாற்று முந்திய பிரிவினர் K.S.இராமச்சந்திரன் தலைமையில் இங்கு மூன்று ஈமச்சின்னங்களையும் ஏற்கெனவே அகழாய்வு நடந்த ஈமச்சின்னம் ஒன்றையும் அகழாய்வு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்கற்காலச் சின்னங்களின் காலத்தை அறியவும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டினை அறியவும் அகழாய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.
|
|
குறிப்புதவிகள்
தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள் [Archaelogical Excavations in Tamilnadu], சு. இராசவேலு, கோ. திருமூர்த்தி, பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
|
அகழாய்வு
சித்தன்னவாசல்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 42 |
பிடித்தவை | 0 |