அகழாய்வு

நெடுங்கூர் நத்தக்காட்டுப்பகுதி
அகழாய்விடத்தின் பெயர் | நெடுங்கூர் நத்தக்காட்டுப்பகுதி |
---|---|
ஊர் | நெடுங்கூர் |
வட்டம் | அரவக்குறிச்சி |
மாவட்டம் | கரூர் |
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் | 1973-74, 1977, 1979 |
அகழாய்வு தொல்பொருட்கள் | முதல் அகழாய்வுக் குழியில் சொரசொரப்பான சிவப்பு வண்ணபானை ஓடுகளும், செம்பழுப்பு பூச்சு பூசப்பட்ட சிவப்பு வண்ண மட்கலத் துண்டுகளும், முழுமையும் கருப்பு வண்ண மட்கலத் துண்டுகளும் கருப்பு சிவப்பு மட்கலத்துண்டுகளும், வண்ணம் தீட்டப்பட்ட சிவப்பு மட்கலத் துண்டுகளும் அலங்கரிக்கப்பட்ட மட்கலத் துண்டுகளும் கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டன. மேலும் அகழாய்வுக் குழியில் நட்சத்திரம் உடுக்கை, முக்கோணக் குறியீடுகள், சூலாயுதம், ஏணி, மலைமுகடு போன்ற குறியீடுகள் பொறித்த மட்பாண்டங்கள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் இரும்புக் கத்தியின் உடைந்த பகுதி, இரும்பு ஆணி, சங்கு வளையல்களின் உடைந்த பகுதி, செம்பு வளையம் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வகழாய்வுக் குழியில் சங்கு வளையல்கள், வடித்தட்டுகள், குறியீடுகளுடன் எழுத்துப் பொறிப்பு காணப்படும் மட்கலத்துண்டு ஒன்றும் தொல்பொருட்களாகச் சேகரிக்கப்பட்டன. இரண்டாவது அகழாய்வுக்குழியில் சொரசொரப்பான சிவப்பு வண்ண பானை ஓடுகளும், செம்பழுப்பு நிறம் பூசப்பட்ட பானை ஓடுகளும், கருப்பு சிவப்பு பானை ஓடுகளும், முழுமையும் கருப்பு வண்ண பானை ஓடுகளும், வண்ணக் கோடுகள் இட்ட பானை ஓடுகளும், அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. மூன்றாவது அகழாய்வுக் குழியில் உடைந்த இரும்பிலான அம்பு, உடைந்த இரும்பினாலான வாள், உடைந்த இரும்பினாலான கத்தி ஆகியவை அதிக எண்ணிக்கையில் (12) கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டன. இவை 15 செ.மீதொடங்கி 30 செ.மீ வரையுள்ள ஆழத்தில் கிடைத்தன. நான்காவது அகழாய்வுக் குழியில் 6 மான் கொம்புகள், குறியீடுகள் பொறித்த மட்கலத் துண்டுகளும், சங்கு வளையல்களும் சேகரிக்கப்பட்டன. விலங்குகளின் எலும்புகள் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்டன. |
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
விளக்கம்
நெடுங்கூரின் வடகிழக்குப்பகுதியில் உள்ள நத்தக்காட்டில் NDR-MEG-1, NDR-1, NDR-2, NDR-3 ஆகிய நான்கு அகழாய்வுக் குழிகளும், இந்நான்கு அகழாய்வுக் குழிகளுக்கு மேற்குப் பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நத்தமேட்டுப் பகுதியில் NDR-4 என்ற அகழாய்வுக் குழியும் அகழ்வுப் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வைந்து அகழாய்வுக் குழிகளிலும் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஐந்து அகழாய்வுக் குழிகளிலும் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு காலக்கணக்கீடு செய்யப்பட்டது. அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையில் நெடுங்கூர் இரண்டு பண்பாட்டுக் காலங்களைக் கொண்டதாகப் பிரிக்கப்படுகின்றது. 1. முதல்பண்பாட்டுக்காலம் (கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை) 2. இரண்டாவதுபண்பாட்டுக்காலம் (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரை) இவ்விரண்டு பண்பாட்டுக் காலங்களின் அடிப்படையில் நெடுங்கூர் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் பகுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுங்கூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் NDR-MEG-1 என்ற அகழாய்வுக்குழி ஈமக்காட்டுப் பகுதியிலுள்ள புதைக்குழியாகும். NDR-MEG-1 அகழாய்வுக் குழியில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.20 மீட்டர் ஆழத்தில் கற்பலகைகளைப் பரப்பி அதன்மீது பலகைக்கற்களைக் கொண்டு நான்கு அறைகள் தடுக்கப்பட்டு மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை கற்பதுக்கை (Transepted cist burial) என்ற வகையைச் சார்ந்தபெருங்கற்கால பண்பாட்டு ஈமச்சின்னமாகும். இக்கற்பதுக்கையில் பிரிக்கப்பட்ட நான்கு அறைகளில் முதன்மைக் கல்லறைகளாக கருதப்படும் மேற்பக்கத்திலுள்ள இரண்டு அறைகளின் கிழக்குப்பக்கச் சுவரில் கிழக்கு நோக்கி வட்டவடிவ இடுதுளைகள் (Port Holes) காணப்படுகின்றன. இடுதுளைகளுக்கு முன் உள்ள அறைகளில் வாள், ஈட்டி, அம்பு, அரிவாள், கத்தி, எலும்புத்துண்டுகள் போன்ற தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இடுதுளைகளின் உள்ளே உள்ள முதன்மைக் கல்லறைகளின் கருப்பு சிவப்பு மட்கலன்களும், சிவப்பு வண்ண மட்கலன்களும், செம்பழுப்பு நிறம் பூசிய சிவப்பு வண்ண மட்கலன்களும், கருப்பு மட்கலன்களும், ஐந்துகால்களையுடையநீள்உருண்டைவடிவ (ஈமப்பேழையும்) ஜாடிகளும் உடைந்த கால்பகுதிகளும் சேகரிக்கப்பட்டன. ஐந்து கால்களையுடைய ஜாடி, செம்பழுப்பு நிறம் பூசப்பட்ட சிவப்பு வண்ணத்தில் காணப்பட்டது. அதன் தோள்பட்டையில் நட்சத்திர குறியீடும் அதனருகில் முக்கோண குறியீடுகளும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நெடுங்கூர் அகழாய்வில் 1. கருப்புசிவப்புநிறஓடுகள் (Black and Red Ware) 2. சிவப்புநிறஓடுகள் (Red Slipped Ware) 3. கருப்புநிறஓடுகள் (Black Slipped Ware) 4. வண்ணம் தீட்டிய சிவப்பு மட்கலத்துண்டுகள் (Russet Coated Ware) உள்ளிட்ட மொத்தம் 24 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களும் கல்லறையிலுள்ள தெற்கு மற்றும் வடக்கு அறையில் வைக்கப்பட்ட தொல்பொருட்களாகும். தெற்கு அறையில் 13 படையல் பொருட்களும் வடக்கு அறையில் 11 தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. நெடுங்கூரில் அகழாய்வு செய்யப்பட்டக் கல்லறையின் தெற்கு மற்றும் வடக்கு அறைகளில் நான்கு கால் ஜாடிகள் பல உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. நெடுங்கூர் கல்லறையில் சுடுமண்ணாலான பெரிய கருப்பு மற்றும் சிவப்புநிற பானைகள், கெண்டிகள், நான்கு கால் ஜாடிகள், பிரிமனைகள், கிண்ணங்கள், மதுக்குடுவை (Cup) மற்றும் சில பானைக் குறியீடுகளுடன் கூடிய பானைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. நெடுங்கூர் அகழாய்வு மூலமாக பொருளாதாரம், பண்பாடு, சமயநெறிகள் ஆகியவை பகுதியில் தொன்மை காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறியமுடிகின்றது. மேலும் தொன்மையான தேசிய பெருவழியில் உள்ள ஊர்கள், கரூர், கொடுமணல், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வு குழிகளில் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகளும் நெடுங்கூரில் கிடைத்த தொல்பொருட்களும் ஒத்துள்ளன. மேற்கண்ட நகரங்களில் வாழ்ந்த மக்கள் நன்கு நாகரிகம் அடைந்த மக்களாகவும், தொழில் துறையிலும், அருகில் உள்ள நாடுகளுடன் வணிகத் தொடர்பும் வைத்துள்ளனர் என்பதனை இப்பகுதியில் நடைபெற்ற அகழாய்வு முடிவு கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி.14-ஆம் நூற்றாண்டு வரை உள்ளது என்பதனை தொல்லியல் சான்றுகள் மூலம் அறியமுடிகின்றது. நெடுங்கூரில் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் கூட்டமாக வாழ்ந்து வேட்டையாடுதல், கால்நடை வளர்த்தல், விவசாயமும் மேற்கொண்டிருந்தனர் எனவும் மற்றும் தொழில் வளர்ச்சியும் பெற்றிருந்தனர் எனவும் அறியமுடிகின்றது. நெடுங்கூர் அகழாய்வில் சிறிய அளவில் கல்மணிகள் கிடைப்பதினால் கல்மணிகள் செய்யும் தொழிலையும் அறிந்திருந்துள்ளனர் என்றும் அகழாய்வு குழிகளில் நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சுடுமண் தக்களிகள் (Spindle Whorls) கிடைப்பதால் நெசவுத் தொழிலையும்அறிந்து வைத்துள்ளனர் என்றும் இரும்பை உருக்கு கசடுகளும் (Iron Slags), இரும்பு பொருட்களும், இரும்பு அம்புமுனைகளும் (Iron arrow head) கிடைப்பதால் இரும்பு தொழிலையும் அறிந்துள்ளனர். சங்கு வளையல் செய்யும் தொழில், சுடுமண் அணிகலன்கள் (Terracotta ornaments) புகைப்பான்கள் (Smoking pipes) கிடைப்பதால் சுடுமண் பொம்மைகள் செய்யும் தொழிலையும் அறிந்து செய்துள்ளனர் எனத்தெரிகின்றது. அமராவதி ஆற்றுநீர் பாசனத்தால் விவசாயமும் செய்துள்ளனர் என்பதனை நெடுங்கூர் அகழாய்வு தொல்லியல் சான்றுகள் மூலம் அறியப்படுகின்றது. நெடுங்கூர் பகுதியில் வாழ்ந்த மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்துள்ளனர். மேலும் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற கல்மணிகள், கண்ணாடி வளையல்கள், சங்கு வளையல்கள் முதலிய அணிகலன்களை அணிந்துள்ளனர்.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நெடுங்கூர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் கரூரிலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் தென்புறம், கரூரிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் நெடுங்கூர் அமைந்துள்ளது. இவ்வூர் சிற்றூராக தற்போது காணப்பட்டாலும் கி.பி. 4 –ஆம் நூற்றாண்டில் சிறப்பு வாய்ந்த பெருநகராக விளங்கியிருக்கக்கூடும். அக்காலக் கட்டத்தில் வாழ்ந்த மக்கள்விட்டுச் சென்ற வரலாற்று எச்சங்கள் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கு மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கல்வட்டங்களும் கற்குவியலுடன் கூடிய கற்பதுக்கைகளும் காணப்படுகின்றன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் அம்மக்களின் வாழ்விடப்பகுதி அமைந்திருந்தமைக்கான தடயங்கள் நத்த மேட்டுப்பகுதியில் காணப்படுகின்றன. இந்நத்தமேட்டில் பளபளப்பான சிவப்பு மட்பாண்ட துண்டுகளும், கறுப்பு சிவப்பு மட்பாண்ட துண்டுகளும், இரும்பு கழிவுகளும், கறுப்பு வண்ண மட்பாண்ட துண்டுகளும் மேற்பரப்பாய்வில் கண்டறியப்பட்டன. கல்வட்டங்கள் காணப்படும் ஈமக்காட்டுப்பகுதி நத்தமேட்டின் வடகிழக்கில் மிக அருகாமையில் அமைந்துள்ளது. ஈமக்காட்டுப் பகுதியில் காணப்படும் கல்வட்டங்களை இவ்வூர் மக்கள் “பாண்டியன்குழி" என்றும் “பாண்டியன்வீடு” என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள கல்வட்டங்கள் பெரியதும் சிறியதுமாக உள்ளன. 99 அடிசுற்றளவும் 25 அடிவிட்டமும் கொண்டவை பெரிய கல்வட்டமாகவும், 45 அடி சுற்றளவும், 12 அடி விட்டமும் கொண்டவை சிறிய கல்வட்டமாகவும் அமைந்துள்ளன. நெடுங்கூரில் பெருங்கற்கால மக்களின் வாழ்விடப்பகுதியும் ஈமக்காட்டுப் பகுதியும் கூடுதலான பரப்பளவுடன் காணப்படுகின்றன. இவ்வூர் மேலைக் கடற்கரையிலிருந்து பாலக்காட்டு கணவாய், சூலூர், காங்கேயம், கருவூர், உறையூர் வழியாக கீழைக்கடற்கரையிலுள்ள காவிரிப்பூம்பட்டினத்திற்கு சென்ற பண்டைய வணிகப் பெருவழியான கொங்கப் பெருவழியில் அமைந்துள்ளது.
|
அகழாய்வு

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 23 |
பிடித்தவை | 0 |