சிற்பம்

வாயிற்காவலர்

வாயிற்காவலர்
சிற்பத்தின் பெயர் வாயிற்காவலர்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
இறைவன் குடி கொண்டுள்ள கருவறையின் வாயிலில் காவல் புரியும் துவாரபாலகர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
துவாரபாலகர் படிமம் திருக்கோயில்களில் கோபுர நுழைவாயிலிலும், கருவறை நுழைவாயிலிலும் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய காவல் தெய்வம் ஆகும். ‘துவாரா’ என்ற சொல் வாயிலைக் குறித்திடும் வடமொழிச் சொல்லாகும். இவ்வுருவம் கோபுரத்தின் மையப்பகுதியில் உள்ள சால சிகரங்களின் (கட்ட்டக்கலைக்கூறு) இருபுறங்களிலும் காணப்படும். துவாரபாலகர்கள் படிமங்களின் கலை அமைதி என்பது மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். இதன் அச்சம் தரும் உருவத்தோற்றம், அச்சம் தரும் வட்ட விழிகள், தந்த பற்கள், கைகளில் ஏந்திய ஆயுதங்கள் போன்றவை இதன் பொதுவான கலை அமைதி ஆகும். இப்படிமம் அமைந்துள்ள கோயில்களுக்கு ஏற்ப இதன் தோற்றங்கள் மாறுதல்களுடன் காணக்கூடிய ஒன்றாகும். வரலாற்றுப் பின்னணியில் துவாரபாலகர்கள் படிமம் என்பது புத்தமத குடைவரைகளிலிருந்து தோற்றம் பெற்றது. குறிப்பாக கி.மு இரண்டு அல்லது கி.மு முதலாம் நூற்றாண்டில் ‘பித்தல் கோரா’ என்ற புத்தமதக் குடைவரையில் அலங்கரிக்கப்பட்ட தோற்ற அமைதியுடன் துவாரபாலகர் படிமம் காணப்படுகிறது. தொன்மப் பின்னணிகள், துவாரபாலகர் தோற்றத்திற்கு வேறு சில காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக சில துவாரபாலகர்களின் படிமங்களில் காணப்படும். கொம்புகளின் அமைப்பு ‘கோண்டா’ மற்றும் ‘நாகர்கள்’ என்ற தொன்ம குடிகளிடமிருந்து பெறப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல்லவர்களின் தொடக்கக்காலக் குடைவரையான மண்டகப்பட்டில் அமைந்துள்ள துவாரபாலகர்களின் படிமம் பல்லவப் போர்ப் படையிலிருந்த மல்லர்கள் என்போரின் வடிவங்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது போன்று தொன்மம் மற்றும் பண்பாட்டு பின்னணியில் காணப்படும் துவாரபாலகர் படிமங்கள் தல புராணத்தின் பின்னணியில் வைக்கப்பட்டன. தேவாலய வாஸ்து விதிமுறைகள், துவாரபாலகர் படிமங்கள் தொடர்பான செய்திகளை விளக்கியுள்ளது. திருக்கோயில்களில் காவல் தெய்வமாகத் திகழும் இப்படிமங்கள் பல்வேறு புராணக் கதைகள், பண்பாட்டுப் பின்புலங்களைப் பெற்று கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரையிலும் குடவறை மற்றும் கோயில்களின் நுழைவாயில்களில் அனைவரையும் வியப்படையச் செய்யும் வினோத உருவங்களாகக் காட்சி அளிக்கின்றன. சிவாலயங்களில் உள்ள துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் பேரளவினதான, வியக்கத்தக்க தோற்ற அமைப்பை உடையவர்கள். மேரு மலைக்கு நிகராக விளங்கும் தக்ஷிணமேருவான பெருவுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெரு உடையாரின் கருவறைக் காக்கும் பணியை மேற்கொண்டுள்ள துவாரபாலகரும் அத்தகைய பெரிய தோற்றத்தினைப் பெற்றுள்ளது சிறப்புடையதாகும். வலது காலை ஊன்றி, இடது காலை குறுக்காக வளைத்து காலடியில் அமர்ந்துள்ள சிம்மத்தின் தலை மீது வைத்துள்ளார். இப்பெரும் வீரர் நான்கு கைகள் கொண்டுள்ளார். பின்னிரு கைகளில் வலதில் போற்றி முத்திரையும், இடதில வியப்பு முத்திரையும் காட்டுகிறார். வலது முன் கையில் மழுவினைக் கொண்டுள்ளார். இடது கையை மார்புக்கு குறுக்காக நீட்டி நிலத்தில் ஊன்றி வைக்கப்பட்டுள்ள உயரமான தண்டாயுத்தின் மேல் வைத்துள்ளார். இடைக்கட்டுடன் கூடிய அரையாடை அணிந்துள்ள வாயிற்காவலர் பூரிம முகப்புடைய கரண்ட மகுடம் தரித்துள்ளார். சடைக் கற்றைகள் பின்புறம் பரந்து விரிந்துள்ளன. நெற்றிப்பட்டை அணி செய்ய, நெற்றியில் சிவனாரைப் போலவே கண் விளங்க, காதுகளில் விருத்த குண்டலங்கள் அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளி அணி செய்கிறது. தோள்களில தோள்மாலை உள்ளது. கைகளில் பூரிமத்துடன் கூடிய தோள்வளை, முழங்கையில் அணியக்கூடிய கடக வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். கால்களில் பாதகடகம் எனப்படும் பாடகமும், பாதங்களில் காற்சதங்கைகளும் அணி செய்கின்றன. உருட்டிய விழிகளும், நெரித்த புருவங்களும், வெளியில் நீட்டிய கோரைப் பற்களுமாய் இறையின் காவலர் அமைந்திருந்தாலும் எழில் மிகு தோற்றம் கவரவே செய்கின்றது.
குறிப்புதவிகள்
வாயிற்காவலர்
சிற்பம்

வாயிற்காவலர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்