சிற்பம்
தவ்வை, ஜேஷ்டா தேவி
சிற்பத்தின் பெயர் தவ்வை, ஜேஷ்டா தேவி
சிற்பத்தின்அமைவிடம் தமிழகத்தின் பரவலான ஊர்கள்
ஊர் தமிழகத்தின் பரவலான ஊர்கள்
வட்டம் தமிழகத்தின் பரவலான ஊர்கள்
மாவட்டம் தமிழகத்தின் பரவலான ஊர்கள்
அமைவிடத்தின் பெயர் கோயில், திறந்தவெளி, அருங்காட்சியகங்கள்
சிற்பத்தின் வகை தாய்த்தெய்வம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.6-10-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          தவ்வை, ஜேஷ்டா, சேட்டா, சேட்டை, மாமுகடி, முகடி, மோடி, மூத்ததேவி, பழையோள், காக்கைக் கொடியோள், மூத்தோள் என்று பல பெயர்களால் அழைக்கப்பெறும் தாய்த் தெய்வமான தவ்வை தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை  உடைய பெண் தெய்வம் ஆவாள்.

          தமிழகத்தில் பரவலாக இந்த தேவியின் சிற்பங்கள் பெரும்பாலும் ஊர்களின் நீர்நிலைகளிலும், கோயில்களுக்கு வெளியிலும், சிறு தெய்வக் கோயிலாகவும், ஏழு கன்னிமார்களில் ஒருவராகவும் இன்று காணக் கிடைக்கின்றன.

          பழையோளாகிய தவ்வை வேளாண்மை, மகப்பேறு, செல்வம் முதலிய வளமைக்காக வணங்கப்பட்டு வந்த நீர்நிலைக் கடவுளாக தமிழ்ப் பண்பாட்டில் வணங்கப்பட்டு வந்தது. தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

         தவ்வை தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். கழுதை வாகனம், காக்கைக் கொடி, துடைப்பம் முதலியனவும் தேவியின் சிற்ப அமைப்பில் இணைந்துள்ளன.

          தவ்வை வழிபாடு பல்லவர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வேரூன்றியிருந்த மரபாகும். பல்லவர்கள் காலத்தில் குறிப்பாக இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் மூன்று இடங்களில் தவ்வையின் சிற்ப வடிவங்களைக் காணமுடிகின்றது. திருப்பரங்குன்றத்தில் உள்ள  சேட்டை தேவியின் சிற்பம் நக்கன் கொற்றியின் கல்வெட்டுச் சான்றுடன் காணக் கிடைக்கிறது. சோழர்கள் காலத்தில் கோயில் திருச்சுற்றின் தென்மேற்கில் தவ்வையின் சிற்பம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தது.

         இத்தெய்வத்தை வைணவ அடியார்களுள் ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார், செல்வம் அனைத்தையும் அருளும் திருமாலிருக்க, “சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே” எனப் பாடுகிறார். மூத்ததேவி நாளடைவில் மூதேவியாக மருவி, சோம்பல், அழுக்கு, வறுமை இவற்றுக்கான அறிகுறிகளாகக் காட்டப்பட்டு வழிபாட்டிலிருந்து விலக்கப் பெற்றாள்.

         தமிழகம் முழுவதும் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டு வரையிலான தவ்வை சிற்பங்கள் பரவலாகக் கிடைக்கின்றன. விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தவ்வை வழிபாடு மிகுந்திருந்தமை ஆய்வில் தெரிய வருகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சமூக வலைத்தளங்கள்,தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
ஆவண இருப்பிடம் கோயில், திறந்தவெளி, அருங்காட்சியகங்கள்
குறிப்புதவிகள்
தவ்வை, ஜேஷ்டா தேவி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Oct 2017
பார்வைகள் 20
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்