Back
சிற்பம்
நால்வர் பெருமக்கள்
சிற்பத்தின் பெயர் நால்வர் பெருமக்கள்
சிற்பத்தின்அமைவிடம் கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
ஊர் கோயில் தேவராயன்பேட்டை
வட்டம் பாபநாசம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
தேவார மூவரும், திருவாசகத்தாரும் வரிசையாக நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர். சம்பந்தர் கையில் தாளமுடன் குழந்தைப் பருவத்தினராய், முறுவல் பூத்த முகத்துடன் நின்று பாடுகிறார். தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க, செவியில் பெருங்குண்டலங்கள் விளங்க, மார்பணிகளும், கழுத்தணிகளும், காலில் சதங்கையும் அணி செய்கின்றன. அருகில் அப்பர் பெருமான் தொண்டர்க்கு தொண்டராய், உழவாரப் படையை தோளில் தாங்கியவராய் பணிந்தேத்தும் பத்தராய் இரு கை கூப்பி வணங்கிய நிலையில் பாடுகிறார். தலையில் உருத்திராக்க மாலையை அணிந்துள்ளார். எளியராய், நீள்செவிகளுடன், கழுத்தில் உருத்திராக்க மாலை துலங்க நிற்கிறார். அடுத்து வன்தொண்டராய் சுந்தரர் பெயருக்கேற்றாற் போல் எழிலுடன் வணங்கிய நிலையில் நிற்கிறார்.நெற்றியில் முத்துத்தாமங்களுடன் கூடிய நெற்றிப் பட்டை விளங்க, அழகிய தலையணியைக் கொண்டு, கழுத்தில் சரப்பளி, கண்டி ஆகிய அணிகளும், செவிகளில் பத்ரகுண்டலங்களும், கைகளில் முன்வளைகளும், கேயூரமும், கால்களில் தண்டையும், சதங்கையும் விளங்குகின்றன. மணிவாசகர் இடையில் கட்டிய ஆடையுடன், தலையிலும் கழுத்திலும் உருத்திராக்க மாலையணிந்து, வலது கை சின்முத்திரை காட்டிடவும், இடது கையில் திருவாசகச் சுவடிகளை ஏந்தியபடியும் சமபாதத்தில் நிற்கிறார்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் பண்டாரவாடையை அடுத்துள்ள கோயில் தேவராயன்பேட்டை என்னும் ஊரில் மச்சபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. திருச்சேலூர் கோயில் தேவராயன்பேட்டை என்றழைக்கப்படுகின்ற இவ்வூரிலுள்ள இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் கட்டியதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பாடல் பெற்ற தலமான இக்கோயில் சிற்பங்கள் முற்கால சோழர் கலைப்பாணியை தெற்றென விளக்கி நிற்பவை. கோயில் திருச்சுற்றில் வைக்கப்பட்டுள்ள நாயன்மார் நால்வரின் சிற்பங்கள் மிகுந்த எழில் வாய்ந்தவை.
குறிப்புதவிகள்
நால்வர் பெருமக்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்