Back
சிற்பம்

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பத்தின் பெயர் கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பத்தின்அமைவிடம் கொடும்பாளுர் மூவர் கோயில்
ஊர் கொடும்பாளுர்
வட்டம் விராலிமலை
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி
விளக்கம்
உமையஞ்ச ஆனையுரித்த தேவர் யானையின் உடலை உரித்து நிற்கும் வதைக்காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தாருகானவத்து முனிவர்களின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிச்சாண்டவ வடிவினை ஏற்றுச் சென்றார். வனத்தில் பிச்சாண்டவரைக் கண்ட முனிப்பத்தினிகள் கற்புநெறி தவறி அவருடன் சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிச்சாண்டவர் மீது தங்களுடைய தவ வலிமையால் எண்ணற்ற கொடிய உயிர்களையும், பொருட்களையும் ஏவினர். மான், புலி ஆகிய மிருகங்களைத் தொடர்ந்து மதங்கொண்ட யானையை அனுப்பினர். சிவபெருமான் அட்டாமாசித்திகளுள் ஒன்றான அணிமா சக்தியால் மிகவும் சிறியதாக மாறி, யானையின் வயிற்றுக்குள் சென்றார். பின் மாவுருவம் கொண்டு வயிற்றைக் கிழித்து வெளியே வந்தார். யானையின் தோலை தன்னுடைய ஆடையாகப் போர்த்திக் கொண்டார், இந்த வடிவமே கஜாரி. சம்ஹார மூர்த்தங்களுள் ஒன்றாக விளங்கும் இறைவனின் அட்ட வீரட்ட செயல்களில் ஒன்றான ஆனையை உரித்து வதைக்கும் காட்சி. ஆனையை உரிக்கும் இறைவனின் வலிமையை உணர்த்தும் சிற்பமாகவும், உமை வியந்து, அஞ்சிட நிற்பதாகவும் இச்சிற்பம் வடிக்கப்படுவது இயல்பு. இடது காலை ஏகபாதமாக வைத்து, வலது காலை நிலத்தில் ஊன்றி, இடை வரை நேராகவும், உடலின் கீழ்ப்பகுதி பக்கவாட்டாக திரும்பியிருக்குமாறும் யானை உரித்த நிலையில் நிற்கிறார். மகர பூரிமத்துடன் கூடிய தலையணி கொண்டுள்ளார். ஜடாமண்டலம் தலைக்கோலமாய் அமைந்துள்ளது. நெற்றியில் நெற்றிப்பட்டை அணி செய்கிறது. நான்கு திருக்கைகளுடன் ஆனையுரித்த பிரான் விளங்குகிறார். முன்னிரு கைகளால் யானையின் உடலைக் கிழித்து, தோலை விரித்தவாறும், பின் வலது கையில் ஒடித்தக் கொம்பையும், இடது பின் கை எச்சரிக்கும் முத்திரையாகவும் அமைந்துள்ளன. கைகளில் முன்வளை, தோள்வளைகள் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிகள் உள்ளன. வயிற்றில் உதரபந்தம் உள்ளது. முப்புரிநூல் கனமாகக் காட்டப்பட்டுள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்கள் காட்டப்பட்டுள்ளன. அரைப்பட்டிகையுடன் கூடிய இடையாடை தொடை வரை அணிந்துள்ளார். நெரித்த புருவமும் வெருட்டும் விழிகளுமாய் கோபக் கனலாய் ஆனையர் நிற்கிறார். இக்காட்சியைக் கண்டு அஞ்சிய நிலையில் இடுப்பில் குழந்தை முருகனுடன் உமை ஸ்வஸ்திகத்தில் கால்களை வைத்தவாறு உமை தலையை மேல் நோக்கி காண்கிறாள். மார்பில் கச்சையின்றி, இடையாடை நீண்டு உடுத்த நிலையில் அன்னை கழுத்தணி, கையணிகளோடு விளங்குகிறாள்.
குறிப்புதவிகள்
கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)
சிற்பம்

கஜசம்ஹாரமூர்த்தி (கஜாரி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்