ஓவியர் வீரசந்தானம்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | தமிழ்நாடு மற்றூம் பிற இடங்கள் |
| ஓவியர் பெயர் | |
| ஓவியத்தின் பெயர் | ஓவியர் வீரசந்தானம் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | நவீன ஓவியம் |
|
விளக்கம்
ஓவியர் வீரசந்தானம் ஓவியப்பயணம் கும்பகோணத்துக்கருகே மிக குக்கிராமத்தில் வீட்டுக்கு ஒரே மகனாக பிறந்து வளர்ந்தவர். விவசாய குடும்பமாக இருந்தாலும் இவரது தந்தை ஒரு கட்டுமானத் தொழிலாளியாகவே வாழ்க்கையை நகர்த்தி, இவரை படிக்க வைத்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை நிலவியது. அதிகப் பொருளாதார இடர்ப்பாடுகளுடன் வளர்ந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக இருமுறை படிப்பைத் தொடர முடியாமல் நிறுத்திவிட்டு பின் ஆசிரியர் மற்றும் சக நண்பர்களின் உதவியால் ஆறு வருட கால படிப்பை முடித்தார். முதல்வர் கிருஷ்ணா ராவ், ஓவியர் அல்போன்சோ மற்றும் வரதராஜன் போன்றோர் இவரது படிப்புக்கான உதவித் தொகையும், வரைவதற்கான பொருட்களும் வாங்கி கொடுத்து உறுதுணையாய் நின்றனர். கும்பகோணம் ஒரு கோயில்களின் நகரம். கும்பகோணத்தின் எல்லா இடங்களிலும், திருவிழாக்கள் அவ்வப்போது நடந்து கொண்டே இருக்கும். அதை வேடிக்கைப் பார்ப்பதும், வரைந்து பார்ப்பதிலுமாக அவரது ஆரம்ப காலப் பயிற்சி அமைந்திருந்தது. அத்தருணங்களில் பட்டீஸ்வரம், திருமங்கலகுடி, திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சுவரோவியங்களையும், சிற்பங்களையும் வரையப் பயிற்சி எடுத்தார். மேலும் கும்பகோணம் சமய மற்றும் வர்த்தகம் சார்ந்த நகரமாக விளங்கியமையால் இங்கு பெரும் எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் இருந்தனர். அவர்களோடு கல்லூரியில் படிக்கும் காலங்களில் இருந்தே மிக நெருங்கியத் தொடர்பு வைத்திருந்தார்.
இவரது திருமணத்தை சிற்பி தனபால் முன்னின்று நடத்தி வைத்தார். மேலும் சுவரோவியங்கள் மீது இவர் கொண்டுள்ள ஆர்வத்தைக் கண்டு முறையாக சுவரோவியம் வரைந்து பழகுவதற்காக இராஜஸ்தானில் உள்ள பனஸ்தலியில் உள்ள ஓவியப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது ஆரம்ப கால ஓவியங்கள் கோயில்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களாகவே இருந்தன. பின்னர் 1960 களில் ஓவியர் அல்போன்ஸ் அவருடன் தொடர்பு கிடைக்க அவருடன் சேர்ந்து இந்தியக் பாரம்பரியக் கலைகளை உள்வாங்கி நன்கு பயிற்சி எடுத்து பின் அவற்றை நவீன பாணியில் உருவாக்கி வந்தார். அது போல உலகத்தின் உள்ள பிற கலைகளையும், பிக்காசோ, காண்டின்ஸ்கி, ரெம்ராண்ட், டா வின்சி, வின்சண்ட் வாங்கோ போன்ற கலைஞர்களின் படைப்புகளையும் பற்றி நன்கு அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அக்கால கட்டங்களில் சில ஓவியர்கள் தங்கள் மரபுகளை மீண்டும் தேடிக் கண்டறிந்து தங்கள் படைப்புகளை வெளிக்கொணர்ந்தனர். இதற்கு வீரசந்தானமூம் ஒரு முன்னோடியாக இருந்துள்ளார். இது இவரது முன்னோடிகளான பணிக்கர் மற்றும் சிற்பி தனபால் ஆகியோர் படைப்புகளில் இருந்து துவங்குகிறது. அதுபோல மரபு ஓவியங்களுக்குள் எழுத்துக்களையும் இணைத்து வரைவது ஒரு பாணியாக உருவானது. அது இவரது படைப்புகளிலும் பிரதிபலித்தது. இவரது பிற்கால ஓவியங்களில் தாந்தரிகமும், கனவுகளும் பிரதானமாக இருந்தன. இதனை நூற்றுக்கணக்கான தொடர் ஓவியங்களாக வெவ்வேறு வண்ணக் கலவையுடன் வரைந்தார். இவை சமகால அரசியல் மற்றும் சமூக சூழலலின் தாக்கத்தால் உள்வாங்கப்பட்டு உருவானவைகளாகும். அதுபோல ஒரு குறிப்பிட்ட வடிவத்தையோ, கதையையோ தொடர்ந்து வரைபவர் திடீரென்று அதை உடனே நிறுத்தி விட்டு முழுவதும் புதுமையான ஒரு ஓவிய எல்லைக்குள் சென்று விடுவார். குறிப்பிட்ட ஒன்றின் மீது அதீத நாட்டமாய் இருப்பதும் பின் அதை விட்டு விலகி மாற்றுப் பாதையை நோக்கியும் அவரது கலைப்பயணம் அமைந்தது. இவரது படைப்புக்களில் கிராமங்களில் நிகழும் ஏற்றத்தாழ்வுக்கு பாதிக்கப்பட்டவர்களின் சூழலைச் சுட்டிக்காட்டும் விதமான ஓவியங்களும் அதிகம் உண்டு. அவை சில சமயங்களில் நேரடியாகவும், சில சமயங்களில் குறியீடாகவும் காட்டப்படுவதுண்டு. நெசவாளர் சேவை மையத்தில் பணி செய்யும் வாய்ப்பு வந்த பின் தான் வறுமை அவர் வாழ்வில் விலக ஆரம்பித்தது. நிறைவாக வேலை பார்த்த அனுபவத்துடன் விருப்பு பணி ஓய்வு பெற்று பொது வாழ்க்கையில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் இவரது ஆர்வம் தோல் பாவைக்கூத்து, கோயிற்கலைகள் மற்றும் வெவ்வேறு பின்புலங்களில் வாழும் மனிதர்களின் மீது இருந்தது. பெங்களூரில் உள்ள நெசவாளர் சேவை மையத்தில் பணி செய்யும் சமயங்களில் நாட்டுப்புறக் கலைகளின் தாக்கத்தால் அதிக ஓவியங்களை வரைந்தார். தொடர்ந்து தோல்பாவையில் உள்ள உருவங்களை அடிப்படையாகக் கொண்டு சேலை மற்றும் பிற துணிகளில் அச்சு ஓவியங்களை உருவாக்கினார். அதுபோல பழங்குடிகளின் ஓவியங்களையும் தனக்குள் உள்வாங்கி அவற்றை தனது ஓவியப் பாணியில் கொண்டு வந்தார். தோல் பாவைக் கூத்தில் வரையப்பட்ட மரங்கள், பூக்கள், மலர்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கல்பதரு (Tree of Life) எனும் தொடரை வரைய ஆரம்பித்து நூற்றுக்கணக்கான ஓவியங்களை வெவ்வேறு விதமாக உருவாக்கினார். காமதேனு பசுவின் உடம்பில் பெண் தலையும் மயில் வாலும் கொண்டு உருவாக்கப்பட்ட காமதேனு வடிவம் இவரை மிகவும் கவர்ந்தது. அதன் தொடர்ச்சியாக வரைந்த ஓவியங்களில் புலி ஒன்றிற்கு பசு பால் கொடுக்கும் காட்சி. நிஜத்தில் முரண்பட்ட ஒன்று இரு வேறு குணாதிசயங்களைக் கொண்ட இரண்டு பாலூட்டி விலங்குகள் தாயும் சேயும் எனும் ஒரு புள்ளியில் இணைவது சிறப்பு அம்சமாகும். இது கற்பனையின் ஒரு உச்சம். அது போல இவரது படைப்புகளில் யாளி, கண்டபேருண்டா (இரண்டு தலைகள் கொண்ட கழுகு) போன்ற கற்பனை பறவை மற்றும் விலங்குகளின் தாக்கம் அதிகம். இவை விஜய நகர நாயக்கர் காலங்களில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட சிற்பங்களாக உருவாக்கப்பட்ட யாளித் தூண்களில் உள்ள உருவங்களைக் கண்டதன் மூலம் ஏற்பட்ட தாக்கக்களேயாகும். மேலும் இவரது படைப்புகளில் கிராமியப் பின்புலத்தை சித்தரிக்கும் வகையில் மீனவ பெண்கள், பால்கார பெண்கள், பூ விற்கும் பெண்கள், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலி ஆட்டம் ஜல்லிக்கட்டு போன்ற காட்சிகள் பெரிதும் காணப்படும். இவ்வோவியங்கள் அவர் சிறு வயதில் சொந்த கிராமங்களில் நடந்த காட்சிகளின் நினைவிலிருந்து உருவாக்கம் பெற்றவையாகும். இவரது படைப்புக்கள் நிஜத்தில் நடந்த ஒன்றை மனதளவில் உள்வாங்கி அவரது உணர்வுக்கேற்ப படைப்புக்கள் ஒவ்வொன்றையும் அதனதன் இன்றியமையாத தேவைகளின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றன. இவரது பெரும்பாலான பிற்கால ஓவியப் படைப்புக்களில் நெசவுத்துணியில் உள்ள பின்னல்களை அடிப்படையாக கொண்ட வடிவங்களும், வண்ணங்களும் பின்புலமாக காணப்படுவதுண்டு. கதை சொல்லும் முறை இவருடைய ஓவியங்கள் நெடுங்காலம் பயணித்து வரும் இந்திய கதை சொல்லும் மரபை பின்பற்றியுள்ளது. கலைப் படைப்புக்களில் எங்கெல்லாம் உருவங்கள் இருக்கின்றோதோ அவை யாவும் ஒவ்வொரு கதைகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் சில சம்யங்களில் கதையின் சில பகுதிகளை நிரப்பாமல் விட்டுவிடுவார். அதை யூகிக்க பார்வையாளனிடமே விட்டுவிடுவார்
.
தனது படைப்பின் மூலம் மூதாதையர்களின் மரபு அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் தொடர்ந்து அதை சமகால சூழ்நிலையின் பிண்ணனியில் ஓவியங்களாக பதிவு செய்தார். இவர் இந்தியாவிக்கு வெளியே சென்று பிற தேசங்களை காண விரும்பினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குமரன் சில்க்ஸ் அதிபர் திரு. குமரன், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஹாலந்து, சார்ஷா, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கலைக்கூடங்களில் பெரிய ஓவியர்களின் கை வண்ணத்தால் ஆன கலைப்படைப்புக்களைக் காண ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்தப் பயணம் கலை குறித்த புரிதலில் சில புதிய பரிமாணத்தை அவருக்கு ஏற்படுத்தியது. அதன் பின்பு தான் எல்லாவிதமான பாரம்பரியக் கலை மரபுகளையும் படித்துணர வேண்டுமென உணர்ந்தார். இவரது எழுத்துலகம் ஆரம்ப காலங்களிலிருந்து சிறு கவிதைகள் எழுதிக் கொண்டே வந்தார். இவரது ஆரம்ப கால கவிதைகளை ஓவியர்கள் ஆதிமூலம், ஃப்ரெட்ரிக் செல்லப்பா, ராஜேந்திரன் போன்றோர் முன் வாசிப்பதுண்டு. அவை பெரும்பாலும் சமூக அவலங்களையும், பெண்கள் மீதான அதீத ஈர்ப்பை சொல்லும் வண்ணமாகவே இருந்தன. கலை உலகத்திலும் மிசா காலகட்டத்தில் மிக அசாதாரண சூழல் உருவானது இது குறித்து யாரும் கவிதை எழுத வில்லை, எதிர்ப்புக்களை காட்டவில்லை, எதற்கும் சுதந்திரம் இல்லை. இச்சூழல் இவரை பாதிக்க அது முதல் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். மெட்ராஸ் கலை இயக்கம் 1950 களில் ஓவியர் பணிக்கர், தனபால் மற்றும் கிருஷ்ணா ராவ் போன்றோர்களால் உருவாக்கப்பட்டது. ஓவியங்களுக்கு கோடுகள் மிக அவசியம். முழுமையான கோட்டோவியங்கள் தான் வண்ணத்தால் நிறைவு செய்யப்படுகின்றன என்ற இந்திய ஓவிய மரபினை பின் தொடர்ந்து படைப்புக்களை உருவாக்கினார். கலை உருவாக்கம் குறித்து பேசுகையில் “ கலைப்படைப்புக்கள் யாவும் புதிதாக உருவாவது இல்லை அவை ஏற்கனவே இங்கு உருவான ஒன்றின் மறு (இன்னொறு) வடிவமே” என்பது அவரது கருத்து. ஓவியங்கள் குறித்து இவர் கூறுகையில் “நான் என்ன உணர்கின்றேன் என்பதை ஓவியங்களாக வரைகின்றேன். எனது ஓவியங்கள் கலைக்கூடங்களிலும், வெகுசனங்களின் வீடுகளிலும் இருக்க வேண்டும்” என ஆசைப்பட்டவர். மேலும் “மறைந்து கொண்டிருக்கின்ற பாரம்பரியக் கலை வடிவங்களை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். அதுவே நம் முன்னோர்களுக்கும் அக்கலைகளுக்கும் நாம் செய்யும் மரியாதையாகும்“ என்றார். இவர் நெசவாளர் சேவை மையத்தில் பணி புரிந்த போது கோயில்களிலுள்ள சிற்பம் மற்றும் ஓவியங்களை பிளாக் பிரிண்ட் ஆக உருவாக்கினார். இவரது ஆரம்ப கால ஓவியங்களில் மண் சார்ந்த வண்ணங்களை பெரிதும் பயன்படுத்தி வந்தார். பின்பு நவீன வண்ணங்களை மரபுசார் வடிவங்களோடு கையாண்டு வந்தார். கால மாற்றங்களில் வரும் சூழலக்குகேற்று கிடைக்கக்கூடிய பொருட்கள் மூலம் தன் உணர்வினை வெளிப்படுத்தினார். இவரது வீடு ஒரு சிறிய அருங்காட்சியகம் போலf காட்சியளிக்கும். வெறும் ஓவியராக மட்டுமல்லாமல் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து சேகரிகப்பட்ட கைவினைப் பொருட்கள். இவரது ஓவியங்களில் சில சமயங்களில் இந்தக் கலைப்படைப்புகளின் நீட்சியைக் காணமுடிகிறது. அதீதத் தமிழ்ப்பற்றாளர் என அறியப்படும் இவர் தன்னை ஒரு தமிழ் வெறியாளராக காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அதே நேரம் தமிழ் மொழி அழிவுக்கு உள்ளாகுமோ என்ற அச்சம் அவருக்குள் இருந்தது அதன் தொடர்ச்சியாகவே தமிழ் தொடர்பான நிகழ்வுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். உலகமயமாக்கல் நம் பாரம்பரிய அடையாளத்தை முழுமையாக அழித்துவிடும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இருப்பினும் அதை மீறி போராடி வணிக வளாகங்களுக்குள் சிற்ப – ஓவியங்கள் மூலம் நம் மரபு எச்சங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். பெரிய வணிக வளாகங்களில் பாரம்பரிய மரபுக்கூறுகளை நவீன ஓவிய உத்திகள் மற்றும் வண்ணத்துடன் சுவரோவியங்களை வடிவமைத்தார். இந்நிறுவனங்கள் இவரது கருத்து மற்றும் வடிவமைப்புக்கு முழு சுதந்திரம் வழங்கியதால் கொடுக்கப்பட்ட வெளியை முழு நிறைவாய் முடிக்கும் வாய்ப்புப் பெற்றார். இப்படைப்புகள் சென்னை, மதுரை, கும்பகோணம், போன்ற இடங்களில் காணக்கிடைக்கின்றன. இவர் சுவரோவியங்கள் மூலம் மட்டுமே தன் கதையை முழுமையாக பதிவு செய்ய முடியும் என எண்ணிணார் மேலும் பொது மக்கள் தானாகவே கூடும் இடங்களில் காட்சிப்படுத்துதல் மூலம் இவ்வோவியங்களை சாமானியனிடத்தில் கொண்டு செல்ல இயலும் என நம்பினார். நடிகர் பரிமாணம் இவர் கும்பகோணத்தில் படித்திக் கொண்டிருந்த போது புகழ் பெற்ற எழுத்தாளர் சாண்டில்யன் இவரது வீட்டிற்கருகே வாழ்ந்து வந்தார். தொடர்ந்து 1960 களில் இருந்து பல எழுத்தாளர்களோடு தொடர்பு வைத்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த பின் கசடதபற குழுவினைச் சேர்ந்த ஞானக்கூத்தன், வைத்தியநாதன் போன்றவர்களின் நட்பு கிட்டியது. பின்னாள் பல எழுத்தாளர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். குறிப்பாக ஈழத்தில் இருந்து கடுமையான சூழலில் தப்பித்து வரும் படைப்பாளிகளுக்கு வீட்டில் அடைக்கலமும், அன்பும் பரிமாறினார். பின்னாளில் அவர்களுக்கு நெருங்கிய உறவினரானார். சாதாரண நண்பர்களுக்கு உதவி செய்வது எளிதானது வெவ்வேறு அரசியல் சூழலில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க துணிச்சலும் வேண்டும் அது அவரிடம் இருந்தது. 1980 முதல் 1990க்கு இடைப்பட்ட காலங்களில் இடதுசாரி பத்திக்கைகளுக்கும், பிற இதழ்களுக்கும் அட்டைப்படத்தை வடிவமைத்தார். சுந்தரையாவின் வீரத்தெலுங்கானா” புத்தகத்துக்கும் இவர் வடிவமைத்தார். வெவ்வேறு அரசியல் கருத்தாக்கங்களில் பயணிக்கும் எழுத்தாளர்களிடமும் நட்பை பேணினார். திரைப்பட த்துறை கவிஞர் அறிவுமதி மூலமாக ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவொடு நட்பு கிடைத்தப் பின் சந்தியாராகம் படம் மூலம் தமிழ் சினிமாக்குள் நுழைகிறார். இப்படம் அப்போது தேசிய விருதினை வாங்கியது. அதற்கு பின் மத்திய அரசுப் பணியில் இருந்த காரணத்தினால் தொடர்ந்து படத்தில் வாய்ப்பில்லாமல் போய் கடைசி ஐந்து ஆண்டுகள் குறிப்பிடத்தக்க கதை அம்சம் கொண்ட படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்து வந்தார். . சமூக மாற்றத்திற்கு கலையின் பங்கு அவசியம் என்று கருதுபவர். அப்படி ஒரு கலை சமூக மாற்றத்திற்கு பயன் பெறவில்லையெனில் அது தோல்வியடைந்த கலை என்று கருதுகிறார். நவீனக் கலைகள் குறித்து கூறுகையில், “பொது மக்கள் நவீனப் பாணியை புரியாததற்கு போதிய கலைக் கல்வி அறிவும் அதன் புரிதலும் இல்லை, மேலை நாடுகள் போல ஆரம்பக் கல்வியிலிருந்து கலைகள் பயிற்றுவிக்கப் படவேண்டும்“ என்பது அவருடைய கருத்து. இவர் 1990 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதியிடம் சிறந்த ஓவியருக்கான விருதினைப் பெற்றார். பண்பாட்டின் வேர்களைத் தேடுவதிலும் அதனைப் பாதுகாக்கவும் அவர் தன்னை தயாராக வைத்துக் கொண்டு கடைசிவரை வாழ்ந்தவர். பழமையான கலை மரபுகளுடன் பயணித்து வந்திருப்பினும் தன்னை ஒரு சமகால கலைஞனாகவே உணர்ந்தார். இவரது ஓவியங்களில் மரபுகளை நவீனப்படுத்தும் தன்மை எதார்த்தமாக அமைந்துள்ளது. |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | ஓவியர் கீதா |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | ஓவியர் கீதா |
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
10 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Sep 2017 |
| பார்வைகள் | 248 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 20 |