சிற்பம்
சிவன்
சிற்பத்தின் பெயர் சிவன்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
கண் கொடுத்த கண்ணப்பனை தடுத்த முக்கண்ணனார்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
திருக்காளத்தி மலையில் வேடர் குலத்தில் பிறந்த திண்ணனார் அன்பினால் இறைவனுக்கு கண் அளித்து கண்ணப்ப நாயனார் ஆயினார். பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்பவன் வேடர்குலத் தலைவனாக இருந்து மக்களைக் காத்து வருபவன். தத்தை, அவன் மனைவியாவாள். நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருக்கவே, முருகனை வேண்டி விழா எடுத்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முருகன் அருள் புரிந்தான். அவர்களுக்கு அழகான வலிமை மிக்க ஆண்குழந்தை பிறந்தது. நாகன் அக்குழந்தையைத் தன் கைகளால் தூக்கும்போது திண் என்று இருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டான். திண்ணன் வளர்ந்து குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தான். நாகன் முதுமை காரணமாகத் தன் பதவியினைத் தன் மகனாகிய திண்ணனிடம் தந்து நாடாளும்படி பட்டம் சூட்டினான். இதனைக் கண்டு, தேவராட்டியும் வந்து, நலம் சிறக்க என வாழ்த்திச் சென்றாள். ஒரு நாள் திண்ணன் நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார். வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன். இதனைக் கண்ணுற்ற நாணன். இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா என்றான். மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன. குடுமித் தேவருக்கு, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார். மலையேறிய திண்ணன், குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடினார்; பாடினார். நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப் படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார். வழக்கம் போல, பூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார். அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார். ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார். தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார். கண்ணப்பனின் கையைப் பிடித்து இறைவன் தடுத்த காட்சி இங்கு சிற்பமாக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் தன் இடது முன்கையால் தண்ணப்பனின் இடது கையைப் பற்றித் தடுக்கிறார். கண்ணப்பன் பணிவுடன் முக்தை அண்ணாந்து உயர்ந்து ஓங்கி நிற்கும் சிவபெருமானைக் காண்கிறான். சிவபெருமான் முக்கண்ணராய், ஜடாபந்தம் தலைக்கோலமாய் கொண்டு கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை உடுத்தி, அணிகலன்களைப் பூண்டவராய் விளங்குகிறார். வலது முன் கையை தன் வலத்தொடையில் வைத்துள்ளார். இடது முன் கை கண்ணப்பனின் கரத்தைப் பற்றித் தடுக்கிறது. இடது பின் கையில் மானைப் பற்றியுள்ளார். கண்ணப்பன் மீசை, தாடியுடன் காணப்படுகிறான்.
குறிப்புதவிகள்
சிவன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்