கல்வெட்டு
சித்தன்னவாசல்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சித்தன்னவாசல் |
|---|---|
| ஊர் | சித்தன்னவாசல் |
| வட்டம் | இலுப்பூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் பாண்டியர் கால ஓவியங்களால் புகழ்பெற்ற சித்தன்னவாசல் உள்ளது. இவ்வூர் மலையின் கிழக்குப்புறம் உள்ள குகைத்தளம் ஏழடிபாட்டம் என மக்களால் அழைக்கப்படுகிறது. அங்கு வழவழப்பாகச் செதுக்கப் பெற்ற அகலமான கற்படுக்கையின் பக்கவாட்டிலும் தலைப் பகுதியிலுமாக ஆழமாகவும் செம்மையாகவும் செதுக்கப்பட்ட தமிழ்-பிராமிக் கல்வெட்டுள்ளது. மேலும் 16 கற்படுக்கைகளும் இடைக்காலத் தமிழ்க் கல்வெட்டுகளும் உள்ளன. இன்று வரை சிறப்பான பாதுகாப்போடு உள்ள இக்கல்வெட்டினை 1914ஆம் ஆண்டு மத்தியத் தொல்லியல் துறை தனது கல்வெட்டு ஆண்டறிக்கையில் தெளிவான படத்துடன் வெளியிட்டது. அவ்வாண்டில் கிருஷ்ண சாஸ்திரியும், பின்னர் 1924 இல் கே.வி. சுப்ரமண்ய அய்யரும் 1972இல் திரு ஆர். பன்னீர்செல்வமும் இக்கல்வெட்டினை வாசித்தனர். இருப்பினும் 1991இல் இதன் வாசகம் இறுதி செய்யப்பட்டது. இதன்காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். இதில் இடம்பெறும் எருமி நாடு என்பது எருமைநாடு என்றும், சமஸ்கிருதத்தில் மகிஷ மண்டலம் என்றும் அழைக்கப்பெற்ற கன்னட நாட்டினைக் குறிக்கும். அப்பகுதியில் இருந்த ஊர் குமிழுர், இச்சொல் குமிழ் என்று தேக்கு மர வகையின் அடியாகப் பெயர் பெற்றிருக்கலாம். காவிடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர். ‘கெளடி’ என்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் காவுடி என்று எழுதப்பட்டுள்ளது. இறுதியில் உள்ள 'இ’, பளிஇ, கணிஇ என்ற பிற தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வரும் வகையில் இகர இறுதிச் சொல்லான காவுடி என்பதிலும் எழுதப் பெற்றுள்ளது. தென்கு சிறுபோசில் என்பது தெற்கு சிறுவாயில் என்று பிற்காலத்தில் வழக்கில் இருந்த நாட்டுப் பிரிவின் பண்டைய வடிவம். வாயில் என்ற தமிழ்ச்சொல் ‘ஹொசிலு’ என்று கன்னடப்படுத்தப்பட்டு, அதன் தமிழ் வடிவமான 'போசில்’ என்று இடம்பெறுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன். தென்+கு = தெற்கு என்று எழுதப்படுவதற்கு பதிலாகத் தென்கு என்று அப்படியே புணர்ச்சியின்றி எழுதப்பட்டுள்ளது. இளயர் என்ற சொல் வீரர் பிரிவினரைக் குறிக்கும். இவர்களைத் துளு நாட்டிலிருந்து வந்தவர் என்று மகாதேவன் வழக்கினை ஆதாரமாக்கிக் கூறுகிறார். எனினும் வீரயுகத்தில் போரிலும், ஆளுமையிலும், தலைமை பெறும் முன்னர், இளையர் என்று படிநிலைகளில் பயிற்சி பெற்ற பின்னரே பொறுப்பிற்கு வரும் முறை உலகெங்கிலும் இருந்த முறையாகும். எவ்வாறாயினும் இளயர் என்போர் வீரர் குழுவினர் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை. பிற்காலத்தில் சேவகர் (போர்புரியும்) என்ற சொல் இவர்களைக் குறித்ததை நடுகற் கல்வெட்டுகள் காட்டும். அதிட்அனம் என்பது இருக்கையைக் குறிக்கும். 'அதிட்டானம்' என்று சமஸ்கிருதத்தில் இச்சொல் வழங்கும். அதிட்டானம் என்ற சரியான வடிவம்புகளூர்கல்வெட்டில் இடம்பெறுகிறது. சித்தன்ன வாசல் கல்வெட்டு தனித் தன்மை வாய்ந்தது. இக்கல்வெட்டின் மூலமே, தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இருந்த தொடர்பினை நேரடியாக அறிகிறோம். எருமைநாடு என்ற பெயர் சங்க இலக்கியங்களிலேயே இடம்பெறும் ஒன்றாகும். அடுத்த காவுடி என்ற சொல் சமண மதத்தில் இருந்த பெண்பாற் துறவியைக் குறிக்கிறது. சமண மதத்தில் அவ்வளவு பண்டைக் காலத்திலேயே பெண்குரத்தியர் இருந்ததற்கான முதற் சான்றாக இது அமைகிறது. சிறுபோசில் என்ற சொல்லும் 'சிறுவாயில்’ என்பதன் கன்னட வடிவம் என்றாகும் நிலையில், இக்கல்வெட்டில் இடம்பெறும் கன்னட மொழியின் தாக்கத்தினை முதன் முதலாகக் காட்டும் சான்றாக இது அமைகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 571 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 7 |